ரஜினிகாந்த் எல்லாம் தலைவரா?- தமிழிளைஞர்களைச் சாடும் சீமான்

ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் நினைவெழுச்சி பொதுக்கூட்டத்தில்  சீமான் ஆற்றிய உரையின் சுருக்கம்….

வரலாற்றை மறந்த இனம் வரலாற்றில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. வரலாற்றைப் படிக்காதவன் வரலாற்றைப் படைக்க முடியாது என்கிறார் அம்பேத்கர். என்னை உருவாக்கியது என் வரலாறு என்கிறான் ஹிட்லர்.

நாம் நமக்காக செத்தவர்களின் வரலாற்றையே மறந்தோம். நமக்காக செத்த அப்துல் ரவூப்பை மறந்தோம். நாம் தமிழர்கள் என்பதையே மறந்தோம். நம் மொழியை மறந்தோம். நம் இன அடையாளத்தை மறந்து இந்து மதத்தை தழுவி நிற்கிற தமிழன் சமஸ்கிருதப்பெயரை தாங்கி நிற்கிறான். இசுலாமிய மதத்தை தழுவிய தமிழன் உருதிலும், அரபியிலும் பெயர் வைக்கிறான். கிருத்துவத்தை தழுவி நிற்கிற தமிழன், ஆங்கிலத்தில் பெயரை தாங்கி நிற்கிறான். இந்து மதத்தை ஏற்று நிற்கிற தமிழன், பகவத் கீதையை படிக்கிறான். இசுலாம் மதத்தை ஏற்றிருக்கிற தமிழன், குரானைப் படிக்கிறான். கிருத்துவ மதத்தை ஏற்றிருக்கிற தமிழன் பைபிளைப் படிக்கிறான். அதனால், தமிழர்களின் மறை திருக்குறளை மறந்து போனோம். திருக்குறளில் சொல்லாதது என்ன இருக்கிறது? ஒரு அரசன் எப்படி இருக்க வேண்டும்? ஒரு உழவன் எப்படி உழ வேண்டும்? கணவன், மனைவி எப்படி வாழ வேண்டும்? என்று எல்லாவற்றையும் சொல்கிறது. எல்லாவற்றையும் சந்தேகி என்கிறார் மார்க்சு. ஏன்? எப்படி? என்ற கேள்வியை எதற்கும் கேட்பீர்! என்கிறான் சாக்ரட்டிசு. ஐந்தும் ஐந்தும் பத்து என்றால், எப்படி என்று கேள் என்றார் தந்தை பெரியார். ஆனால், இவர்கள் எல்லோருக்கும் முன்பே, எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்றான் நமது பாட்டன் வள்ளுவன். அப்பேர்பட்ட திருக்குறளின் பெருமையை உத்தரகாண்ட்டைச் சேர்ந்த தருண் விஜய் சொல்லித்தெரிந்துகொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது இந்த இனம். டால்ஸ்டாய் காந்திக்கு கடிதம் எழுதுகிறார். அந்த கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதிய காந்தி, ‘இப்பொதெல்லாம் உங்கள் கடிதத்தில் கருணை, இரக்கம், அன்பு போன்ற வார்த்தைகள் அதிகம் இருக்கிறதே? என்கிறார். அதற்கு டால்ஸ்டாய், நான் திருக்குறளைப் படித்ததுதான் காரணம் என்கிறார். திருக்குறளைப் படிப்பதற்காகவது அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்கிறார் காந்தி. அப்பேர்பட்ட வள்ளுவனுக்கு இங்கு கோட்டை இருக்கிறது; சிலை இருக்கிறது; திருக்குறளைப் படிப்பதற்கு ஒரு கூடாரம் இருக்கிறதா?

திசம்பர் 11 அன்று பாரதியார் பிறந்த நாள்; திசம்பர் 12 அன்று நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள். ஆனால், இந்த இன மக்கள் எதனைக் கொண்டாடினார்கள்? பாரதியின் பிறந்த நாளை ஒரு தொலைக்காட்சி கொண்டாடியதா? கடவுளிடம் எல்லோரும் அறிவைக் கொடு என்று வேண்டினான். ஆனால், பாரதி மட்டும்தான், ‘சொல்லடி சிவசக்தி! சுடர்விடும் அறிவோடு என்னை ஏன் படைத்தோம்?’ என்று பாடினான். அவன்தான் நம் கனகலிங்கம் என்ற பறையருக்கு பூணூலை அணிவித்து, பாரதி அணிவித்தான் என்று சொல் என்று சொன்னான்.

இம்மண்ணில் ரஜினிகாந்த் எல்லாம் தலைவர்; பிரபாகரன் தீவிரவாதி என்றால், இந்த இனம் வாழுமா? திரையில் சண்டை போட்டால் கதாநாயகன்; தரையில் தம் அக்கா தங்கைகளின் மானம் காக்க, இனத்தின் விடுதலைக்காக சண்டை போட்டவன் தீவிரவாதியா? மேலிடம் தலைவர் பிரபாகரன் படத்தை வைத்தால் கைது செய்ய சொல்கிறது என்கிறார்கள். ஒரு நாள் மேலிடம் பிரபாகரன் படத்தை வைக்கவில்லை என்றால், கைது செய் என்று சொல்லும்; அந்த இடத்திற்கு நாங்கள் வருவோம். இன்று ஏழைக்கொரு கல்வி; பணக்காரனுக்கு ஒரு கல்வி என்ற நிலையிலிருக்கிறது. இன்று மதுக்கடைகளை மூட வலியுறுத்தினால், அரசு மூட மறுக்கிறது. வருடத்திற்கு 25,000 கோடி மதுக்கடைகள் மூலம் விற்பனை நடக்கிறது. பொங்கல், தீபாவளி என்றால், இது இன்னும் பல கோடிக்கு விற்பனை நடக்கிறது. காரணம், குடிகாரர்கள் பெருகுகிறார்கள். இவர்கள் பிரபாகரனைத் தீவிரவாதி என்கிறார்கள். பெத்த பிள்ளைகளை இனத்தின் விடுதலைக்காக சாகக்கொடுத்த பிரபாகரன் தீவிரவாதியா? நாடு கட்டப்போராடிய பிரபாகரன், ஒரு கிரவுண்ட் நிலத்தை , தனக்கு சொந்தமாக வைத்திருந்தாரா? வீரப்பன் இங்கு தீவிரவாதி. கேட்டால் பல ஆயிரம் கோடிக்கு யானை தந்தங்களை விற்றான். விற்ற வீரப்பன் காட்டுக்குள் இருந்தான். வாங்கியவன் எங்கு இருந்தான்? நாட்டுக்குள்ளேதானே! அவர்களில் யாரையாவது ஒருவரை கைது செய்திருக்கிறார்களா? வீரப்பன் காவல்துறையை ஏன் சுட்டான்? விசாரணை என்ற பெயரிலே, அக்கா தங்கச்சிகளை வன்புணர்வு செய்து சுட்டுக்கொன்றதால் சுட்டான். பிரபாகரனும், வீரப்பனும் எங்களின் பெருமைமிகு தலைவர்கள்; வழிகாட்டிகள். பிரபாகரன் இங்கு தீவிரவாதி என்றால், ஈழத்தில் வாழ்கிற உறவுகளுக்கு, ராஜீவ் காந்தி மிகப்பெரிய தீவிரவாதி; வெள்ளைக்காரனுக்கு காந்தியே பயங்கரவாதிதான்; காந்திக்கு நேதாசி சுபாசுசந்திரபோசும், பகத்சிங்கும் பயங்கரவாதிதான். உயிரினும் மேலானது எமது உரிமை என உரைத்தார் தலைவர் பிரபாகரன். நாம் உயிரை இழக்கலாம்; ஆனால், உரிமையை இழக்கக்கூடாது. ஏனென்றால், உயிரை இழப்பது தனிப்பட்ட ஒருவருக்கான இழப்பு. ஆனால், உரிமையை இழப்பது தமிழ்த்தேசிய இனத்திற்கான இழப்பு. இதைத்தான், சாகத்துணிந்துவிட்டால் எல்லாம் சாதாரணமாகி விடும் என்கிறார்; மேலும், சாகப்பயந்தவன் தரித்திரம் ஆகிறான்; சாகத்துணிந்தவன் சரித்திரம் ஆகிறான் என்கிறார்.

அமெரிக்க முதலாளித்துவ நாடு என்கிறார்கள். அமெரிக்கா முதலாளித்துவ நாடு என்றால், இந்தியா முதலாளிகளின் நாடு. இங்கு பலமணி நேரம் மின்தடை ஏற்பட்டபோதும் ஒரு முறையாவது பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலையில் மின்வெட்டு ஏற்பட்டதுண்டா? அப்படி ஏற்பட்டால், இழப்பீட்டை மத்திய, மாநில அரசுகளே அந்த நிறுவனத்திற்கு வழங்க வேண்டும். அப்படி ஒப்பந்தம் போட்டுத்தான் பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்குகிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க எல்லா வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கிற அரசுகள், ஒரு ஏழை மூதாட்டி குடிசைத்தொழில் தொடங்க ஆயிரம் வரிகள் விதிக்கிறது. இந்தியாவின் பொருளாதாரமே, சந்தைப்பொருளாதாரம். அந்த சந்தையில் நுகர்கிற மந்தைகள் நாம். எல்லாவற்றையும் ருசித்துப்பார்க்க வேண்டும் என்ற மோகம் இங்கு அதிகமிருக்கிறது. இயற்கையின் கொடையான நொங்கும், இளநீரும் தெருவில்போட்டு விற்பனை செய்யப்படுகிறது. 30 விழுக்காடு நச்சுத்தன்மை கொண்ட கோக்கும், பெப்சியும் உயர்ரக விடுதிகளில் கிடக்கிறது. மக்களின் காசிலே இலவசம் கொடுகிறார்கள். காரணம், ஊழல், இலஞ்சம், சுரண்டலை மறைப்பதற்காக. நவீன இந்தியாவின் சிற்பி மோடி என்றார்கள். காங்கிரசு இந்தியாவை மெதுவாக விற்றது. பாரதீய ஜனதா அதனைவிட வேகமாக விற்கிறது. தொடர்வண்டி,வானூர்தி,பேருந்து,சாலை,கல்வி, மருத்துவம் என எல்லாம் தனியாருக்கு என்றால், அரசு எதற்கு? மக்களுக்கும், பெருமுதலாளிகளுக்கும் இடையே தரகு வேலை பார்ப்பதற்கா? எல்லாம் தனியாருக்கு என்றால், எதற்கு பல்லாயிரம் கோடிகளைக்கொட்டி தேர்தலை நடத்துகிறீர்கள்? இன்று மொழி அழிந்து கொண்டிருக்கிறது. நம் தாய்மொழி தமிழ் சமஸ்கிருதத்தை மென்று, துப்பிய எச்சில்தான் கன்னடமும், தெலுங்கும், கடைசியாக உமிழ்ந்தது மலையாளம். மிகவும் கடைசியாக தோன்றிய மொழி இந்தி, இந்தியாவின் தேசிய மொழி என்றால், எம் தாய் மொழி தமிழுக்கு உரிய மரியாதை? 250 தொகுதிகள் வென்று பெரும்பான்மை ஆட்சியைப் பிடித்தவுடன் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்கிறார்கள் பாரதீய ஜனதாவின் சுஷ்மா சிவராசும், உமாபாரதியும். மத்திய அரசின் உதவி பெறும்பள்ளிகளில் சமசுகிருதத்தை கட்டாயமாக்குகிறார்கள். சமசுகிருதம் படித்தால் யாருக்கு வேலை கிடைக்கும்? ஆரிய பார்ப்பனர்களுக்குத்தானே? ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடனே தங்களது தாய்மொழியை காக்கக்துடிக்கிறார்கள் அவர்கள். அப்படி என்றால், அதே அதிகாரத்திற்கு வந்து எம் தாய்மொழி தமிழை காக்க நாங்கள் எவ்வளவு துடிப்போம்? நாங்கள் கல்யாண மண்டபத்தை இடித்துவிட்டார்கள் என்பதற்காக அரசியலுக்கு வந்தவர்கள் இல்லை. என் நாட்டை இடித்து, இனத்தை அழித்துவிட்டார்கள் என்பதற்காக அரசியலுக்கு வந்தவர்கள். இந்த இனத்தை பிளந்த கூர்ஆயுதம் சாதியும், மதமும். சாதி, மத உணர்ச்சிகளை சாகடிக்காது இந்த இனம் எழாது. நம் இனத்தில் பிறந்த எண்ணற்ற தமிழ் மறவர்கள் தீரன் சின்னமலை,பூலித்தேவன், மாமன்னர் மருதுபாண்டியர், வேலுநாச்சியார், அழகு முத்துக்கோன் உள்ளிட்டவர்கள் சாதியின் அடையாளமாய் மாறிப்போனார்கள். விளைவு, மராத்திய சிவாஜி தமிழ் மண்ணில் வீரத்தின் குறியீடாய் மாறிப்போனான் என்பதை நாம் உணர வேண்டும். நமது வழிபாடு இயற்கை வழிபாடு, நமது மார்க்கம் வள்ளுவம், நமது வேதம் திருக்குறள், நமது தெய்வங்கள் நம் மொழியின், இனத்தின் விடுதலைக்காகப் பாடுபட்ட நம் முன்னவர்கள்;மூத்தவர்கள். இந்த உலகை தீர்மானிப்பது அரசியலும், அறிவியலும். அந்த அறிவியலைக்கூட அரசியல்தான் தீர்மானிக்கிறது. ஆதலால், அந்த அரசியலை தீர்மானிக்க நாம் முன்வர வேண்டும்.

Leave a Response