காவிரிநீர்ச் சிக்கல் – ஓரணியில் திமுக, மதிமுக, நாம்தமிழர்கட்சி


காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரியும் கர்நாடகத்தில் நடக்கும் வன்முறையை கண்டித்தும் நாளை மறுநாள் (16-ந்தேதி) முழுஅடைப்பு போராட்டம் நடத்த போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகளுக்கு விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்து இருந்தன. இதை ஏற்று 16-ந்தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 16-ந்தேதி நடைபெறும் போராட்டத்தில் தி.மு.க.வினர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முழு அடைப்பு போராட்டத்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்குக் காவிரி தண்ணீர் கொடுக்க மறுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அப்பாவி தமிழர்களின் வணிக நிறுவனங்களின் மீதும் வாகனங்கள் மற்றும் அவர்களது உடமைகள் மீதும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு தீக்கிரையாக்கி தாங்கொண்ணா பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் கன்னட வெறியர்களின் வன்முறையைக் கண்டித்துத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வருகின்ற செப்டம்பர் 16 ஆம் தேதி நடத்தும் மாநிலம் தழுவிய முழுக் கடையடைப்புப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தன் முழு ஆதரவையும் வழங்குகிறது. தமிழர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆதரவை வழங்கி போராட்டக்களத்தில் முதலில் நிற்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புக்கு எங்களது புரட்சிகர வாழ்த்துகள்.

– இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழுஅடைப்பு அன்று பெட்ரோல் பங்க்குகளும் மூடப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

அதே நாளில் இதே கோரிக்கைகளுக்காக விஜயகாந்த் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்திருக்கிறார். தொல்.திருமாவளவளவன் அதே நாளில் தொடர்வண்டி மறியல் அறிவித்திருக்கிறார்.

தமிழகத்தை ஆளும் அதிமுக, இந்தியாவை ஆளும் பாஜக இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தவிர மற்ற அனைவரும் ஒருமித்த குரலெழுப்புகின்றனர்.

Leave a Response