
சமீபகாலமாக திருட்டு விசிடியிலும் இணையதளத்தின் மூலமாகவும் திருட்டுத்தனமாக படங்களை பார்ப்பவர்களுக்கு திரையுலகத்தினர் விதவிதமாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.. ஆனால் ஒருத்தரும் கேட்ட பாட்டைத்தான் காணோம்.. அதனால் சமீபத்தில் வெளியான ஜோக்கர் படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் திருட்டு விசிடிக்கு எதிராக தனது எச்சரிக்கையை வித்தியாசமாக பதிவு செய்துள்ளது.
ஜோக்கர்’ படத்தில் தன்னை ஜனாதிபதி என கூறிக்கொண்டு உத்தரவுகளை பிறப்பித்து அதிரடி பண்ணும் கேரக்டரும் அந்த கேரக்டரில் நடித்திருந்த குரு சோமசுந்தரமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளார்கள்.. அதன்படி இந்த ஜோக்கர் படத்தை திருட்டு விசிடியிலோ அல்லது இணையதளத்திலோ தரவிறக்கம் செய்து பார்க்க கூடாது என்றும், அப்படி பார்த்தால் அதற்கான நியாயமான தொகையை படத்தின் தயாரிப்பாளரான ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் செலுத்துமாறும் மன்னர்மன்னனின் உத்தரவை அதில் வேண்டுகோள் பாணியில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இப்படி நீங்கள் அனுப்பும் பணத்தில் கழிப்பறை வசதி இல்லாத அப்பாவி மக்களுக்கு கழிப்பறை கட்டிக்கொடுப்பதற்காக செலவிடப்படும் என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளது.


