டிடிவியின் திடீர் நடவடிக்கை – தமிழக அரசியலில் திடுக்கிடும் திருப்பங்கள்

விஜய் கட்சியினர் பிற கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை பதவி,பணஆசை காட்டி தங்கள் பக்கம் இழுப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் ஆளுநர் அர்லேகரை சந்தித்து புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது….

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள்,அதிகாரத்தைப் பயன்படுத்தி பிறகட்சிகளைவ் சேர்ந்தவர்களுக்கு பதவி மற்றும் பொருளாசை காட்டி தங்கள் பக்கம் இழுப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது.ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். கட்சிகளின் நலனைப் பாதிக்கும் வகையில் நடைபெறும் இந்த குதிரைபேர அரசியலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்காகவே ஆளுநரைச் சந்தித்து புகார் அளித்துள்ளேன்.ஆளுங்கட்சிக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏ.க்கள் திடீரென செயல்படுவது குறித்தும் புகார் அளித்துள்ளேன்.

‘தூய சக்தி’ என்று சொல்லி மக்களை ஏமாற்றி வருபவர்களின் முகத்திரையைக் கிழித்து,அவர்களின் உண்மை சுயரூபத்தை வெளிக்கொண்டு வரவேண்டும்.அதற்காகத்தான் ஆளுநரைச் சந்தித்தேன்.இந்த புகார்மீது நடவடிக்கை எடுப்பதாக ஆளுநரும் தெரிவித்துள்ளார்.சமீபத்தில் தவெகவைச் சேர்ந்த அமைச்சர் செங்கோட்டையன்,மேலும் 10 அதிமுக எம்.எல்.ஏ க்கள் தவெகவில் இணைய உள்ளதாகக் கூறியிருக்கிறார்.இதுபோன்ற பேச்சுகளும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன.எனவே எம்.எல்.ஏ க்களை பதவி,பண ஆசை காட்டி இழுக்கும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமமுக சார்பில் போட்டியிட்டு வென்ற சட்டமன்ற உறுப்பினர்,கட்சியின் உத்தரவை மீறி விஜய் அரசுக்கு ஆதரவளித்தார்.அந்த நேரத்திலேயே அதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் அப்படியே இருக்கின்றன,தேவைப்படும் நேரத்தில் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுப்பேன் என்று சொல்லியிருந்தார் டிடிவி.தினகரன்.

இப்போது அவர் இந்த நடவடிக்கையில் இறங்கியிருப்பதால் தமிழ்நாட்டு அரசியலில் திடுக்கிடும் திருப்பங்கள் நடக்கும் வாய்ப்பிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Response