ஏற்கெனவே ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானங்களின் நிலை என்ன?

நீட் தேர்வு விலக்கு,தீர்மானம் மட்டும் போதுமா?
தமிழ்நாட்டின் மாநில உரிமையை நிலைநாட்டுவதில் தமிழக அரசுக்கு என்ன தயக்கம்? என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

நீட் தேர்வுக்கு எதிராகவும், கல்வி மீதான மாநிலங்களின் உரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தியும் தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வரும் நிலையில்,நீட் தேர்வை இரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வரவேற்கிறது.

குறிப்பாக,இந்தக் கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த 11 நாட்களாக உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திரு.புளியந்தோப்பு மோகன்,திரு.இரவி,திரு.ஜீவா,திரு.தனசேகர் ஆகிய நான்கு தோழர்களின் உறுதியையும்,அர்ப்பணிப்பையும் இத்தருணத்தில் நினைவுகூர வேண்டியது அவசியமாகும்.

இந்த நான்கு தோழர்களின் போராட்டத்தின் இரண்டு மிகமுக்கியமான கோரிக்கைகள்,நீட் தேர்வை இரத்து செய்வதும்,கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவதும் ஆகும்.

களத்தில் எழுப்பப்பட்ட கோரிக்கை இன்று சட்டப்பேரவையின் ஒருமித்தத் தீர்மானமாக உருப்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது.மக்கள் போராட்டத்தில் எழுந்த கோரிக்கை,சட்டப்பேரவையின் அரசியல் முடிவாக மாறியிருப்பது சனநாயகப் போராட்டத்தின் வலிமையை வெளிப்படுத்துகிறது.

ஆனால்,தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு தமிழ்நாட்டின் கடமை முடிந்துவிடவில்லை.உண்மையான அரசியல் நடவடிக்கை இனிமேல்தான் தொடங்க வேண்டும்.

இந்த தீர்மானங்கள் சட்டப்பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அந்தத் தீர்மானம் 2022 பிப்ரவரி 1 அன்று அப்போதைய ஆளுநரால் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.பின்னர், 2022 பிப்ரவரி 8 அன்று சட்டப்பேரவை அந்த தீர்மானத்தை மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றியது.அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

அதன்பிறகும் விவகாரம் முடிவுக்கு வரவில்லை.2024 ஜூன் 28 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி,தமிழ்நாட்டிற்கு நீட்விலக்கு அளிக்கவேண்டும் என்றும்,நிலுவையில் உள்ள நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தியது.

மீண்டும் மீண்டும் சட்டப்பேரவையில் தீர்மானங்களும்,சட்டமன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டும், தமிழ்நாட்டின் கோரிக்கை இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வராத நிலையில்,இன்றைய தீர்மானத்திற்குப் பிறகு தமிழ்நாடு அரசு எத்தகைய அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளப் போகிறது?

நான்கு தோழர்கள் 11 நாட்களாக உண்ணாநிலைப் போராட்டத்தில் முன்வைத்துள்ள இரண்டு முக்கியக் கோரிக்கைகளில் ஒன்று நீட் தேர்வை இரத்து செய்வது.மற்றொன்று கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவது.
எனவே,இது வெறுமனே ஒரு நுழைவுத்தேர்வை எதிர்க்கும் போராட்டமாகக் குறுக்கிப் பார்க்கப்படக்கூடாது.
யார் கல்விக்கொள்கையை வகுக்கவேண்டும்?
யார் தங்கள் மாநில மாணவர்களின் தேவைக்கேற்ப கல்வி முறையைத் தீர்மானிக்கவேண்டும்?
மாநிலங்களின் உரிமையை எவ்வளவு காலம் ஒன்றிய அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கப் போகிறோம்?
என்பதுதான் இந்தப் போராட்டத்தின் அடிப்படைக் கேள்விகள்.

கல்வி என்பது ஒரு மாநிலத்தின் சமூக அமைப்பு,பொருளாதார முன்னேற்றம்,மொழி,பண்பாடு,சமூகநீதி மற்றும் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தோடு பின்னிப் பிணைந்தது.எனவே,கல்வி தொடர்பான முக்கியமான கொள்கை முடிவுகளில் மாநிலங்களுக்கு உரிய அதிகாரம் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலான மாநில உரிமைக் கோரிக்கையாகும்.

எட்டுக்கோடித் தமிழர்களின் பிரதிநிதிகள் ஏகமனதாக முடிவு எடுத்த பிறகும் முடிவு எட்டப்படவில்லை என்றால், மீண்டும் ஒரு தீர்மானத்தோடு நின்றுவிடப் போகிறதா தமிழ்நாடு அரசு?

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதையும், தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு வேண்டும் என்பதையும் ஒன்றிய அரசிடம் அழுத்தமாக வலியுறுத்துவதில் தமிழ்நாடு அரசு ஏன் தயங்குகிறது?
தமிழ்நாட்டின் மாநில உரிமைக்காகக் கேள்வி எழுப்புவதற்கு என்ன தயக்கம்? ஒன்றிய பாஜக அரசைப் பார்த்து அஞ்சுகிறதா?

சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது முதல்படி மட்டுமே.அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு ஒன்றிய அரசு மறுத்தால்,மாநிலத்தின் அரசியல் வலிமையைத் திரட்டி அதற்கெதிரான சனநாயகப் போராட்டத்தைத் தமிழ்நாடு அரசு முன்னெடுக்கவேண்டும்.

எனவே தமிழ்நாடு அரசு,நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு பெறுவதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.
கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசிடம் வலுவான அரசியல் அழுத்தத்தை உருவாக்க வேண்டும்.
இதே மாநிலஉரிமைக் கோரிக்கையை முன்வைக்கும் பிற மாநிலஅரசுகளுடன் இணைந்து கூட்டாட்சிக் குரலை வலுப்படுத்த வேண்டும்.
கல்வி அதிகாரத்தை மாநிலங்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டிய அவசியத்தை தேசிய அரசியல் விவாதமாக முன்னெடுக்க வேண்டும்.
முன்னர் நிறைவேற்றப்பட்ட மசோதா மற்றும் தீர்மானங்களின் நிலை என்ன?,அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பதையும் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களின் ஏகமனதான கோரிக்கையை ஒரு தீர்மானத்தில் பதிவு செய்வது மட்டும் அரசின் வேலை அல்ல.அந்தக் கோரிக்கையை வெற்றிபெறச் செய்வதாகும்.
இன்றைய தீர்மானம் மற்றொரு ஆவணமாக மாறிவிடக்கூடாது.ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இல்லாமல்,தமிழ்நாட்டின் மாநில உரிமையை நிலைநாட்டும் அடுத்தகட்ட அரசியல் போராட்டத்திற்கான தொடக்கமாக இது அமையவேண்டும்.

நீட் விலக்கும்,கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரும் கோரிக்கையும் நடைமுறைக்கு வரும்வரை தமிழ்நாடு அரசு எந்தத்தயக்கமும் இன்றி,தனது அரசியல் மற்றும் சட்டப்போராட்டத்தைத் தொடரவேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response