
இந்த ஆண்டுக்கான,மருத்துவ இளநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 3 ஆம் தேதி நடத்தப்பட்டது.இத்தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, ஜூன் 21 ஆம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்பட்டு,ஜூலை 16 ஆம் தேதி இரவு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதற்கிடையே,வினாத்தாள் கசிவுக்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில்,வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்விஅமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் ஜூன் 20 ஆம் தேதி தில்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் தொடங்கப்பட்டது.சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கும் இப்போராட்டத்தில் இணைந்து காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.தொடர் உண்ணாவிரதம் காரணமாக உடல்நிலை
மோசமடைந்ததால்,அவரை அங்கிருந்து அகற்றிய காவல்துறையினர்,18 ஆம் தேதி மருத்துவமனையில்
அனுமதித்தனர்.
அதைத்தொடர்ந்து,சிஜேபி தலைவர் அபிஜித் திப்கே உள்ளிட்டோர் ஜந்தர்மந்தரில் தொடர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.ஜூலை 20 ஆம் தேதி சிஜேபி சார்பில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது.
அப்போது,போராட்டக்காரர்களைக் கலைக்க தடியடி நடத்தி,கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.இதில் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனால்,தில்லியைத் தொடர்ந்து, சென்னை, மும்பை, கொல்கத்தா, லக்னோ, பெங்களூரு, சண்டிகர், சூரத்,
பாட்னா,ஐதராபாத் எனப் பல்வேறு நகரங்களிலும் மாணவர் அமைப்பினர், இளைஞர்கள் போராட்டங்களைத்
தொடங்கினர்.
இந்தச்சூழலில்,ஜூலை 23 ஆம் தேதி நள்ளிரவில், சமூக வலைதளத்தில் ஒரு காணொலி வெளியிட்டார் பிரதமர் மோடி.அதில்,வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
நாடாளுமன்றத்தில் புதியமசோதா நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார்.
அதைத் தொடர்ந்து,ஒன்றிய அமைச்சர்கள் ஜிதேந்திரசிங்,ஜே.பி.நட்டா ஆகியோரை சிஜேபி நிர்வாகிகள் நேற்று முன்தினம் சந்தித்தனர்.அப்போது,நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். இவற்றை பரிசீலிப்பதாக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில்,ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தனது பதவியிலிருந்து விலகினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,தற்போதைய சூழ்நிலையை தேசவிரோத சக்திகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது.நமது இளைஞர்கள் தீயசுழலில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதற்காக பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து,தில்லியில் ஒன்றிய அமைச்சர்கள் நட்டா, ஜிதேந்திர சிங்கை சிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் சவுரவ் தாஸ்,அசுதோஷ் ரங்கா ஆகியோர் சந்தித்து 3 ஆவது சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது,அவர்களது அனைத்துக் கோரிக்கைகளையும் ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டது.பின்னர்,அனைவரும் கூட்டாகச்
செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது,சிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் சவுரவ் தாஸ்,அசுதோஷ் ரங்கா ஆகியோர் கூறியதாவது….
கடந்தசில நாட்களாக மத்தியஅரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.நீட் வினாத்தாள் கசிவுக்குப்
பொறுப்பேற்று மத்திய கல்விஅமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தினோம். இதன்படி அவர் பதவி விலகியுள்ளார்.
போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் மீதான வழக்குகளைத் திருமப்பெற வேண்டும்.நீட் வினாத்தாள் கசிவால் தற்கொலை செய்து கொண்ட மாணவ,மாணவிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு
வழங்கவேண்டும் என்ற எங்களது கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.டெல்லி மட்டுமன்றி பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் திரும்பப்பெறப்படும்.எதிர்காலத்தில் சிஜேபி நிர்வாகிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும்
மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. எனவே,போராட்டத்தை முழுமையாகத் திரும்பப்பெறுகிறோம்.அனைத்து இளைஞர்களும் வீடு திரும்புமாறு
அறிவுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியதாவது….
போராட்டக்காரர்கள் மீதான அனைத்து வழக்குகளும் திரும்பப்பெறப்படும்.யார் மீதும் எந்த நடவடிக்கையும்
எடுக்கப்படாது.நீட் வினாத்தாள் கசிவால் தற்கொலை செய்துகொண்ட மாணவ,மாணவிகளின் குடும்பங்களுக்கு, மனிதாபிமான அடிப்படையில் சட்டவிதிகளுக்கு உட்பட்டு இழப்பீடு வழங்கப்படும்.
போட்டித் தேர்வு,நுழைவுத் தேர்வு சீர்திருத்தங்கள் தொடர்பாக 5 அம்சக் கோரிக்கைகளை சிஜேபி
முன்வைத்துள்ளது.இவற்றை பரிசீலித்து முடிவு எடுப்போம்.போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என மத்திய அரசு தெரிவித்ததை ஏற்று போராட்டத்தை சிஜேபி திரும்பப் பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கரப்பான்பூச்சி கட்சியினரின் போராட்டத்தின் விளைவாக பாஜக அமைச்சர் பதவி விலகியிருப்பது அக்கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


