பயிற்சி பெற்ற 206 பேரை அர்ச்சகர்களாக நியமிக்காத ஜெ அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடந்த மாதம் மார்ச் 19, 20 ஆகிய தேதிகளில் திருச்சி பெரியார் உலகம் சிறுகனூரில் நடைபெற்ற  முதல் நாள் திராவிடர் கழக மாநில மாநாட்டில் (ஜாதி – தீண்டாமை ஒழிப்பு மாநாட் டில்) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 18.4.2016 தமிழ்நாடெங்கும் 70 மய்யங்களில் அரசு அலுவலகங்கள் முன் – அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை கோரும் மறியல் போராட்டத்தை திராவிடர்கழகம்  நடத்துகிறது.

தந்தை பெரியார் அவர்கள் தமது இறுதிப் போராட்டமாக, மரண – சாசனமாக அறிவித்த போராட்டம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதாகும்.

அந்தப் போராட்டக் களத்தில் நின்றபடிதான் தந்தை பெரியார் இறுதி மூச்சைத் துறந்தார். “உங்களையெல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டு சாகப் போகின்றேனே!” என்று, தன் கொள்கைத் தாகத்தையும் வெளிப்படுத்தினார்.

தந்தை பெரியாரின் கோவில் கருவறை நுழைவுப் போராட்ட அறிவிப்பைக் கேட்டு முதல மைச்சர் கலைஞர் அவர்கள்  அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வழங்கும் சட்டத்தை 1971 நவம்பரில் கொண்டு வந்தார். அதனை எதிர்த்து 12 பார்ப்பனர்கள், சிறீபெரும்புதூர் ஜீயர் உள்பட உச்சநீதிமன்றம் சென்றனர்.

இரண்டாவது முறையும் கலைஞர் 2006 ஆகஸ்டில் சட்டம் இயற்றினார். அதனை எதிர்த்தும் மதுரை சிவாச்சாரியார்கள் உச்சநீதிமன்றம் சென் றனர்.

இந்த முறை உச்சநீதிமன்றம், சட்டம் செல்லும் என்று சொல்லியும், தமிழ்நாடு – பயிற்சியும், தீட்சையும் பெற்றுத் தயாராக உள்ள 206 பேர்களை அர்ச்சகர்களாக நியமிக்க  அரசு முன்வரவில்லை.

இந்த நிலையில்தான் திராவிடர் கழகம், நாளை மறியல் போராட்டத்தை நடத்திட உள்ளது. தமிழ்நாடெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் 70 இடங்களில் அரசு அலுவலகங்கள்முன் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் இந்த இன இழிவு ஒழிக்கும் – ஜாதி – தீண்டாமையை ஒழிக்கும் மறியலில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

சென்னையில் இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம்முன் நடைபெற உள்ள மறியல் போராட்டத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  தலைமை தாங்குகிறார்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், ஆதித்தமிழர் பேரவைத் தலைவர் அதியமான், பன்னாட்டுத் தமிழ் உறவு மன்றத்தின் நிறுவனர் – தலைவர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் ஆகியோரும் பங்கு கொள்கின்றனர்.

மறைந்த கிருபானந்தவாரியார் அவர்களின் உறவினரும், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நேரில் தோன்றி வழக்காடியவரும், தெய்வத்தமிழ் அறக்கட்டளையின் தலைவருமான சத்திய வேல் முருகனார், யாரும் செய்ய முன்வராத பெரும்பணியைத் திராவிடர் கழகம் மேற்கொண்டுள்ளது என்று பாராட்டியும், போராட்டத்திற்கு வாழ்த்துத் தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a Response