போராட்டம் வெற்றி – கோயில் கருவறைக்குள் நுழைவதற்குப் பெண்களுக்கு அனுமதி

மராட்டிய மாநிலம் அகமது நகர் மாவட்டம் நெவசா தாலுகாவில் சிங்னாபூர் என்னும் கிராமத்தில் சனிபகவானுக்கு கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலின் கருவறைக்கு சென்று வழிபட பெண்களுக்கு பலநூறு ஆண்டுகளாக தடை இருந்து வந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூமாதா பெண்கள் படை என்ற அமைப்பினர் அதன் தலைவர் திருப்தி தேசாய் தலைமையில் அண்மைக்காலமாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். எனினும் கோவில் நிர்வாகம் அசைந்து கொடுக்கவில்லை. போராட்டம் வலுத்ததால் ஆண்களையும் கோவில் கருவறைக்குள் அனுமதிக்க கோவில் நிர்வாகம் மறுத்தது.

கோவில் கருவறைக்குள் பெண்கள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து பூமாதா அமைப்பினர் மும்பையில் உள்ள மராட்டிய மாநில உய்ர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு விசாரணையின்போது கோவில் நிர்வாகத்தின் ‘‘ செயல்பாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்றம், பெண்கள் கோவிலுக்கு சென்று வழி அடிப்படை உரிமை உள்ளது. எனவே அவர்கள் சனிபகவான் கோவில் கருவறையில் சென்று வழிபாட பெண்களுக்கு எந்த தடையும் இல்லை. அவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் வழிபட மாநில அரசு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கடந்த 1–ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில் கோவில் அறங்காவலர்கள் குழுக் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது கோவில் கருவறைக்குள் பெண்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கிக் கொள்வது எனவும், கோவில் கருவறையான ‘சவுதாரா‘வுக்குள் நுழைவதற்கு ஆண்கள், பெண்கள் என அனைவரையும் அனுமதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்த தகவலை நிருபர்களிடம் தெரிவித்த சனிபகவான் கோவில் அறங்காவலர்களில் ஒருவரான சாயாராம் பாங்கர் மேலும் கூறியதாவது:–

இன்றைய(நேற்று) கூட்டத்தில் ஆண், பெண் என்ற பேதமின்றி அனைவரும் கோவில் கருவறைக்குள் தடையில்லாமல் சென்று வழிபடுவதற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. எனவே, கோவிலின் அனைத்து பகுதிகளும் திறந்து வைக்கப்படும். பூமாதா பெண்கள் படையின் தலைவியையும் கோவிலுக்கு வந்து வழிசெய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவில் நிர்வாகத்தின் முடிவை பூமாதா பெண்கள் படையின் தலைவி திருப்தி தேசாய் வரவேற்று உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:–

வழிபாட்டுத் தலங்களில் ஆண், பெண் என்ற பேதம் பார்க்கக் கூடாது என்ற எங்களது போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது ஆகும். கோவில் நிர்வாகத்தின் இந்த முடிவு தாமதமான ஒன்று என்றாலும் கூட சரியான முடிவு. அறிவுப் பூர்வமான முடிவை கோவில் நிர்வாகிகள் எடுத்து இருக்கின்றனர். விரைவில் நானும், எங்களுடைய அமைப்பினரும் கோவில் கருவறைக்குள் சென்று வழிபாடு செய்வோம்.

இதேபோல், நாசிக்கில் உள்ள திரிம்பகேஷ்வரர் கோவில், கோல்காபூரில் உள்ள மகாலட்சுமி கோவில் ஆகியவற்றிலும் பெண்கள் கருவறைக்குள் சென்று வழிபடுவதற்கு அந்த கோவில்களின் நிர்வாகிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மராட்டியர்களின் புத்தாண்டு தினமான ‘குடி பட்வா‘  நாளில் இந்த அறிவிப்பை கோவில் வெளியிடப்பட்டது மராட்டிய பெண்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Leave a Response