மின் திட்டங்கள் தொடர்பாகப் பேச தமிழக முதல்வரைப் பார்க்கவே முடியவில்லை – இந்திய மின்துறை அமைச்சர் பரபரப்புப் பேச்சு

‘மின்துறை தொடர்பாக ஆலோசிக்க 28 மாநில முதல்வர்களை சுலபமாக பார்த்து பேசிவிட்டேன்; ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை  இதுவரை ஒருமுறை கூட  பார்த்து பேச  முடியவில்லை’   – இப்படி கூறியிருப்பவர் வேறு யாருமல்ல; மத்திய மின்சார துறை  அமைச்சர் பியுஷ் கோயல்.

புதுடெல்லியில், இந்திய வர்த்தக கூட்டமைப்பு  ஏற்பாடு செய்த ‘இந்தியாவை பொருளாதார வல்லரசாக ஆக்குவோம்’ என்ற தலைப்பில் நேற்று முன்தினம் நடந்த கருத்தரங்கில் அமைச்சர்  கோயல் பேசினார். அவர் பேசிய காட்சிகள் வாட்ஸ்அப்பில் உலா வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் அமைச்சர் பேசியதாவது: நான் பல மாநிலங்களில் நிறைவேற்றும்  மின் திட்டங்கள் தொடர்பாக அங்குள்ள முதல்வர், அமைச்சர்களுடன் பேசி வருகிறேன். கடந்த 18 மாதங்களில் இப்படி 28 மாநிலத்தின் மின்துறை அமைச்சரை மட்டுமல்ல, முதல்வர்களுடன் கூட பேச  முடிந்தது.

இதில் 29 வது மாநிலம் தமிழ்நாடு; அது பற்றி தான் உங்களுக்கு ஒரு முக்கிய விஷயம் சொல்லப்போகிறேன். தமிழ்நாடு இந்தியாவின் ஒரு அங்கம்தான். ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை என்னால் இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு முறை மின்துறை அமைச்சரிடம் பேசினேன். அதற்கு அவர், நான் அம்மாவிடம் பேசுகிறேன் என்றார். ஆனால் அதன் பின் பல மாதங்கள் பதில் வரவில்லை.  நாடாளுமன்றத்தில் இந்த கட்சி எம்.பி.க்கள் தாங்களாகவே ஒருவரும் வாய் திறப்பதே இல்லை. அவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேச வேண்டுமானால், சென்னையில் இருந்து அறிக்கை தயாரித்து வர வேண்டும்.

நான்  மற்ற 28 மாநில முதல்வர்களுடன் பேசி உள்ளேன். கடந்த 18 முதல் 22 மாதங்களில், தமிழக முதல்வருடனும் பேச முயற்சி செய்தேன். என்னால், ஒரே ஒரு முறை மட்டுமே தொடர்பு கொள்ள முடிந்தது. அடுத்த  முறை சென்னையில் சந்திக்க உறுதி அளித்தார்.  ஆனால், இதுவரை எனக்கு அவரிடம் இருந்து அனுமதி கிடைக்கவே இல்லை என்று அமைச்சர்  அந்த நிகழ்ச்சியில் பேசி னார்.   ‘ஒரு மத்திய  அமைச்சருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்கள் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு இருப்பார்கள்’ என்று இக்காட்சியை பார்க்கும் மக்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.

கருத்தரங்கில் தமிழகத்தை சேர்ந்த ஒரு மாணவர் அமைச்சரிடம் கேள்வி கேட்டுள்ளார். ‘தமிழகத்தில் காற்றாலை மின்சாரம் கணிசமான அளவுக்கு தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், அதை சரிவர பயன்படுத்தவே இல்லை. இது பற்றி மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசு இதுபற்றி நடவடிக்கை எடுத்து, மத்திய மின் தொகுப்பில் பெற்று பயன்படுத்த முடியுமா?’ என்று கேட்டார். ‘தமிழக முதல்வரையே சந்திக்க முடியவில்ைல. அப்படி இருக்கும் போது எப்படி பேச முடியும்’ என்றார் அமைச்சர்.

Leave a Response