
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற சிவராத்திரி விழாவில் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். விழாவில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவும் முதல்முறையாகக் கலந்து கொண்டார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியும், பிரேமலதாவும் முன் வரிசையில் அருகருகே அமர்ந்திருந்தனர்.
முக்கிய பிரமுகர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டபோது எஸ்.பி.வேலுமணி, பிரேமலதாவை, ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவிடம் அறிமுகம் செய்துவைத்தார். பின்னர், இருவரும் அருகருகே அமர்ந்து சிவராத்திரி விழாவை பார்த்தனர். இருவரும் அவ்வப்போது பேசிக்கொண்டனர்.
சிவராத்ரி விழாவை முடித்துக்கொண்டு பிரேமலதா நேற்று காலை சென்னை திரும்ப வேண்டியது. ஆனால், அவர் சென்னை வரவில்லை. மாறாக, கோவையிலேயே தங்கிவிட்டார். ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரது உத்தரவை ஏற்று, எஸ்.பி.வேலுமணியும், பிரேமலதாவும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதிமுக கூட்டணிக்கு பிரேமலதாவை வரவழைக்கும் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற கோவை ஈஷா சிவராத்திரி விழாவில் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டனர். அதன்பிறகுதான் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது. அதே நிகழ்வில், இந்த ஆண்டு எஸ்.பி.வேலுமணியுடன் பிரேமலதா விஜயகாந்த் கலந்திருப்பதால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக அங்கம் வகிப்பதற்கு, இந்த சந்திப்பு அச்சாரமாக அமைந்துள்ளது என்கிறார்கள்.
இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் தமிழ்நாடு செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில்….
கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங் மற்றும் பல்வேறு மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டது நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானதாகும்.இந்தியாவின் முப்படைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் சிவராத்திரி விழாவில் இராணுவ சீருடையுடன் கலந்து கொண்டுள்ளனர். ஒன்றிய பாஜக அரசின் அழுத்தத்தின் காரணமாக, முப்படை உயரதிகாரிகள் விழாவில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும், இந்தியாவின் இராணுவம் மதச்சார்பற்ற இராணுவமாகும். அவ்வாறு இருக்கின்றபோது முப்படை உயர் அதிகாரிகள் ஈஷா யோகா மையம் நடத்திய சிவராத்திரி விழாவில் சீருடையுடன் கலந்து கொண்டது கடும் கண்டனத்திற்குரியது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


