படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் குடும்பத்துக்கு துப்பாக்கி கொடுக்கவேண்டும் – ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை

மார்ச் 21 ஆம் தேதியன்று உடுமலைபேட்டையில் சாதிமறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவர் சங்கர் – கௌசல்யா தம்பதி மீது கோரப் படுகொலை தாக்குதல் நடத்தப்பட்டு தலித் இளைஞன் சங்கரை சாதி வெறியர்கள் படுகொலை செய்துள்ளனர்.  கொடூரக் காயங்களுடன் மனதையும் ஊனப்படுத்தி கெளசல்யா பாதுகாப்பற்ற சூழலில் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.

 இவற்றைக் கண்டித்தும், கீழே உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் தலைமையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1) வன்கொடுமைகள் தடுப்புச் சட்ட விதிகளின் படி, கொலையாளிகள் அனைவருடைய சொத்துகளையும் முடக்க வேண்டும்,

2) கொலைக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு, திட்டம் தீட்டிக் கொடுத்ததாக கெளசல்யாவால் கூறப்படும், அவரது தாயார், மற்றும் தாய்மாமன் ஆகியோரையும் இந்த வழக்கில் இணைத்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும்,

3) முன்கூட்டியே பாதுகாப்பு கோரி மனு கொடுத்திருந்தும் அந்த மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல், சட்டப்படி புரிய வேண்டிய கடமையைப் புறக்கணித்து, மெத்தனம் காட்டிய அரசு வருவாய் அதிகாரிகள், மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,

4) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கெளசல்யா தற்போது மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு நிர்கதியாய் நிற்கின்றார், அவரைக் காப்பாற்றும் நோக்கில், அரசு முழுக் கவனம் செலுத்தி அவருடைய கல்வி, பாதுகாப்பு, அரசுப்பணி, ஆகியவற்றிற்கு உத்திரவாதம் அளித்திட வேண்டும்,

5) தொடரும் இதைப்போன்ற சாதிய ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச் சட்டம் இயற்ற வேண்டும்,

7) ஆணவக்கொலைகளை தூண்டுவோர் மீது உரிய நடடிக்கை எடுத்து, அவர்களது கட்சி இயக்கத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும்,

8) படுகொலையான சங்கரின் குடும்பத்தாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், அவர்களுக்கு கைத் துப்பாக்கி வழங்கப்பட வேண்டும்

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தின் முடிவில் இக்கோரிக்கைகள் அடங்கிய கடிதம் கோவை மேற்கு மண்டல IG திரு. சங்கர் அவர்களிடம் வழங்கப்பட்டது. காவல் துறை வழியாக அரசுக்கு இக்கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.

Leave a Response