தனித்துப் போட்டியிட ஜெயலலிதாவுக்குப் பயம் – தஞ்சையில் சீமான் பேட்டி

தஞ்சை பெரியகோவிலுக்குள் சென்றால் பதவி போய்விடும் என்ற மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தஞ்சை வந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தஞ்சை பெரியகோவிலில் சிவனை வழிபட்டு தேர்தல் பிரசாரத்தை துவங்கினார்.

பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ”தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஆட்சிக்கு வரக்கூடாது. நாங்கள்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம். தி.மு.க.வுடன் கூட்டணியில் விஜயகாந்தை சேர்ப்பதற்காக அவர்கள் எதிர்பார்த்து காத்திருப்பது தி.மு.க.வின் பலவீனத்தை காட்டுகிறது. அதுதான் எதார்த்த உண்மை. நடைபயணத்தால் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது, மக்கள் அவர்களை விரும்புகிறார்கள் என்று நினைத்தால் தி.மு.க தனித்து போட்டியிடலாம். ஆனால், தனித்துப் போட்டியிடுவது அவர்களுக்கு தயக்கம். அதனால்தான், அவர்கள் கூட்டணி அமைக்க விரும்புகிறார்கள்.

எங்களுக்கு தத்துவம், கொள்கை இருக்கிறது. அதனால் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம்.

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்ற ஜெயலலிதாவிற்கு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு பயமாக இருக்கிறது. அதனால்தான் அவரும் தனித்து போட்டியிடுவதற்கு பயப்படுகிறார். மக்களோடு சேர்ந்து தனியாக நின்று போட்டியிடுகிறோம். கொள்கை, நோக்கத்தின்  அடிப்படையில் இணைந்து செயல்படுவது போய்விட்டது.

நான் யாருக்குமே ஆதரவாக நின்றதில்லை, எதிராகத்தான் நின்றிருக்கிறேன். அதில் என் இனத்தை கருவறுத்து, கரிக்கட்டைகளாக ஆக்கிப்போட்ட காங்கிரஸ், தி.மு.க.வையும் ஒழிக்க வேண்டுமென நினைத்தேன். அப்படி நான் போட்டியிடும்போது, எனது கட்சிக்காரர்கள் போட்டியிடும்போது அது தே.மு.தி.க.விற்கு, இடதுசாரிகளுக்கு, அ.தி.மு.க.விற்கு ஆதரவாக மாறிப்போனதே தவிர, நான் யாருக்கும் ஆதரவாக நின்றதில்லை.விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவோ, முதலமைச்சராகவோ வரும்போது, அன்புமணி ராமதாஸ் வருவதில் என்ன தப்பு இருக்கிறது. அன்பு மணிராமதாஸ் வரட்டும், நான் வருவேன் என்று நம்புகிறேன். யார் நல்ல ஆட்சி தருகிறார்கள் என்று பார்ப்போம். மக்களுக்குள் நீணடகாலமாக மாற்றத்திற்கான விதை விழுந்து விட்டது. தனித்து நின்று தோற்றுப்போனாலும் மீண்டும், மீண்டும் நிற்பார்கள். நாம் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டோம் என்ற நம்பிக்கையை தராமல் போனதுதான் திராவிட கட்சிகளுக்கு பலமாக போய்விட்டது. அப்படியிருந்தால் என்றோ திராவிட கட்சிகளை தூக்கி எறிந்திருக்கலாம். ஊழலை, லஞ்சத்தை ஒழிக்கணும்னா இந்த கட்சிகளை ஒழிக்க வேண்டுமென நாங்கள் நினைக்கின்றோம். தனித்து நிற்கும் நம்பிக்கையை நாங்கள் தரப்போகிறோம். நிச்சயம் மக்கள் எங்கள் பக்கம் வருவார்கள் என்ற நம்பிக்கையோடு புறப்படுகிறோம்.

இலக்கியம், பண்பாடு, ஏரி, குளங்கள், ஆறுகள், வேளாண்மை போன்றவற்றை நாசம் பண்ணியிருக்கிறார்கள். அதையெல்லாம் சரிசெய்ய வேண்டும். அதனால்தான் நாங்கள் இந்த தேர்தலை போர் என்கின்றோம்” என்றார்.

Leave a Response