நேற்றைய இலக்கியத்தைப் படிக்காமல் இன்றைய இலக்கியத்தைப் படைக்கமுடியாது – இமையம் பேச்சு

புதுச்சேரியில் களைகட்டிய விமர்சனக் கூட்டம்

மார்ச்20- ஞாயிறன்று காலை 5.30.

புதுச்சேரியை நோக்கிய பயணம். கிழக்குக் கடற்கரைச் சாலையின் அதிகாலை நேரத்து அழகை ரசித்துக்கொண்டே சென்றது இனிய அனுபவம்.

ஏக்நாத் எழுதிய நாவலான ஆங்காரம், குமரகுருபரனின் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கமுடியாது என்ற கவிதை நூல் ஆகியவற்றின் விமர்சனக்கூட்டம். புதுச்சேரியில் விமர்சன இலக்கியம் வளர்க்க ஏற்பாடு செய்திருந்தவர் நண்பர் சுகன் கலாபன்.

முதலில் கவிதை நூல் குறித்து கலை விமர்சகர் இந்திரன், மிக நுட்பமான விரிவான விமர்சனத்தை முன்வைத்தார். சாமிகளுக்கு முன்னால் சன்னிதானங்கள் தேவையில்லை என்றார். ஓவியத்தை தூரத்தில் இருந்து ரசிப்பதுபோல கவிதையை கவிஞனை தூரத்தில் வைத்து விமர்சிப்பது சரியானதும் என்றும் கூறினார்.

வார்த்தைகள் ஆபத்தானவை. அவை பல நேரங்களில் அர்த்தமிழக்கின்றன, திரிக்கப்படுகின்றன என்று கூறிய இந்திரன், குமரகுருபரன் கவிதைகள் தேர்ந்த அனுபவ மொழியுடன் எழுதப்பட்டிருப்பதாகப் பாராட்டினார். பெண்களின் பார்வையில் கருணையுடன் அவர் கவிதை படைத்திருப்பதாகக் குறிப்பிட்டார் திருமதி. சைலஜா வம்சி.

ஆங்காரம் நாவல் பற்றி எழுத்தாளர் இமையம் பேசத் தொடங்கியபோது நண்பகல் 12 ஆகியிருந்தது. ஆங்காரத்தின் சிறப்பம்சங்களான சரளமான மொழிநடையில் கதை சொல்லிய முறை, கிளைக்கதைகள், சாமி உருவேற்றம், திருவிழாக்கள், காதல் கதைகள் என பாராட்டிய அவர், பின்னர் தற்கால தமிழ் எழுத்து மற்றும் இளம் படைப்பாளிகள் பற்றிய கோபத்தை வெளிப்படுத்தினார்.

கதை எழுதுகிறேன்…. கதை எழுதுகிறேன்… என்கிறார்கள். என்ன எழுதுகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். நேற்றைய இலக்கியத்தைப் படிக்காமல் இன்றைய இலக்கியத்தைப் படைக்கமுடியாது என்றார். படித்தவன் யார் என்பதை சுட்டிக்காட்டி சாடினார். தமிழக மக்களின் வாழ்க்கை முறையும் பண்பாடும் வரலாறும் ஏக்நாத் போன்றவர்களால் படைப்புகளாக பதிவு செய்யப்படுவதாகக் கூறினார்.

வெகுஜன பத்திரிகைகள் படிக்கிறவன், தூக்கம் வருவதற்காக படிக்கிறவன் எல்லாம் படித்தவர்களா என்று கேட்டார். எழுத்தாளரின் ஒரு மணி நேரப் பேச்சில் அத்தனை கோபம். பெருங்கோபம்.

இயக்குநர் கவிதாபாரதி, ஆங்காரத்தின் கிளைக் கதைகளுக்குள் சென்று சுவாரசியமாகப் பேசினார். முப்பிடாதி, பல்லிமுருகன் என கதாபாத்திரங்களின் குண இயல்புகளை கவிதைநயமிக்க மொழியில் எடுத்துரைத்தார்.

சுருக்கமான பேச்சாக இருந்தாலும் நம்பிக்கையளிக்கும் விமர்சனமாக இருந்தது. ஒத்தக்கல் மந்த் உதகமண்டலமாகி ஊட்டியாக உருவான கதையைக் கூறி, நாம் பாரம்பரிய தொன்மங்களையும் பெருமிதங்களையும் இழந்துவரும் ஆபாயத்தை உணர்த்தினார்.

விமர்சனக்கூட்டத்தில் பதிப்பாளர் டிஸ்கவரி புக்பேலஸ் வேடியப்பனை அழைத்துப் பாராட்டிய கவிதாபாரதி, உயிர்மை பதிப்பாளர் மனுஷ்யபுத்திரனுக்கு நன்றி தெரிவித்தார். கவிஞர் வாணிதாசனின் பேரன் திருக்கபிலன் நன்றியுரை.

-சுந்தரபுத்தன்

 

Leave a Response