
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்….
அதிமுக என்பது ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். இது 30 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்தது. அதற்குக் காரணம் தலைமைப் பண்பு மிக்க, ஆளுமை மிக்க எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர்தான். தொண்டர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கக் கூடியத் தலைவர்களாக விளங்கியவர்கள். இந்தத் தலைமைப் பண்புதான் தொடர் வெற்றிக்கு வழிவகுத்தது.
அறிவு, அனுபவம், மேலாண்மைத் திறன் மற்றும் மனிதர்களை மதித்து நடந்துகொள்ளும் பண்பு ஆகிய நான்கும் சேர்ந்ததுதான் தலைமைப் பண்பு. இதற்கு மாறாகச் செயல்படுபவர் பிறர் பார்வையில் ஏளனத்துக்குரியவராக இருப்பார். ஆணவம், கோபம், இழிவான நடத்தை போன்ற குணாதிசயங்களைக் கொண்டவர்கள் தலைமைப் பதவிக்கு அருகதையற்றவர்கள். தலைமைப் பண்புக்கான அறிகுறி துளியும் இல்லாத முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அதிமுக தற்போது சிக்குண்டு கிடப்பதால், தொடர் தோல்வியைச் சந்தித்து வருகிறது.
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வரவேற்றுவிட்டு, அவரது காரில் ஏறும்போது, அவர் வேறு காரில் வருமாறு அறிவுறுத்தப்பட்டார். இந்தக் காட்சி அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாகப் பரவியது. இது செல்லூர்ராஜுவுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அவமரியாதை.
இதேபோன்று, எம்ஜிஆர் காலத்தில் மக்களவைத் துணைத்தலைவராக பதவி வகித்தவரும், ஜெயலலிதா காலத்தில் மத்திய சட்டஅமைச்சராக இருந்தவருமான தம்பிதுரை, பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவிக்க முற்பட்டபோது, அதைத் தெரிவிக்க அனுமதிக்கவில்லை.இந்தக்காட்சியும் அனைத்து ஊடகங்களிலும், சமூகவலைதளங்களிலும் வைரலாகப் பரவியது. இது தம்பிதுரைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழுக்கு. இதுபோல் வெளிவராத சம்பவங்கள் ஏராளம். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்துபவர்கள் குறிவைக்கப்பட்டு, அவமரியாதை செய்யப்படுகிறார்கள் என்ற கருத்து கட்சியில் நிலவுகிறது.
செயலின் வலிமை தன் வலிமை பகைவனின் வலிமை துணை செய்பவர்களின் வலிமை இவற்றை ஆராய்ந்து செயலைச் செய்ய வேண்டும் என்றார் திருவள்லுவர்.இதற்கு மாறான எந்தச் செயலும் படுதோல்வியில்தான் முடியும்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


