
தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை அரசியல் கட்சிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. திமுக கூட்டணி எந்த மாற்றமுமின்றி இயங்கி வருகிறது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ள நிலையில்,
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இப்போதும் பாஜக கூட்டணியில் இருப்பதாகக் கூறி வருகிறார்.
அதிமுகவுடன் இணையும் அவரது முயற்சிகள் இதுவரை வெற்றிபெறவில்லை.
இதற்கிடையே, அதிமுகவுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைவது தொடர்பான கேள்விக்கு, அது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கூறிவிட்டார். அதனால் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்க பாஜகவும் ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது.அதேசமயம், அதிமுக கூட்டணிக்குள் ஒரு கூட்டணியாக ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் ஆகியோருக்கு தொகுதிகள் ஒதுக்குவதை தாமே மேற்கொள்வது என பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.இதனால் இவ்விருவரும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
அதிமுகவுடன் இணைப்பு சாத்தியமாகாத நிலையில்,பாஜக தம்மை பலியாடு ஆக்கிவிடுமோ என்கிற அச்சத்தில் இருக்கும் ஓபிஎஸ், தம்மை எப்படி வலுப்படுத்திக் கொள்வது என்பது தொடர்பாகவும், பாஜக கூட்டணியில்
நீடிப்பதா அல்லது விலகுவதா என முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளார்.
இதுதொடர்பாக ஜூலை 14 ஆம் தேதி அவருடைய ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளார்.
மாவட்டச் செயலாளர்கள் சிலர், தவெகவுடன் கூட்டணி அமைக்க பன்னீர்செல்வத்துக்கு அழுத்தம் கொடுத்து
வருவதாகச் சொல்லப்படுகிறது. அதனால் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக ஓபிஎஸ் அதிரடி முடிவு எடுத்து விஜய் தலைமையிலான கூட்டணிக்குப் போகவும் வாய்ப்பிருக்கிறது என்ற தகவல் உலவிக் கொண்டிருக்கிறது.
என்ன நடக்கப் போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.


