
முன்னாள் ஒன்றிய அமைச்சரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன், தனது அண்ணன் கலாநிதி மாறனுக்கு வழக்குரைஞர் அறிவிக்கை அனுப்பியுள்ளார்.இது சென்னையைச் சேர்ந்த ‘லா தர்மா’ வழக்குரைஞர் கே.சுரேஷ் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.ஜூன் 10 ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ள அதில், கலாநிதி மாறன் 2003 ஆம் ஆண்டு முதல் பல மோசடி பரிவர்த்தனைகள் மூலம் சன் குழும நிறுவனத்தின் கட்டுப்பாட்டை சட்டவிரோதமாகப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டுகள்….
கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி, சன் நெட்வொர்க் கம்பெனி செயலாளர் ரவி ராமமூர்த்தி, சன் நெட்வொர்க் தலைமை நிதி அதிகாரி மயிலாப்பூர் நடராஜன், ஆடிட்டர் சிவசுப்பிரமணியன், நிதி ஆலோசகர்கள் அண்ணாநகர் ஸ்ரீதர் சுவாமிநாதன், மந்தைவெளி சுவாமிநாதன் மற்றும் உதயா டிவி, ஜெமினி டிவி பங்குதாரர் ஷரத்குமார் ஆகியோர், குடும்பத்தால் ஊக்குவிக்கப்பட்ட ஊடக நிறுவனத்தில் கட்டுப்பாட்டுப் பங்குகளைப் பெறுவதற்காகத் திட்டமிட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சதி, மோசடியான பங்கு ஒதுக்கீடுகள், போலியான ஆவணங்கள் மற்றும் கார்ப்பரேட் நிர்வாகத்தில் முறைகேடுகள் மூலம் செயல்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தயாநிதி மற்றும் கலாநிதியின் தந்தையான முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் 2002 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து நவம்பர் 2003 இல் இறக்கும் வரை கோமாவில், உயிர்வாயு கருவி உதவியில் இருந்தபோது இந்த மோசடி பரிவர்த்தனைகள் நடந்தன.
2003 செப்டம்பர் 15 அன்று, முரசொலி மாறன் அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கலாநிதி மாறன் அப்போதைய சன் குழும நிறுவனத்தில் 12 இலட்சம் பங்குகளை தலா ரூ.10 முக மதிப்பில் தனக்கு ஒதுக்கீடு செய்தார். அப்போது ஒரு பங்கின் மதிப்பு ரூ.2,500 முதல் ரூ.3,000 ஆகவும், நிறுவனத்தின் இருப்பு மற்றும் உபரி ரூ.253 கோடிக்கு மேல் இருந்ததது. இந்த ஒதுக்கீடு, வாரிய அல்லது பங்குதாரர் ஒப்புதல் இல்லாமல் செய்யப்பட்டதாகவும், இது கலாநிதிக்கு ஒரே இரவில் 60% பங்குகளை வழங்கியது, அசல் புரமோட்டர்களான முரசொலி மாறன் மற்றும் மறைந்த மு.கருணாநிதி குடும்பங்களின் பங்குகள் தலா 50% லிருந்து தலா 20% ஆகக் குறைக்கப்பட்டது. இந்த பங்குகளின் நியாயமான சந்தை மதிப்பு ரூ.3,500 கோடிக்கும் மேல் இருந்திருக்க வேண்டும் என்றும், ஆனால் கலாநிதி மாறன் ரூ.1.2 கோடி மட்டுமே செலுத்தியதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
2003 நவம்பர் 26 அன்று, முரசொலி மாறன் இறந்த மூன்று நாட்களுக்குப் பிறகு மற்றும் அவரது மரணச் சான்றிதழ் வழங்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அவரது பெயரில் இருந்த 95,000 பங்குகள் அவரது மனைவி மல்லிகா மாறனுக்கு சட்ட வாரிசு சான்றிதழ் அல்லது முறையான அங்கீகாரம் இல்லாமல் மாற்றப்பட்டது, இது நிறுவனத்தின் நிறுவன விதிகளுக்கு எதிரானது. இந்த பங்குகள் பின்னர் கலாநிதிக்கு மாற்றப்பட்டது.
இதேபோன்ற பரிவர்த்தனைகள் குங்குமம் பதிப்பகங்கள், குங்குமம் நிதியகம் மற்றும் கல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (சென்னை) போன்ற பிற குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனங்களிலும் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனங்கள் சன் தொ.காவில் மொத்தம் 2.85 இலட்சம் பங்குகளை வைத்திருந்தன. இந்தப் பங்குகளும் தலா ரூ.10 க்கு கலாநிதிக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. மாறாக, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மனைவி தயாளுவிடம் இருந்து வாங்கப்பட்ட பங்குகள் அதே காலகட்டத்தில் ஒரு பங்குக்கு ரூ.3,173.04 ஆக வாங்கப்பட்டது.
2005 டிசம்பரில் மல்லிகா மாறனுக்கு செலுத்தப்பட்டதாகக் காட்டப்பட்ட ரூ.10.64 கோடி ஈவுத்தொகை ஒருபோதும் விநியோகிக்கப்படவில்லை என்றும், ஐபிஓ பிராஸ்பெக்டஸ் முந்தைய உள் பங்கு மாற்றங்களின் உண்மையான தன்மையை மறைக்கப்பட்டுள்ளது.
மோசடி பரிவர்த்தனைகள் மூலம் கிடைத்த வருமானம் சன் டைரக்ட் டிவி, கல் ரேடியோஸ், கல் ஏர்வேஸ், சன் பிக்சர்ஸ், சவுத் ஆசியன் எஃப்எம் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் போன்ற கிரிக்கெட் உரிமைகளில் முதலீடு செய்யப் பயன்படுத்தப்பட்டது. இந்த முதலீடுகள், 2002 ஆம் ஆண்டு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் “குற்றத்தின் மூலம் கிடைத்த வருவாய்.
இந்திய மற்றும் சர்வதேச பரஸ்பர மற்றும் REIT நிதிகளில் ரூ.8,500 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
2003 மற்றும் 2023 க்கு இடையில் கலாநிதி ரூ.5,926 கோடிக்கு மேல் ஈவுத்தொகை பெற்றதாகவும், 2024 இல் மட்டும் ரூ.455 கோடி பெற்றார்.
2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மாறன்களின் சகோதரி அன்புக்கரசிக்கு ரூ.500 கோடி செலுத்தப்பட்டது.
இந்தப் பணம் மல்லிகா மாறனின் கணக்கு மூலம் செலுத்தப்பட்டு,சன் தொகா ஈவுத்தொகையிலிருந்து நிதி பெறப்பட்டுள்ளது.
முரசொலி மாறனின் சட்ட வாரிசான தயாநிதிக்கு நிறுவனத்தில் அவரது நியாயமான பங்கு மறுக்கப்பட்டதாகவும், 2005 டிசம்பரில் கலாநிதிக்கு வழங்கப்பட்ட கிட்டத்தட்ட 6 கோடி போனஸ் பங்குகள் உட்பட தொடர்புடைய போனஸ் பங்குகளும் மறுக்கப்பட்டது.
2003 செப்டம்பர் 15 அன்று இருந்தபடி பங்குதாரர் கட்டமைப்பை அதன் அசல் நிலைக்கு மீட்டெடுக்கவும், அசல் புரமோட்டர் குடும்பங்களுக்கு அனைத்து ஈவுத்தொகை, சொத்துகள் மற்றும் வருவாயைத் திரும்பப் பெறவும் இது கோருகிறது.
தயாநிதியின் இந்த அறிவிக்கை, நிறுவனச் சட்டம் (1956 மற்றும் 2013), இந்திய தண்டனைச் சட்டம் (பிரிவுகள் 406, 420, 467, 471, 120-B), SEBI சட்டம் மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்களின் கீழ் மீறல்களைக் குறிப்பிடுகிறது.
நிறுவனச் சட்டத்தின் பிரிவு 212 இன் கீழ் தீவிர மோசடி விசாரணை அலுவலகத்தை அணுகவும், SEBI, NSE, BSE, கம்பெனிகள் பதிவாளர், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மற்றும் பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஆகியவற்றுக்கு புகார்களைப் பதிவு செய்யப்படும்.
சன் குழுமத்தின் அச்சு, ஒளிபரப்பு, வானொலி, விமானப் போக்குவரத்து மற்றும் விளையாட்டுத் துறைகளில் உள்ள உரிமங்களை இரத்து செய்யக் கோரவும் முன்மொழிகிறது. இதில், சன்ரைசர்ஸ் ஐபிஎல் உரிமம் மற்றும் ஸ்பைஸ்ஜெட் லிமிடெட் ஆகியவை அடங்கும்.
நிதி ஆலோசகர்கள், தணிக்கையாளர்கள், நிறுவனச் செயலாளர்கள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் உட்பட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல மூத்த வல்லுநர்களுக்கு எதிராக சாத்தியமான வழக்குத் தொடரப்படும் என்றும் நோட்டீஸ் எச்சரித்துள்ளது.
மேலும், சன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களிலும் கடந்த 2003 செப்டம்பர் 15 ஆம் தேதி நிலவரப்படி நிலைமையை மீண்டும் கட்டமைத்து தயாளு அம்மாள் மற்றும் மாறன் குடும்பத்தாரின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்களுக்கு சேர வேண்டிய பங்குகள், பணப்பலன்கள், சொத்துகள், வருமானத்தைத் திருப்பியளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தைக்கு சன் குழுமம் அனுப்பியுள்ள விளக்கக் கடிதத்தில்…
சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்தின் பங்குதாரருக்கும் அவரது குடும்ப உறுப்பினருக்கும் இடையிலான சில விசயங்கள் தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட சம்பவங்கள் 22 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்தவை. இதுதொடர்பாக வெளியான செய்திகள் தவறானவை, ஊகத்தின் அடிப்படையிலானவை, அவதூறானவை.
நிறுவனத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் சட்டப்பூர்வ கடமைகளின்படி செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பான செய்திகள் நிறுவனத்தின் வணிகத்திலோ அல்லது அதன் அன்றாட செயல்பாடுகளிலோ தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பங்குதாரர்களின் குடும்ப விசயங்கள் முற்றிலும் தனிப்பட்ட விவகாரங்களைச் சார்ந்தவை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


