பிரபாகரன் பிறந்தநாள் கேக் வெட்டியதற்காக சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டார்.இதற்கு,
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்…..
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 26ஆம் நாள் அவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் நடைபெற்ற விழாவிற்குத் தலைமை தாங்கி கேக் வெட்டியதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நண்பர் சிவாஜிலிங்கம் அவர்களைக் கைது செய்ததோடு, அவரது கடவுச்சீட்டைப் பறிமுதல் செய்து சனநாயக உரிமைகளைப் பறித்துள்ள சிங்கள அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இலங்கையின் குடியரசுத் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள திசாநாயக்காவின் இந்த நடவடிக்கை அவரது முகமூடியைக் கிழித்து எத்தகைய கொடிய சர்வாதிகாரி அவர் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம் அவர்களின் மீதே இத்தகைய ஒடுக்குமுறை ஏவப்படுமானால், இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலை என்னவாகும்? என்ற கவலை அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
இதற்கெதிராகக் குரல் கொடுக்க முன்வரவேண்டும் என உலகத் தமிழர்களை வேண்டிக்கொள்கிறேன்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயக்கா,தமிழ் மக்களுக்கான உரிமையைத் தர நடவடிக்கை எடுப்பார் என்று சிலர் நம்பிக் கொண்டிருந்தனர்.அவர்களின் அந்த நம்பிக்கையைப் பொய்யாக்கும் விதமாக இந்நிகழ்வு நடந்துள்ளது குறிப்பிடத்ததக்கது.