குலக்கல்வியை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது – ததேமு தலைவர் அறிக்கை

குலதர்மக் கல்வித் திட்டத்தைத் திணிக்காதே என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் செ.ப.முத்தமிழ்மணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…

தலைமையமைச்சரின் விசுவகர்மா திட்டத்தை அரசியல் ஆதாயங்களுக்காக தமிழக அரசு ஏற்க மறுக்கக் கூடாது என ஒன்றிய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி வேண்டிக்கொண்டுள்ளார்.

கிராமப்புறங்களில் கொல்லர், தச்சர் போன்ற பல்வேறு தொழில்கள் சாதி அடிப்படையிலேயே அமைந்துள்ளன. சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள் படித்து மேலே வருவதற்குப் பெரும் போராட்டங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றுதான் ஓரளவுக்கு இவர்கள் முன்னேறி வந்துள்ளனர். விசுவகர்மா திட்டம் என்பது பரம்பரைத் தொழிலை நிரந்தரமாக்கி அச்சாதிகளைச் சேர்ந்த இளைஞர்களை முன்னேறவிடாமல் தடுக்கும் திட்டமே ஆகும்.

1952 ஆம் ஆண்டில் இராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது அரைநாள் படிப்பு அரைநாள் குலத் தொழிலைக் கற்றுக்கொள்வது என்பதற்கான குலதர்மக் கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தார். அப்போது தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராடின. அதன் விளைவாக இராஜாஜி பதவி விலக நேர்ந்தது. அவருக்குப் பின் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற காமராசர், குலதர்மக் கல்வித் திட்டத்தை நீக்கினார்.

இப்போது மீண்டும் விசுவகர்மா திட்டம் என்ற பெயரில் அதே குலதர்மக் கல்வித் திட்டத்தை பா.ச.க. ஆட்சி கொண்டுவந்துள்ளது. இது பிற்பட்ட சாதிகளைச் சேர்ந்த இளைஞர்களை முன்னேறவிடாமல் பின்னுக்குத்தள்ளி சாதியத் தொழிலை மேற்கொள்ள வைக்கும் திட்டமாகும்.

இதை ஒருபோதும் தமிழகம் ஏற்றுக்கொள்ளாது. மீறி இத்திட்டம் திணிக்கப்படுமானால் தமிழ்நாட்டில் பெரும் போராட்டம் வெடிக்கும் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response