கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பான மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் அக்டோபர் 2 ஆம் தேதி புதன்கிழமை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.
மாநாட்டில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அவை…
1.இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 47 இல் கூறியுள்ளவாறு, மதுவிலக்கை தேசியக் கொள்கையாக வரையறுக்கவும், சட்டமியற்ற வேண்டும்.
2.மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி வழங்கிடவேண்டும்.
3.மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதிப் பகிர்வு அளிக்க வேண்டும்.
4.மதுவிலக்கு விசாரணை ஆணையம் அமைத்திடவேண்டும்.
5.தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கால அட்டவணையை வெளியிடவேண்டும்.
6.மனித வளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும்.
7.தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
8.மது மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பரப்பியக்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஈடுபடுத்த வேண்டும்.
9.மது மற்றும் போதை அடிமையானவர்களுக்கும் மறுவாழ்வு மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் அமைத்திடவேண்டும்.
10.டாஸ்மாக்கில் பணிபுரியும் சற்றேறக்குறைய 30 ஆயிரம் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்கிடவேண்டும்.
11.மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களும், மது விலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பவேண்டும்.
12.மதுவிலக்கு பரப்பியக்கத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து பரப்புரை மேற்கொள்ளவேண்டும்.
13.மதுவிலக்கு போராளி சசிபெருமாள் பிறந்த தினத்தின்போது டாஸ்மாக் கடைகளிக்கு விடுமுறை அளிக்கவேண்டும்.
இந்தத் தீர்மானங்களை வாசித்து, அதை நிறைவேற்றித் தருமாறு திரண்டிருந்த தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார் திருமாவளவன்.
மாநாட்டில் தொல்.திருமாவளவன் பேசியதாவது….
நான் உங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.கடந்த மக்களைத் தேர்தலில் மாபெரும் வெற்றியைக் கொடுத்தீர்கள்.இம்மாநாட்டின் சிறப்பே இலட்சக்கணக்கான பெண்கள் திரண்டு வந்ததுதான்.மதுவிலக்கு என்பது புத்தர் காலத்திலிருந்தே பேசப்பட்டு வருகிறது.ஞான வம்சத்தில் இருந்து வந்தவன்.சாதி மதப் பெருமைகளை நான் பேசவில்லை.இதுவரை நாம் பயன்படுத்தாதவர்களை இப்போது மதுவை வேண்டாமென்று சொன்ன காந்தியையும், ராஜாஜியையும் கௌரவப்படுத்துகிறோம்.
இம்மாநாடு முதலில் செப்டம்பர் 17 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.அன்று பாமகவின் தியாகிகள் தினம் என்பதால் எதிரும் புதிருமாக வரக்கூடாது என்பதால்தான் இந்நாள் தேர்வு செய்யப்பட்டது.புத்தர் உலகம் முழுவதும் மதுவிலக்கைச் சொன்னார்.இந்த எளியவன் தமிழகத்தில், இந்தியாவில் சொல்கிறேன்.எந்த மதமும் மதுவை ஆதரிக்கவில்லை.அரபு நாடுகளில் மதுக்கடைகளைக் காணமுடியாது.திருவள்ளுவர் கள்ளுண்ணாமை என்ற அதிகாரத்தை எழுதியுள்ளார்.
உலகம் போற்றும் மகான்கள் யாரும் மதுவை ஆதரிக்கவில்லை.இந்த அடிப்படையில்தான் மதுவை வேண்டாம் என்றோம்.2015 ஆம் ஆண்டு திருச்சியில் மதுவிலக்கு மாநாட்டை நடத்தி,துண்டறிக்கைகளை வெளியிட்டோம். மதம் மாறிய அம்பேத்கர் மதுவைத் தொடமாட்டேன் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.உடனே தமிழகத்தில் மட்டும் திருமாவளவன் மது வேண்டாம் என்கிறார் என்று அரைவேக்காடுகள் கூறுகிறார்கள்.நான் இந்தியா முழுவதும் மதுவிலக்கு வேண்டும் என்கிறேன்.
மதுவுக்கு பெரியார், மார்க்ஸ் அடிமையாகி இருந்தால் அவர்கள் நமக்குக் கிடைத்து இருப்பார்களா? மதுவுக்கு அடிமையானால் மனிதவளம் அழியும். இதில் அரசியல் பேசவேண்டாம் என்றேன். உடனே நான் அதிமுகவிற்கு அழைப்பு விடுத்தேன் என்றும், கூட்டணி மாறப்போகிறேன் என்று இம்மாநாட்டின் நோக்கத்தைச் சிதைத்துவிட்டார்கள்.சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் உள்ளன.
காவிரி,இலங்கை பிரச்சினைக்காக நாம் இணைந்து பேசவில்லையா? அப்படி இதைப் பேசி இருக்கவேண்டும். உலர்ந்த நாள் என்பதெல்லாம் சும்மா.முதல்நாளே வாங்கி வைத்துக்கொள்கிறார்கள்.இந்தியா முழுவதும் 7- 8 நாட்கள் மட்டுமே மதுக்கடைகள் மூடப்படுகின்றன. திமுகவிற்குக் கொள்கை அடிப்படையில் மதுவை ஒழிக்க உடன்பாடு உள்ளது. ஆனால் அதில் நடைமுறைச் சிக்கல் உள்ளது.
அண்ணா மதுவிலக்கைத் தளர்த்தவில்லை.மதுக்கடைகளை மூடச் சொல்லி தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் கோரிக்கை வைக்கிறோம்.மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கான இழப்பீடை மத்திய அரசு தரவேண்டும் என்று கலைஞர் கூறினார்.பின்னர் 1974 ஆம் ஆண்டு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் மதுவிலக்கைத் தளர்த்தியது யார்? டாஸ்மாக்கை உருவாக்கியது யார்? இதுகுறித்து வாதாடுபவர்கள் என்ன சூழ்ச்சியில் பேசுகிறார்கள் என்பதைச் சொல்கிறேன். தமிழக முதல்வர் ஸ்டாலினா மதுக்கடைகளைத் திறந்தார். வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மதுக்கடைகளை மூடினால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும்.அதற்கு முன் சட்டமன்றத்தில் தேசிய மதுவிலக்கை அமல்படுத்த தீர்மானம் நிறைவேற்றவேண்டும்.
தேர்தல் அரசியல் வேண்டாம் என்ற நிலையைகூட நான் எடுக்கத் தயாராக உள்ளேன்.ஆளுநர் வருகையால் காந்தி மண்டபத்தில் என்னை அனுமதிக்கவில்லை.ஆனால் நான் காந்தியை அவமதித்துவிட்டதாக முன்னாள் ஆளுநர் தமிழிசை கூறுகிறார்.அதோடு காந்தியின் கொள்கைக்கு நான் எதிரானவன் என்பது போலப் பேசியிருக்கிறார்.அதன் அர்த்தம் நான் மதுக்குடிப்பவன் என்று சொல்வதாக இருக்கிறது.அக்கா தமிழிசை அவர்களே,நீங்கள் மது குடிக்கமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். நான் தடய அறிவியல் துறையில் பணியாற்றியபோது மதுப்புட்டிகளை ஆய்வு செய்யும் இடத்தில் இருந்தேன்.அப்போது கூட என் நாவில் ஒரு சொட்டு மதுகூடப் பட்டது கிடையாது. மதசார்பின்மையைச் சொன்னதற்காக காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்.இந்த மேடைக்கு வந்த தலைவர்களால் விசிகவின் நோக்கம் மேம்பட்டுள்ளது.
இவ்வாறு தொல்.திருமாவளவன் பேசினார்.