
சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து இராகுல்காந்தி கூறியிருப்பதாவது…
இந்தியாவில் ஒவ்வொரு இந்தியருக்கும் நீதி வழங்கிடும் வகையிலும், சம உரிமை வழங்கிடும் வகையிலும் அரசியலமைப்பு அமைந்திருந்தாலும், 90% இந்தியர்களின் வளர்ச்சியும், வாய்ப்பும் புறக்கணிக்கப்படுகின்றன.அந்த 90% மக்களாக பட்டியலினத்தவர்களும்,பிற்படுத்தப்பட்டவர்களும்,சிறுபான்மையினரும்,பொதுப்பட்டியலில் உள்ள உழைக்கும் மக்களும் இருக்கின்றனர்.
இது மிகவும் வருந்துவதற்குரிய செய்தியாக இருக்கிறது.எனவே,அரசியலமைப்பின் வழிகாட்டலுடன் சமூகநீதியையும், சமூக பொருளாதார சம உரிமையையும் வழங்கிடும் பொருட்டு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.சாதிவாரி கணக்கெடுப்பு, நாட்டின் 90% மக்களை சமூகம் சார்ந்தும், பொருளியல் சார்ந்தும் வளர்ச்சி அடைய உதவும்.மேலும்,நாட்டில் நடக்கிற பல்வேறு மோசடிகளை வெளிச்சமிட்டுக் காட்டும் கருவியாகவும் சாதிவாரிக் கணக்கெடுப்பு அமையும்.இதுவே,மக்களின் கோரிக்கையாகவும் இருக்கிறது.
இதனை பிரதமர் மோடி கருத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டும் அல்லது அடுத்த பிரதமர் வரும் வரை காத்திருந்து,சாதிவாரிக் கணக்கெடுப்பு செயல்படுத்தப்படுவதைக் காண்பவராக மோடி இருப்பார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இராகுல்காந்தியின் இந்தக் கருத்துக்கு ஆதரவாக லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பஸ்வான் பேசியுள்ளார்.
லோக் ஜன சக்தி(ராம்விலாஸ் பஸ்வான்) கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று நடைபெற்றது.இதில் சிராக் பஸ்வான் லோக் ஜன சக்தி(ராம் விலாஸ் பஸ்வான்) கட்சித் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் பேட்டியளித்த சிராக் பஸ்வான்…
அடுத்த 5 ஆண்டுகளுக்கு கட்சித் தலைவராக நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.இந்தக் கூட்டத்தில் அரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் பேரவைத் தேர்தல்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படுவது அவசியம்.இதை எங்கள் கட்சி எப்போதும் வலியுறுத்தி வருகிறது.அது அரசாங்கத்திடம் அனைத்துப் பிரிவு மக்களின் சரியான எண்ணிக்கை இருப்பதை உறுதி செய்யும் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் இராகுல்காந்தியின் வலியுறுத்தி மோடி அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் சிராக்பஸ்வான் பேசியிருக்கிறார்.இதனால் விரைவில் வரவிக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியிலிருந்து விலகி காங்கிரசு கூட்டணியில் லோக்ஜனசக்தி கட்சி இணையலாம் என்று பேசப்படுகிறது.இப்பேச்சு தில்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


