இந்திய ஒன்றியத்தில் உள்ள பின்தங்கிய மாநிலங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்த ஒன்றிய அரசின் கூடுதல் ஆதரவை உறுதி செய்யும் ஒரு திட்டம்தான் சிறப்பு அந்தஸ்து.அரசியலமைப்புச் சட்டம் எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்தை வழங்கவில்லை. என்றாலும் 1969 ஆம் ஆண்டு ஐந்தாவது நிதிக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின்படி, இதுவரை ஜம்மு-காஷ்மீர்,இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவை சிறப்பு அந்தஸ்தை பெற்றுள்ளன. இந்த மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தின் கீழ் ஒன்றிய அரசின் திட்டங்களில் அதிக நிதியுதவி, வரிகளில் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இந்த சிறப்பு அந்தஸ்து பீகார் மாநிலத்துக்கும் வேண்டும் என்று பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் கோரிக்கை வைத்திருந்தார்.
பெரும்பான்மை இல்லாத பாஜகவுக்கு ஆதரவு தர இதை ஒரு நிபந்தனையாக வைத்திருக்கிறார் என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில்,பிகாரின் ஜாஞ்சர்பூரைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், ராம்பிரித் மண்டல், பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்மயமாக்கலை ஊக்குவிக்க பிகார் மற்றும் பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் எதுவும் ஒன்றிய அரசிடம் உள்ளதா என்று நிதி அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் கூறியதாவது….
பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பான திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. மலைப்பாங்கான, கடினமான நிலப்பரப்பு, குறைந்த மக்கள் தொகை அடர்த்தி அல்லது பழங்குடியினரின் கணிசமான பங்கு, பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பில் பின்தங்கிய நிலை, மாநில நிதிகளின் சாத்தியமற்ற தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு தேசிய வளர்ச்சி கவுன்சிலால் (என்டிசி) சில மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து கடந்த காலத்தில் வழங்கப்பட்டது.
முன்னதாக, சிறப்பு அந்தஸ்துக்கான பிகாரின் கோரிக்கையை அமைச்சகங்களுக்கு இடையிலான குழு (ஐஎம்ஜி) பரிசீலித்து அது தொடர்பான அறிக்கையை 2012 மார்ச் 30 ஆம் தேதியன்று சமர்ப்பித்தது. என்டிசி அளவுகோல்களின் அடிப்படையில் பிகாருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்க இயலாது என்பது ஐஎம்ஜி அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
இவ்வாறு பங்கஜ் சவுத்ரி கூறியுள்ளார்.
பிகாருக்கு அந்தஸ்து இல்லை என்று வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருப்பது நிதீஷ்குமாருக்கு அரசியல்ரீதியாகச் சிக்க்லை ஏற்படுத்தியுள்ளது.பிரதமர் மோடி, நிதீஷ்குமாரை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார் என்று அம்மாநிலத்தில் பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.இதனால் நிதிஷ்குமார் அதிர்ச்சியடைந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.