உதய் மின் திட்டத்துக்கு இப்போதும் ஆதரவு – எடப்பாடி கருத்தால் மக்கள் அதிர்ச்சி

சேலம் மாவட்டம் ஓமலூரில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

அந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் எடப்பாடி பழனிச்சாமி.

அப்போது அவர் கூறியதாவது….

திமுக ஆட்சியில் அம்மா உணவகங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.சென்னையில் 19 உணவகங்களை மூடிவிட்டனர்.இதனால் திமுக அரசு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது.எனவேதான், அம்மா உணவகத்துக்குச் சென்று முதல்வர் ஆய்வு செய்துள்ளார்.

உதய் மின் திட்டத்தில் பல்வேறு நன்மைகள் இருந்ததால்,அதில் அதிமுக அரசு கையெழுத்திட்டது.எல்லா மாநிலங்களும் கையெழுத்துப் போட்டுள்ளன.

தமிழகத்தில் 200 நாட்களில் 595 கொலைகள் நடந்துள்ளன. கஞ்சா, போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கஞ்சா விற்பனையைத் தடுக்காவிட்டால், மாணவர்கள், இளைஞர்கள் சீரழிந்து விடுவர்.

அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களைப் பற்றிப் பேசத்தேவையில்லை. ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில், தானாக சரணடைந்தவரை என்கவுன்ட்டர் செய்துள்ளனர். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், இதுபோன்ற வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படும்.

உதயநிதிக்கு கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் என்ற தகுதி மட்டும்தான் உள்ளது. திமுகவில் பல ஆண்டுகள் உழைத்தவர்களும், அனுபவம் மிக்க அமைச்சர்களும் உள்ளனர். ஆனால், குடும்பக் கட்சியான திமுகவில், அவர்களுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்காது.

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல்களில் மேற்கொள்ள வேண்டிய பிரச்சார யுக்திகளைக் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அவற்றை வரும் தேர்தல்களில் பின்பற்றுவோம்.

திமுக ஆட்சியில் மதுரையில் நூலகம், சென்னையில் மருத்துவமனை கட்டியதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ரூ.3.65 இலட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. இந்த ஆட்சியே கடனில்தான் நடக்கிறது.

இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

ஒன்றிய அரசின் உதய் மின் திட்டத்தில் எடப்பாடி அரசு கையெழுத்துப் போட்டதால்தான் தற்போதைய மின் கட்டண உயர்வுச்சுமை மக்களின் தலையில் ஏறியிருக்கிறது.இந்நிலையில் உதய் மின்திட்டத்தில் பல நன்மைகள் இருக்கின்றன என எடப்பாடி பழனிச்சாமி சொல்லியிருப்பது மக்களிடையேயும் அதிமுகவினரிடயேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response