மோடி ஆட்சி 5 மாதங்களில் கவிழும் – ஈவிகேஎஸ் தகவல்

ஈரோட்டில் நேற்று (ஜூன் 14,2024) செய்தியாளர்களிடம் பேசினார் காங்கிரசு மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

அப்போது அவர் கூறியதாவது….

சென்னையில் நடந்த காங்கிரசு கூட்டத்தில், காங்கிரசுக் கட்சியை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் செல்வப்பெருந்தகை பேசும்போது, கூடுதலாக இரண்டு வார்த்தைகள் பேசினார். அதனால் ஏற்பட்ட விவாதம் முடிவுக்கு வந்துவிட்டது. தான் அந்த அர்த்ததில் சொல்லவில்லை என்று செல்வப்பெருந்தகை சொல்லும்போது, அவர் சொன்னதை ஏற்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி வைக்க வேண்டாம் என முன்னாள் எம்பி ஒருவர் கருத்துச் சொன்னார். அதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி வைத்துப் போட்டியிட்டால் தான் வெற்றிபெற வாய்ப்புக் கிடைக்கும். காங்கிரசுக் கட்சி உறுப்பினர்கள் இன்றைக்கு பல இடங்களில் மேயர், கவுன்சிலர்களாக இருப்பதற்குக் கூட்டணி தான் காரணம். கூட்டணியில் சலசலப்பு இருக்கத் தான் செய்யும். எனவே, வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்துத் தான் காங்கிரசு போட்டியிடும்.

எதைப் பற்றியும் கவலைப்படாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பணியாற்றி வருகிறார். அவரது ஆட்சியைப் பொற்கால ஆட்சி என்று சொல்வதற்குப் பதிலாக, நவீனமாக, ‘காமராஜர் ஆட்சி’ என்று நான் சொன்னேன்.

தற்போது எத்தனையோ நிதி நெருக்கடி இருந்தும், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மதிய உணவு தந்த காமராஜருடன், காலை உணவு தந்த ஸ்டாலினை ஒப்பிடுவதில் தவறில்லை. தமிழ்நாட்டில் உள்ள தாய்மார்கள், ஸ்டாலின் பின்னால் நிற்கிறார்கள்.

மக்களவைத் தேர்தலில் நான்கு முனை போட்டி இருந்ததால் வாக்குகள் சிதறியுள்ளன. பாமக, பாரிவேந்தர், ஏசி சண்முகம் போன்ற காரணங்களால், பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது.

தமிழிசை சவுந்தரராஜனை, அமித் ஷா மேடையில் திட்டி எச்சரிக்கை செய்தால், அது கண்டிக்கத்தக்கது. கட்சி பாகுபாடின்றி, அவர் தமிழராக இருப்பதால் இந்த விவகாரத்தில் நான் கண்டிக்கிறேன்.

இந்தியாவில் 25 சதவீத முஸ்லிம்கள் உள்ள நிலையில், அவர்களில் ஒருவருக்குக் கூட சீட் வழங்காத பாஜக அரசை பொதுவான அரசு என்று கூற முடியாது. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி 5 மாதங்களில் கலைந்து விடும். இதற்கு பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளே காரணமாக இருக்கலாம்.

மக்களவை எதிர்கட்சித் தலைவராக இராகுல் காந்தி வரவேண்டும்.

நீட் தேர்வில் குளறுபடிகள் ஏற்படுவதால் தான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரம்பம் முதல் அதனை எதிர்த்து வருகிறார். காங்கிரசு ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டபோது, மாநிலங்கள் விருப்பத்தின் பேரில் நடத்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவை எதிர்த்துப் போட்டியிடுபவர்களுக்கு டெபாசிட் கிடைக்காது.

நாம் தமிழர் கட்சி, மாநில அந்தஸ்து பெற்றதை வரவேற்கிறேன். மற்ற மாநிலத்திலும் சீமான் தனது கட்சியை வளர்த்து, தேசியக் கட்சியாக வளர வேண்டும். அப்போதுதான், டெல்லி, மும்பை என்று பயணம் செய்துவிட்டு, தமிழ்நாட்டில் இரு நாட்கள் மட்டுமே இருப்பார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பங்கு தமிழ்நாட்டுக்குத் தேவை. எனவே, தமிழ்நாட்டில் செல்வாக்கு மிக்க திருமாவளவன் எங்களுடன்தான் இருப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response