இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன், திட்ட இயக்குநர்கள் மயில்சாமி அண்ணாதுரை (சந்திரயான்-1), மு.வனிதா (சந்திரயான்-2), ப.வீரமுத்துவேல் (சந்திரயான்-3), நிகார் ஷாஜி (ஆதித்யா-எல்1), திருவனந்தபுரம் திரவ உந்து அமைப்பு மைய இயக்குநர் வி.நாராயணன், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஆய்வு மைய இயக்குநர் ஏ.ராஜராஜன், பெங்களூரு யு.ஆர்.ராவ் செயற்கைக் கோள் மைய இயக்குநர் எம்.சங்கரன், மகேந்திரகிரி உந்துவிசை வளாக இயக்குநர் ஜெ.ஆசிர் பாக்கியராஜ் ஆகியோருக்கு தலா ரூ 25 இலட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
தமிழ்நாடு அரசு அறிவித்த ரூ.25 இலட்சம் பரிசுத் தொகையை தமிழ்நாட்டில் தான் பயின்ற கல்வி நிறுவனங்களுக்கு பிரித்து வழங்க சந்திரயான் -3 திட்ட இயக்குநர் பி.வீரமுத்துவேல் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, இந்திய விண்வெளித் துறைச் செயலர் சந்தியா வேணுகோபால் சர்மா, தமிழ்நாடு உயர்கல்வித் துறைச்செயலர் ஏ.கார்த்திக்குக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்…..
தமிழ்நாடு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தமிழ் வழியில் கல்விபயின்று, இந்திய விண்வெளித் துறையின்கீழ் இயங்கும் இஸ்ரோவில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர்களை தமிழ்நாடு அரசு, அக்டோபர் 2 ஆம் தேதி கவுரவித்துச் சிறப்பித்தது. அப்போது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ரூ.25 இலட்சம் ரொக்கப் பரிசை முதலமைச்சர் அறிவித்தார்.
பரிசு பெற்றவர்களில் ஒருவரானசந்திரயான்-3 திட்ட இயக்குநர் பி.வீரமுத்துவேல், அத்தொகையை, தமிழ்நாட்டில் தான் பயின்ற 4 கல்வி நிறுவனங்களுக்குச் சமமாகப் பிரித்து வழங்க முன்வந்துள்ளார். அதன்படி, விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி, மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி, திருச்சி என்ஐடி, சென்னை ஐஐடி ஆகியவற்றுக்கு நிதி வழங்க விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
விஞ்ஞானி வீரமுத்துவேலின் இந்தச் செயலுக்குப் பெரும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.