
நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து நிலவில் கால்பதித்துள்ள இந்தியா, தனது விண்வெளிப் பயணத்தில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.
சந்திராயன் நிலவினை அடைந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் வெற்றியை தெரிவித்த இஸ்ரோ தலைவர் “இந்தியா நிலவில் உள்ளது” என்று அறிவித்தார்.
சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றியவரும், சந்திரயான்-3 திட்ட இயக்குநருமான தமிழகத்தைச் சேர்ந்த வீரமுத்துவேலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அப்போது “தமிழகத்துக்கு வரும்போது உங்களைக் கண்டிப்பாகப் பார்க்க வருவேன்” என்று வீரமுத்துவேலிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். முன்னதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் வீரமுத்துவேலைப் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் சந்திரயான்-3 விண்கலப் பயணத்தின் திட்ட இயக்குநராக இருப்பவர் வீரமுத்துவேல். இவர் விழுப்புரத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை பழனிவேல்,தொடர்வண்டித்துறை ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
1978 இல் பிறந்த வீரமுத்துவேல், விழுப்புரத்தில் உள்ள இரயில்வே பள்ளியில் பள்ளிப் படிப்பையும், பின்னர், அங்குள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் டிப்ளமாவும் படித்தார்.
பின்னர், சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பி.இ. பட்டப் படிப்பை முடித்தார். திருச்சி மண்டல பொறியியல் கல்லூரியில் (ஆர்இசி) எம்.இ. படிப்பை முடித்தார்.
கடந்த 2004 இல் இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநராக கடந்த 2019 டிசம்பர் 9 ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
சந்திரயான்-2 திட்டப் பணியிலும் பணியாற்றிய வீரமுத்துவேல், அப்போது நாசாவுடன் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டார்.
சந்திரயான்-1 திட்ட இயக்குநராக பொள்ளாச்சியை அடுத்த கோதவாடியைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான்-2 திட்ட இயக்குநராக சென்னையைச் சேர்ந்த முத்தையா வனிதா ஆகியோர் பணியாற்றிய நிலையில், சந்திரயான்-3 திட்ட இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் பணியாற்றி இருக்கிறார்.
எனவே ஒட்டுமொத்த சந்திரயான் திட்டமும் தமிழ்நாட்டுக்கே சொந்தம் என்று தமிழ்மக்கள் பெருமை கொள்கின்றனர்.
