எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன? – மு.க.ஸ்டாலின் விளக்கம்

2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிப்பதற்காக, எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் செய்திருந்தனர்.

அந்தக் கூட்டத்தில், காங்கிரசு முன்னாள் தலைவர் இராகுல் காந்தி, காங்கிரசு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரசு தலைவர் சரத் பவார், பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முப்தி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டம் சுமார் 4 மணி நேரம் நடந்தது.

அந்த ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது…..

இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகப் பல்வேறு கட்சிகளின் கலந்தாலோசனைக் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக நானும் பொருளாளர் டி.ஆர்.பாலுவும் சென்றிருந்தோம். மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் உருவாக்குவதாக இந்தக் கூட்டம் அமைந்திருந்தது.

பாட்னா சென்றவுடன் லாலு பிரசாத் யாதவ் இல்லத்திற்குச் சென்று, அவருடைய உடல்நிலை விசாரித்து, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அது எனக்குப் பெரிய உற்சாகத்தைத் தந்தது.

ஒன்றிய அளவில் ஆட்சியில் இருக்கும் பாஜக ஆட்சியை வீழ்த்துவது என்பதை நோக்கமாகக் கொண்டதாக இந்தக் கூட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூட்டியிருந்தார்.

இந்தியாவின் ஜனநாயகத்தை – மக்களாட்சியை – மதச்சார்பின்மையை – பன்முகத்தன்மையை – ஒடுக்கப்பட்ட மக்களை – ஏழை எளிய மக்களைக் காப்பாற்ற வேண்டுமானால் பாஜக மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் அனைத்துக் கட்சிகளும் மிகத்தெளிவாக இருக்கிறோம். இதில் கடைசி வரை உறுதியாக இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டுச் சொன்னேன். 2023 ஜூன் 23 ஆம் தேதி கூடினார்கள், 2024 மே மாதம் வெற்றி பெற்றார்கள் என்பது மட்டும்தான் வரலாற்றில் பதிவாக வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் அழுத்தம் திருத்தமாகப் பேசினேன்.

எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ அந்தக் கட்சி தலைமையில் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம்.

கூட்டணியாக அமைக்க முடியவில்லை என்றால் தொகுதிப் பங்கீடுகளை மட்டும் செய்து கொள்ளலாம். அதுவும் முடியவில்லை என்றால் பொதுவேட்பாளர் அறிவித்துக் கொள்ளலாம், தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்பது சரியான நிலைப்பாடாக இருக்க முடியாது.

அரசியல் கட்சிகளுக்கு இடையே குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும். இதுபோன்று எழும் பிரச்னைகளைச் சரிசெய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று வரிசையாக அந்தக் கூட்டத்திலே பேசுகின்ற போது வலியுறுத்திச் சொல்லி இருக்கிறேன்.

கூட்டம் முடிந்த பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. நீங்களும், ஆம் ஆத்மி கட்சியும் கலந்து கொள்ளவில்லை. அதில் ஏதாவது காரணம் இருக்கிறதா? என்கிற கேள்விக்கு,

நன்றி சொல்லி முடிக்கும் வரை நான் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அதற்குப் பிறகு எனக்கு விமான நிலையம் செல்ல நேரமாகி விட்டது. மதிய உணவுக்குப் பிறகுதான் பத்திரிகையாளர் சந்திப்பு வைத்திருந்தார்கள். அதனால் மதிய உணவு கூட சாப்பிட முடியாமல், விமானத்தில் தான் சாப்பிட்டேன். அவர்களிடம் சொல்லி விட்டுத் தான் வந்தேன். வேறு எந்தக் காரணமும் இல்லை. அதுதான் உண்மை.

ஆம்ஆத்மி கட்சி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். டெல்லி அவசரச் சட்டம் தொடர்பாக காங்கிரசுக் கட்சி அவர்களது நிலைப்பாடு குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. நீங்கள் அது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

இரண்டாம் கட்ட கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என்று கூறியிருக்கிறார்கள். முதற்கட்ட கூட்டத்தில் முழுமையாக எதுவும் எட்டப்படவில்லையா? எதற்காக இரண்டாவது கூட்டம்? என்கிற கேள்விக்கு,

முதல் கூட்டத்தில் கூடினோம், என்ன செய்வது என்பது பற்றி முடிவு செய்திருக்கிறோம். போகப்போக அடுத்த கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்போகிறோம் என்பதைத் தெரிவிக்கிறோம்.

பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து..?

அது இன்னும் முடிவு செய்யவில்லை. நீங்கள் எல்லோரும் ஆர்வமாக இருப்பதைப் பார்த்தால் பிரதமர் வேட்பாளர் யார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தெரிகிறது.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Leave a Response