அன்னைத் தமிழ் அர்ச்சனையை கைவிட்டது ஏன்? – தெய்வத்தமிழ்ப்பேரவை கேள்வி

மதுரை கே.கே. நகர் – நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கத்தில் 09.04.2023 அன்று காலை பாவேந்தர் பாரதிதாசனின் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது “தமிழ் மந்திரப் பூசை – குடமுழுக்கு” சிறப்புக் கருத்தரங்கம்.

இக்கருத்தரங்கிற்கு, தேனி மாவட்டம் – குச்சனூர் இராசயோக சித்தர் பீட வடகுரு மடாதிபதி குச்சனூர் கிழார் தலைமை தாங்கிப் பேசினார். திண்டுக்கல் மாவட்டம் – வத்தலகுண்டு, பதினெண் சித்தர் மடம் பொன்னுசாமி வரவேற்புரையாற்றினார்.

இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் சித்தர் மூங்கிலடியார் (அரசயோகி கருவூறார் பதினெண் சித்தர் பீடம்), தமிழ் வேத ஆகமப் பாடசாலை திவ்யபாரதி சத்தியபாமா (சத்தியபாமா அறக்கட்டளை, மேச்சேரி, சேலம்), திருவில்லிப்புத்தூர் – தெய்வத்தமிழ்த் திருமுறை வழிபாட்டு இயக்கம் சிவ.வெ.மோகனசுந்தரம், திருநெல்வேலி ஆசீவகம், சமய நடுவ நிறுவனர் முனைவர் ஆசீவக சுடரொளி, தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் சிவ.வடிவேலன், வள்ளலார் பணியகம் ஒருங்கிணைப்பாளர் க.இராசமாணிக்கம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

மதுரை – தியாகராசர் கல்லூரி மேனாள் முதல்வர் – “சிவனிய அறிஞர்” முனைவர் – பேரா. மு.அருணகிரி, சிவகங்கை – மன்னர் துரைசிங்கம் கல்லூரி மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் – ”திருமால் நெறி அறிஞர்” முனைவர் – பேரா. ம.பெ.சீனிவாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நிறைவில், தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் நிறைவுரையாற்றினார்.

சிறப்புக் கருத்தரங்கில் ஐந்து தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டுத் திருக்கோயில் குடமுழுக்குகளில் தமிழைப் பயன்படுத்திட சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தும் கூட, அதனைச் செயல்படுத்த மறுக்கும் தமிழ்நாடு அரசுக்குக் கண்டனம் தெரிவித்த முதல் தீர்மானத்தில், அத்தீர்ப்பை இனியாவது தமிழ்நாடு அரசு முழுமையாகச் செயல்படுத்த வேண்டுமெனக் கோரியது. தமிழ் மந்திரப் பூசையில் சேர்க்க வேண்டிய உட்பிரிவுகளை விரைந்து முடிவு செய்ய வேண்டும், அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கிடத் தடையாக உள்ள தீர்ப்புகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உடனே மேல் முறையீடு செய்ய வேண்டும், அன்னைத் தமிழ் அர்ச்சனையை அரைகுறையாகக் கைவிடக் கூடாது, பயிற்சி பெற்று இறைப் பாடல்கள் பாடுவோர், இசைக் கலைஞர்கள் ஆகியோரைத் திருக்கோயில்களில் அமர்த்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் க.அருணபாரதி, தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் வே.பூ.இராமராசு, மதுரை த.தே.பே விசு. கரிகாலன், மகளிர் ஆயம் செயல்பாட்டாளர் தமிழ்மொழி, தெய்வத் தமிழ்ப் பேரவை புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் ச.இராசாராம் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். பலத்த கையொலியுடன் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேறின. இறுதியில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கதிர்நிலவன் நன்றி கூறினார்.

வழக்கறிஞர் கரூர் தமிழ் இராசேந்திரன், கோவை பேராசிரியர் சௌ.காமராசு, சுந்தரராசன் (வள்ளலார் பணியகம்) உள்ளிட்ட தெய்வத் தமிழ்ப் பேரவை பொறுப்பாளர்களும், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் அ.ஆனந்தன், துணைத் தலைவர் க.முருகன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் நா.வைகறை, க.விடுதலைச்சுடர், மு.தமிழ்மணி, பி.தென்னவன், மா.மணிமாறன், வே.க.இலக்குவன், மூ.த.கவித்துவன், பொதுக்குழு உறுப்பினர்கள் புளியங்குடி க.பாண்டியன், க.தீந்தமிழன், இலெ.இராமசாமி, மகளிர் ஆயம் மதுரை செயலாளர் இளமதி, கோவை சுவேதா இராவணச்சி உள்ளிட்ட பேரியக்கப் பொறுப்பாளர்களும், தமிழ்வழி ஆன்மிகச் செயல்பாட்டாளர்களும் நிகழ்வில் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

“தமிழ் மந்திரப் பூசை – குடமுழுக்கு” என்ற தலைப்பில், 09.04.2023 அன்று காலை மதுரையில் தெய்வத் தமிழ்ப் பேரவை நடத்திய சிறப்புக் கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்….

தீர்மானம் – 1
————————-
குடமுழுக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தத் தமிழ்நாடு அரசு மறுப்பதேன்?

தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கின்போது உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வழங்கிய தீர்ப்பின்படி, திருக்கோயில் குடமுழுக்குகளைத் தமிழ் – சமற்கிருதம் இரண்டிலும் சரிபாதியாக நடத்த வேண்டும். இது நீதிமன்றத் தீர்ப்பு மட்டுமல்ல, அப்போதைய அ.தி.மு.க. அரசு தனது பதில் மனுவில் முன்மொழிந்த தீர்வு. அதன் பிறகு அதே 2020 ஆம் ஆண்டு நடந்த கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கு வழக்கிலும், இத்தீர்ப்பை உறுதி செய்ததுடன் தமிழ் மந்திரம் ஓதி குடமுழுக்கு செய்வதையும் தமிழ் அர்ச்சனையையும் மேலும் தெளிவுபடுத்தியது உயர் நீதிமன்றம்.

ஆனால், தமிழ்நாடு அரசும் அதன் இந்து சமய அறநிலையத்துறையும் தஞ்சைப் பெருவுடையார் கோயில் தொடங்கி, எந்தக் குடமுழுக்கிலும் இத்தீர்ப்புகளை முழுமையாகச் செயல்படுத்தவில்லை.

தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கில் தொடர்ந்து நமது நேரடி வற்புறுத்தலால் அடையாளத்திற்கு ஓதுவார் ஒருவரைக் கோபுரத்தில் அனுமதித்துக் கலசத்தில் புனித நீரூற்றித் தமிழ் மந்திரம் சொல்லச் செய்தனர். அதேநிலை தான், கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கிலும்!

நம் தெய்வத் தமிழ்ப் பேரவையினர் தலையிட்டும் சமயபுரம், வடபழனி மற்றும் பழனி கோயில் குடமுழுக்குகளிலும் முற்றிலுமாகத் தமிழையும் தமிழரையும் புறக்கணித்தனர். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களின் நேரடிப் பார்வையில் நடந்த குடமுழுக்குகளிலும் முற்றிலுமாகத் தமிழ் மந்திரமும் தமிழ் அர்ச்சகரும் புறக்கணிக்கப்பட்டனர். எடுத்துக்காட்டு, சென்னை வடபழனி மற்றும் பழனி முருகன் கோயில்கள்!
மக்களிடம் தமிழ்வழிபாட்டு எழுச்சியும், கோரிக்கையும் வீச்சாக எழுந்தால் தான், ஆட்சியாளர்கள் அசைவார்கள். உயர் நீதிமன்றத் தீர்ப்புகளைச் செயல்படுத்தி, குடமுழுக்கில் மட்டுமின்றி, அன்றாடக் கருவறைப் பூசையிலும் குடமுழுக்குகளிலும் தமிழ்வழிபாட்டையும், தமிழ்க் குடமுழுக்கையும் செயல்படுத்துமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இச்சிறப்புக் கருத்தரங்கம் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் – 2
————————-
தமிழ் மந்திரப் பூசையில் சேர்க்க வேண்டிய உட்பிரிவுகளை விரைந்து முடிவு செய்க!

கரூர் பசுபதீசுவரர் கோயில் திருக்குடமுழுக்கு 2020ஆம் ஆண்டு நடந்தபோது, அதைத் தமிழில் நடத்தக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்குப் போட்டிருந்தோம். நம் தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் சித்தர் மூங்கிலடியார் அவர்கள் அவ்வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். அவ்வழக்கில் தமிழ்வழிக் குடமுழுக்கு, பாதியும் சமற்கிருத வழிக் குடமுழுக்கு பாதியும் நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் கிருபாகரன் – புகழேந்தி அமர்வு தீர்ப்பளித்தது.
அத்தீர்ப்பில் தமிழ்வழி மந்திரங்களில் எந்தெந்தப் பிரிவு தெய்வங்களுக்கான தமிழ் மந்திரங்களை மேலும் சேர்க்க வேண்டும் என்று உரிய ஆன்மிகச் சான்றோர்களிடம் கருத்துக் கேட்டு, அவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தனர்.
அதன்படி இந்து சமய அறநிலையத்துறை குன்றக்குடி அடிகளார் தலைமையில் அதற்கான ஆய்வுக்குழு அமைத்தது. அக்குழுவினர் கடந்த 7.3.2023 அன்று திருநெல்வேலியில் ஒரு திருமண மண்டபத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியது.
அப்போது, 50 பேருடன் புகுந்த பா.ச.க. மற்றும் இந்து முன்னணியினர் கூட்டத்தில் தகராறு செய்து, கருத்துக் கேட்புப் படிவங்களை வாங்கிக் கிழித்து எறிந்தனர். இதனால் அக்கூட்டம் கலைக்கப்பட்டது.
பா.ச.க. பரிவாரத்தினர் தங்களின் மாற்றுக் கருத்துகளை சனநாயக வழியில் தெரிவிக்க மாட்டார்கள். வன்முறை வழியைத் தான் பின்பற்றுவார்கள் என்பற்கு இக்கருத்துக் கேட்புக் கூட்டம் கலைக்கப்பட்டதும் ஒரு சான்று.
இவ்வாறான வன்முறையில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் தடுக்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை இல்லை. கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய குன்றக்குடி அடிகளார் கூட்டம் முடிந்து விட்டது என்று அறிவித்தார். அதன்பிறகு வேறெங்கும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தவில்லை.
மீண்டும் கருத்துக் கேட்புக் கூட்டங்களை தமிழ்நாட்டில் பரவலாக நடத்தி, தமிழ்வழி மந்திரப் பூசைகளில் சித்தர் வழிபாடு, வள்ளலார் வழிபாடு, ஆசீவக வழிபாடு போன்ற பல உட்பிரிவுகளையும் சேர்த்து, எல்லாப் பிரிவு தெய்வங்களுக்கும் கருவறைப் பூசை, வேள்விச் சாலை, கோபுரக் கலசம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் தமிழ் மந்திரப் பூசையைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும் என்று தெய்வத் தமிழ்ப் பேரவையின் மதுரைக் கருத்தரங்கம் தமிழ்நாடு அரசைக் கோருகிறது!

தீர்மானம் – 3
————————-
அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கிடத் தடையாக உள்ள தீர்ப்புகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உடனே மேல் முறையீடு செய்க!

தமிழ்நாட்டுத் திருக்கோயில்களின் கருவறையில் தமிழர்களை நுழைய விடாமல் ஆரிய பிராமணர்கள் கடைபிடித்து வரும் கருவறைத் தீண்டாமைக்கு ஆதரவளிக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் இரண்டு தீர்ப்புகளை அளித்துள்ளது. இது தமிழ் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 22.08.2022 அன்று, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி முனீசுவர் நாத் பண்டாரி – நீதிபதி என். மாலா அமர்வு, தி.மு.க. ஆட்சியில் பிராமணரல்லாத அர்ச்சகர்கள் 24 பேர் தமிழ்நாட்டுக் கோயில்களில் பணியமர்த்தப்பட்டதை எதிர்த்து ஆரியத்துவவாதிகள் தொடுத்த வழக்கில் தீர்ப்பளித்தனர். அத்தீர்ப்பில், தமிழ்நாட்டு ஆகமக் கோயில்களில், அந்தந்தக் கோயிலுக்குரிய ஆகமப்படியும், அந்தந்த ஆகமத்தைச் சேர்ந்த குடும்பங்களில் பிறந்தவர்களை மட்டுமே அர்ச்சகர்களாகப் பணி அமர்த்த வேண்டும் என்ற ஆரியத்தரப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்..
ஏற்கெனவே நீதிமன்றமும் தமிழ்நாடு அரசும் அமைத்த பல குழுக்கள், ஆகமக் கோயில்கள் குறித்து விரிவான ஆய்வறிக்கைகள் வழங்கிவிட்ட பிறகும்கூட, அதையெல்லாம் தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் முறைப்படி எடுத்து வைக்காத நிலையில், பண்டாரிநாத் அமர்வு புதிதாக ஆகமக் கோயில்கள் குறித்து புதிதாக ஓர் ஆய்வுக்குழுவை அமர்த்தியது. தமிழ்நாட்டில் அறநிலையத்துறையில் உள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களில் எது, எது – எந்தெந்த ஆகமப்படி கட்டப்பட்ட ஆகமக் கோயில் என்று கண்டறிந்து அறிக்கை தர, நீதிபதிகள் தமிழ்நாடு அரசைப் பணித்தனர்.
ஐந்து பேரைக் கொண்ட அந்த ஆய்வுக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் அவர்களையும், சமற்கிருத – பிராமணப் பிரிவுப் பிரதிநிதியாக – சென்னை சமற்கிருதக் கல்லூரியின் தலைமை நிர்வாகி என். கோபால்சாமி என்பவரையும், நீதிபதி முனீசுவர் நாத் பண்டாரி அமர்வு அமர்த்திவிட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உறுப்பினராக இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. இக்குழு ஆகமக் கோயில்கள் எவை எனக் கண்டறியும் பணியைத் தொடங்க வேண்டும்.
இக்குழு தமிழ்நாடு முழுதும் சுற்றி, ஆகமக்கோயில் எவை என்று கண்டறிந்து பட்டியல் இட எவ்வளவு காலம் ஆகுமோ, அவ்வளவு காலம் வரை புதிதாக அர்ச்சகர்களை இந்து சமய அறநிலையத்துறை அமர்த்த முடியாது. பழைய பிராமணப் பாரம்பரிய அர்ச்சகர்களே கோயில்களில் புதிய அர்ச்சகர்களாகவும் ஆவார்கள்.
அடுத்து, ஆகமக் கோயில் எவை என்று கண்டறியப்பட்ட பின் அக்கோயில்களில், பிராமணரல்லாத தமிழர்கள் அர்ச்சகர் ஆகவே முடியாது. ஏனெனில், குறிப்பிட்ட கோயிலுக்குரிய ஆகமக் குடும்பத்தில் பிறந்தவர் மட்டுமே அக்கோயிலில் அர்ச்சகராக முடியும் என்று இத்தீர்ப்பு கூறுகிறது.
ஆகமக் குடும்பத்தினர் என்பது ஆரிய ரிஷி கோத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தான் பொருந்தும். தமிழர்களுக்கு ரிஷி கோத்திரம் இல்லை.
மிகவும் பிரபலமாக உள்ள சிவநெறி, திருமால் நெறிக் கோயில்களை ஆகமக் கோயில்கள் என்று ஏற்கெனவே அவற்றில் ஆதிக்கம் செலுத்துவோர் பட்டியலிடுவர். அவற்றில் எல்லாம் எப்போதும் தகுதியுள்ள அனைத்துச் சாதித் தமிழர்கள் அர்ச்சகர்கள் ஆக முடியாது. பிரபலமான கோயில்கள் அனைத்திலும், இத்தீர்ப்பின்படி பிராமணர்களே அர்ச்சகர்களாக இருப்பார்கள். கருவறைக்குள் தீண்டத்தகாதவர்களாகவே தகுதியுள்ள தமிழ் ஆன்மிகர்கள் விலக்கப்படுவார்கள். இத்தீண்டாமை – இத்தீர்ப்பின்படி நிரந்தரமாகிவிடும்!
முனீசுவர நாத் பண்டாரி அமர்வு இவ்வாறு அளித்த இத்தீர்ப்பு ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் 1972இல் அளித்த சேசம்மாள் – எதிர் – தமிழ்நாடு அரசு தீர்ப்பிற்கும், 2015இல் நீதிபதி இரஞ்சன் கோகோய் அமர்வு அளித்த ஆதிசைவ சிவாச்சாரியார்கள் – எதிர் – தமிழ்நாடு அரசு தீர்ப்பிற்கும் எதிரானது. இவ்விரு தீர்ப்பிலும் எந்த அளவு ஆகமத்தை ஏற்க வேண்டும், எந்த அளவுக்கு மேல் அதை ஏற்கக் கூடாது என்றும் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 14, “இந்தியாவில் சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்பதையும், “சட்டப்பாதுகாப்பு அனைவர்க்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்பதையும் அரசு மறுக்க முடியாது” என்று கூறுகிறது. இந்த விதிக்கு முரணாக இந்தியாவில் ஏதாவது ஒரு ஆகமம் கூறினால் அதை ஏற்க வேண்டியதில்லை என்று மேற்படி உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் இரண்டும் உறுதி செய்துள்ளன. சாதி வேறுபாடு இல்லாமல் தகுதியுள்ள இந்துக்கள் அனைவருக்கும் அர்ச்சகராகும் உரிமை உண்டு என்று இத்தீர்ப்புகள் கூறியுள்ளன.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் இவ்வாறு இருக்கும்போது, முனீசுவரநாத் பண்டாரி அமர்வு ஆகமக் கோயிலில் ஆகமக் கோத்திரப்படி தான் அர்ச்சகராக வேண்டும் என்று கூறியதைத் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரமும் இத்தீர்ப்பை ஏற்றுக் கொண்டது பெரும் வினாவாக உள்ளது.
அடுத்து, திருச்சி குமாரவயலூர் முருகன் கோயில் நிர்வாகம் அமர்த்திய 2 பிராமணரல்லாத அர்ச்சகர்களின் பணி அமர்த்தலை இரத்து செய்யக்கோரி பிராமணர்கள் தொடுத்த வழக்கில், கடந்த 24.03.2023 அன்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் அவர்கள், பிராமணத்தரப்பின் கோரிக்கையை ஏற்று கருவறைத் தீண்டாமையை உறுதி செய்துள்ளார்.
ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய பல தீர்ப்புகளுக்கு எதிராகவும், பிறப்பு அடிப்படையில் அனைவரும் சமம் என்ற மனித சமத்துவதத்திற்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள இந்த இரு தீர்ப்புகளையும் எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும். அத்தீர்ப்புகளை செயல்படுத்தக் கூடாது என மதுரைக் கருத்தரங்கம் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் – 4
————————-
அன்னைத் தமிழ் அர்ச்சனையை அரைகுறையாகக் கைவிட்டது ஏன்?

கடந்த 2021 ஆகத்தில் சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் தொடங்கித் தமிழ்நாட்டின் 48 பெருங்கோயில்களில் அன்னைத் தமிழ் அர்ச்சனையைக் கருவறைப் பூசையில் செயல்படுத்துவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
முளையிலேயே அத்திட்டம் கருகிப் போவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி வைத்தது தமிழ்நாடு அரசு!
தமிழ்வழி அர்ச்சனை விரும்புவோர் அதற்குரிய அர்ச்சகர்களை, வெளியில் இருந்து தாங்களே அழைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அவர்களின் கைப்பேசி எண்களைக் கோயிலில் பதாகையில் பொறித்திருப்பதாகவும் அறிவித்தது தமிழ்நாடு அரசு,
இதன் மூலம் கருவறைப் பிராமண அர்ச்சகர்கள் கடைபிடித்து வரும் தமிழுக்கு எதிரான தீண்டாமைக் குற்றத்தை அவர்கள் தொடர்ந்து கடைபிடிக்க வழிவகுத்தது தமிழ்நாடு அரசு.
இப்பொழுது அந்த அரைகுறைத் திட்டமும் செயல்பாட்டில் இல்லை. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி போன்ற கட்சிகள், அன்னைத் தமிழ் அர்ச்சனையில் அக்கறை காட்டவில்லை. அக்கட்சிகளைச் சேர்ந்த மக்களைத் தமிழ் அர்ச்சனைக்கு ஊக்கப்படுது்தி வழி நடத்தாததால் வெளியிலிருந்து ஆள் அழைத்து வந்து தமிழ் மந்திர அர்ச்சனை செய்வது கிட்டத்தட்ட இல்லை என்ற நிலை உள்ளது.
கருவறையில் உள்ள அதே அர்ச்சகர்களே தமிழ் மந்திர அர்ச்சனை செய்ய ஏற்பாடு செய்திருக்க வேண்டும். தி.மு.க. – அ.தி.மு.க. போன்ற பெரிய கட்சிகளும், தமிழ் உணர்வு பேசி, தமிழ் மந்திரப் பூசையை ஆதரிக்கும் கட்சிகளும் அமைப்புகளும் தங்கள் தங்கள் கட்சிகளிலும் இயக்கங்களிலும் உள்ள வழிபாட்டாளர்களைத் தமிழ் அர்ச்சனை செய்யுமாறு வழிநடத்த வேண்டும்.
தமிழ் அர்ச்சனை செய்வோரை வெளியிலிருந்து அழைத்து வருவதை மாற்றி, இப்போது கருவறையில் உள்ள அர்ச்சகர்களே தமிழ் அர்ச்சனை செய்யத் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு இப்போதுள்ள அர்ச்சகர்கட்கு இந்து சமய அறநிலையத்துறை உள்ளகப் பயிற்சி கொடுக்க வேண்டும்.

தீர்மானம் – 5
————————-
பயிற்சி பெற்று இறைப் பாடல்கள் பாடுவோர், இசைக் கலைஞர்கள் ஆகியோரைத் திருக்கோயில்களில் அமர்த்த வேண்டும்!

தமிழ்நாடு கலைப் பண்பாட்டுத்துறையின் கீழ், மாவட்ட இசைப் பள்ளிகள் 17 இயங்கி வருகின்றன. இந்த இசைப் பள்ளியில் நாதசுரம், தவில், வயலின், பரதநாட்டியம் உள்ளிட்ட கலைப் படிப்புகள் இருக்கின்றன. இவை மூன்றாண்டுப் படிப்பும் பயிற்சியும் கொண்டவை.
இவற்றில் படித்துத் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றோர் பல்லாயிரக்கணக்கில் வேலையின்றித் துன்புறுகிறார்கள்.
திருக்கோயில்களிலும் உரியவாறு தெய்விகப் பாடல்கள் பாடுவோர், இசைக் கருவிகள் இயக்குவோர் இல்லை. தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 46,017 திருக்கோயில்கள் உள்ளன. இவற்றில் வாய்ப்பும் வசதியும் உள்ள திருக்கோயில்களில் அந்தந்தக் கோயில்களின் வழிபாட்டு முறைக்குரிய இசைப் பாடகர்களையும், இசைக் கலைஞர்களையும் உரிய மாத ஊதியத்தில் அமர்த்தும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு முழுவீச்சில் செயல்படுத்துமாறு இச்சிறப்புக் கருத்தரங்கம் கேட்டுக் கொள்கிறது.
இவர்கள் முழுநேர இசைக் கலைஞர்களாகவும், முழுமையான மாத ஊதியம் பெறுவோராகவும் அமர்த்தப்பட வேண்டும். இப்பொழுது சில கோயில்களில் உள்ள இசைக் கலைஞர்களுக்கு மிகமிக சிறு தொகையே வழங்கப்படுகிறது. இதை மாற்றி மேற்சொன்னவாறு புதிய முழுநேர வேலை முறையும் ஊதியமும் கொண்ட முழுநேர இசைக் கலைஞர்களை அமர்த்துமாறு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையைக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Response