
சிவகங்கை மாவட்டத்தில் பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க, சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை 11 மணியளவில் எடப்பாடி பழனிசாமி மதுரை சென்றார். அவர் விமானத்தில் இருந்து இறங்கி ஓடுதளத்தில் உள்ள இணைப்புப் பேருந்தில் ஏறி நுழைவாயிலை நோக்கி பயணித்தார்.
அப்போது அவருடன் பேருந்தில் வந்த ஒருவர் தன் கைபேசியில், எடப்பாடி பழனிசாமியை முகநூல் நேரலையில் பதிவிட்ட படி பேசியதாவது: ‘‘எல்லோரும் பார்த்துக்குங்க… எதிர்க்கட்சித் தலைவர், துரோகத்தின் அடையாளம் எடப்பாடியாருடன் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். திரு.எடப்பாடியார்…’’ என்றார். (உடனே எடப்பாடி பழனிசாமி கையசைக்கிறார்). தொடர்ந்து, ‘‘துரோகத்தின் அடையாளம், சின்னம்மாவிற்கு துரோகத்தை செய்தவர். 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தென்தமிழக மக்களுக்கு எதிராகக் கொடுத்தவர்…’’ என கூறிக்கொண்டு இருக்கும்போதே, எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு அதிகாரி பதிவிடுவதை தடுத்ததோடு, கைபேசியையும் தட்டி விடுகிறார்.
அதன்பின் பேருந்தைவிட்டு இறங்கிய அந்த நபரை, எடப்பாடியை வரவேற்கக் கூடியிருந்த அதிமுகவினர் சரமாரியாக அடித்து உதைத்தனர். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அவரை மீட்டு விசாரணை நடத்தினர்.
அவர், சிங்கப்பூரிலிருந்து சென்னை வழியாக மதுரை சென்றுள்ளார். இவர் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே எம்.வையாபுரிபட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் (42) என தெரிய வந்தது. எடப்பாடியுடன் பேருந்தில் ஏறி, கைபேசியில் காணொலி எடுத்து, ‘‘துரோகியுடன் பயணம் செய்கிறோம்’’ என்ற தலைப்பிட்டு முகநூலில் பதிவிட்டுள்ளார்.
தொடர் விசாரணையில் ராஜேஸ்வரன் அமமுக நிர்வாகி என்பது தெரிந்தது. அவர் மீது யாரும் புகார் அளிக்காததால் நேற்று மாலை 5.15 மணியளவில் விடுவிக்கப்பட்டார்.
மதுரை விமான நிலையத்தில் தாக்கப்பட்ட ராஜேஸ்வரன், அவனியாபுரம் காவல்துறையில் அளித்த புகாரில், ‘‘எடப்பாடியின் தூண்டுதலால், விமான நிலையத்திற்கு உள்ளே இருந்த சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் உள்பட 6 நபர்கள் என்னைக் கடுமையாகத் தாக்கினர். அதில் எனது வலது கை சுண்டு விரல் உடைந்து விட்டது. ‘இன்று தப்பிய உன்னை என்றாவது கொலை செய்வோம்’ என மிரட்டினர். எடப்பாடியின் பாதுகாப்பு அதிகாரி கிருஷ்ணன் எனது ரூ.1.25 இலட்சம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு விரட்டினார்’’ எனக் கூறியுள்ளார்.
இந்நிகழ்வால் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.


