மோடி, மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டார் – கி.வீரமணி கடும் தாக்கு

வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்குக் கதவு திறந்து விடுவதன் மூலம், போராடிப் பெற்ற இடஒதுக்கீட்டுக்கும் ஆபத்து, ‘மேக்கின் இந்தியா’ என்ற பிரதமர் கூறும் கருத்துக்கும் விரோதம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்…

உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் கல்வித் துறையில் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை உள்ளே கொண்டு வந்து விடும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார், கல்வியையும் உலகமயம், தாராளமயம், தனியார் மயக் கொள்கைகளை விரிவுப்படுத்திக் கொண்டு போக எண்ணுவது, நம் நாட்டு கல்வி வளர்ச்சிக்கும், சுதந்திரத்திற்கும், இறையாண்மைக்கும் கூட மிகப் பெரிய கேடாக முடியப் போகிறது என்பதால், தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தலைவர்கள் கலைஞர் முதற்கொண்டு பலரும் எதிர்ப்புக் குரல் கொடுத்துள்ளனர்.

இது மிகவும் தேவையான நேரத்தில் எழுந்த எதிர்ப்புக் குரல் ஆகும். இதனை மத்திய அரசு அலட்சியப்படுத் தினால், வருங்கால நம் சந்ததிகளின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் உலை வைப்பதாகும்.

கல்வி என்பது மத்திய அரசின் ஏகபோக அதிகாரத்தின் கீழ் மட்டும் இல்லை; பொதுப் பட்டியலில் உள்ள ஒரு முக்கியமான துறை ஆகும். ஆகவே மத்திய அரசு, மாநில அரசுகளையும் கண்டிப்பாகக் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். அப்படிச் செய்ததாகத் தெரியவில்லை.

மத்திய மனிதவளத் (கல்வி) துறையின் கீழ் பல்வேறு நிபுணர்கள் கொண்ட – அரசியல் சட்டப்படி அமைக்கப்பட்ட – பல்கலைக் கழக மான்யக்குழு, அகில இந்திய தொழில் நுட்பக்குழு, மருத்துவக் கவுன்சில் போன்ற பல அமைப்புகளின்கீழ், வெளிநாட்டுப் பல்கலைக் கழகம் வருமா? வராதே; அது ஒரு சட்ட முரண் அல்லவா?

மேக் இன் இந்தியா என்று பிரதமர் மோடி எங்கெங்கணும் ஒரு புறத்தில் முழக்கமிடுகிறார்; இன்னொரு புறத்தில் வெளிநாட்டுக் கல்வி அமைப்புகளுக்கு தாராளமயமாக்கி, கதவுகளை விரித்து திறந்து வைக்கும் ஏற்பாட்டையும் செய்கிறார் என்பது புரியாத விசித்திரங்களில் ஒன்றாக அல்லவா இருக்கிறது!

இடஒதுக்கீடு – என்பதன் மூலம் சமூக நீதியைப் பின் பற்றுவது, இந்திய அரசியல் சட்டத்தில் எல்லா இந்தியக் குடி மக்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையாகும்.

மாநில உரிமைகள் பறிப்பும் இதில் உள்ளதே! இப்படிப் பட்ட நிலையில், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில், இடஒதுக்கீடு பின்பற்றப்படுமா?

நமது அரசியல் சட்டம் அளித்துள்ள – போராடிப் பெற்ற உரிமைகளை குழிதோண்டிப் புதைப்பதை அனுமதிக்க முடியுமா?

எனவே மத்திய அரசு, அவசரக்கோலத்தில் அள்ளித் தெளித்தது என்பதுபோல உலக வர்த்தக அமைப்பு மாநாட்டில், ஒப்பந்தம் போட்டு இந்நாட்டு கோடானு கோடி, மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி விடக் கூடாது.

ஒத்த கருத்துள்ளவர்களைத் திரட்டிப் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், கழகம் அப்பணியை விரைந்து மேற்கொள்ளும்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
20.12.2015

Leave a Response