தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம் – குருதிக்கொடை செய்ய சீமான் அழைப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்த் தேசிய இனத்தின் முகமாக முகவரியாக விளங்கும் தன்னிகரில்லா தமிழ்த்தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 26 அன்று, உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ் உறவுகள் அந்நாளைச் சிறப்பாகக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் தமிழர் கட்சி சார்பாகச் சிறப்பான முன்னெடுப்புகளை எப்போதும் போலத் தொடங்கியிருக்கிறோம்.

தலைவர் பிறந்த நாளினை தமிழர் எழுச்சி நாளாகப் போற்றி, இன விடுதலைக்குச் சூளுரைக்க உறுதியேற்கும் விதமாக, வருகின்ற 26-11-2021 வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதிக்குட்பட்ட செங்குன்றம் நெல் மற்றும் அரிசி மொத்த வியாபாரிகள் சங்க திருமண மாளிகையில் தமிழர் எழுச்சி நாள் விழா கொண்டாடப்படவிருக்கின்றது.

அதேபோன்று, ஒவ்வொரு ஆண்டும் நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் பாசறை மற்றும் குருதிக்கொடைப் பாசறை இணைந்து, தமிழகமெங்கும் முன்னெடுத்துவரும் குருதிக்கொடை வழங்கும் முகாம்களில் இவ்வாண்டும் நாம் தமிழர் கட்சியின் உறவுகள் பெருந்திரளாக உணர்வெழுச்சியுடன் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கிறேன்.

தொற்றுநோய் பேரிடர் காலமான இக்காலத்தில் நாம் வழங்கும் குருதி, பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்களின் உயிர் காக்க உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலேயே அதிகளவில் குருதிக்கொடை தருகிற அரசியல் அமைப்பாக நாம் தமிழர் கட்சி தான் திகழ்கிறது என்பதை அங்கீகரிக்கும் விதமாக குருதிக்கொடை பெறுகின்ற தொண்டார்வ நிறுவனங்கள் நற்சான்றிதழ்கள் அளிக்கின்றன.

அவ்வகையில் தமிழ்த்தேசிய இன விடுதலைக்காக, குருதி சிந்தி காத்திட்ட மாவீரர்களின் மாசற்ற தலைவனின் பிறந்த நாளில்.. மக்கள் உயிர் காக்க நம் குருதியைக் கொடையாகத் தந்து நம் இனத்தின் மீதான பற்றுறுதியை இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்டிட வேண்டும் என உரிமையோடு அழைக்கின்றேன்.

குறிப்பு: தங்கள் பகுதிகளில் குருதிக்கொடை முகாமை முன்னெடுத்து நடத்தும் பொறுப்பாளர்கள் முகாம் நடைபெறும் நாள், இடம், மாவட்டம், தொகுதி, பொறுப்பாளர் மற்றும் முகாம்களில் குருதிக்கொடை வழங்குபவர்களின் பெயர், வயது, குருதிப் பிரிவு மற்றும் தொடர்பு எண் உள்ளிட்ட தகவல்களை kuruthikodai@naamtamilar.org என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக தலைமை அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தவும்.

குருதிக்கொடைப் பாசறை சார்பாக குருதிக்கொடையாளர்களுக்கு வழங்கவேண்டிய ‘உயிர்நேய மாண்பாளர்’ சான்றிதழ்களை மொத்தமாகப் பெற்றுக்கொள்ள, முகாம்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பாளர்கள் கீழ்காணும் பொறுப்பாளர்களைத் தொடர்புகொள்ளவும். சான்றிதழ்கள் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

குருதிக்கொடை சான்றிதழ் அனுப்பும் பொறுப்பாளர்கள்:
சென்னை சுகுமார் – 9841186128
மணி – 8122540511
நித்தியானந்தம் – 8428862623

மேலும் தொடர்புக்கு: அரிமா மு.ப.செந்தில்நாதன் (+91-7667412345 / 8825413664)
குருதிக்கொடைப் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர்

மாவீரர் சிந்திய குருதி.. வெல்வது உறுதி.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response