தமிழ்க்கைதிகள் விடுதலை கோரும் போராட்டத்தில் முழு பங்கெடுத்த முஸ்லிம்கள்- சிங்கள அரசு கடும் அதிர்ச்சி

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அழைப்பு விடுக்கப்பட்ட முழு அடைப்பு போராட்டத்தினால், வடக்கு,கிழக்கு மாகாணங்கள் முற்றாகவே செயலிழந்து போயின.

நவம்பர் 13 அன்று காலை தொடக்கம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய எட்டு மாவட்டங்களிலும், தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் இந்த முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றிருக்கிறது.

நகரங்கள், கிராமங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், அரச தனியார் செயலகங்கள் அனைத்தும், மூடப்பட்டுள்ளதுடன், வீதிகள் வாகனப் போக்குவரத்துகளின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன.

இரு மாகாணங்களிலும் உள்ள தமிழ் முஸ்லிம் மக்கள், அரசியல் கைதிகளின் விடுதலைக்காக உணர்வு ரீதியாக இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்திருக்கின்றனர்.

காவல்துறையினரும், அதிரடிப்படையினரும் ஆங்காங்கே பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர் எனினும், எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி போராட்டம் நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தொடர்ச்சியாக மழையும் பெய்து கொண்டிருக்கும் நிலையில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் பெரும் பகுதி முற்றிலுமாக செயலிழந்து போன  இந்நிகழ்வு சிங்கள அரசுக்குக் கடும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியிருக்கிறதாம்.

Leave a Response