முதலமைச்சரான பின்பும் போராட்டம் – கறுப்புக்கொடி ஏந்தும் மு.க.ஸ்டாலின்

மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெற உள்ளது. வீடுகள், கட்சி அலுவலகங்கள் முன்பு கறுப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்கப்பட உள்ளது.

ஒன்றிய அரசு மக்கள் நலனுக்கு விரோதமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக, வேளாண் சட்டங்களை இரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, விலைவாசி உயர்வு, பொருளாதாரச் சீரழிவு, தனியார் மயமாக்கல், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பிகாசஸ் ஒட்டுக் கேட்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்தநிலையில், டெல்லியில் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி காணொலி மூலம் காங்கிரசு தலைவர் சோனியா காந்தி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் 19 கட்சிகள் பங்கேற்றன. அப்போது, ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, நாடு முழுவதும் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம் நடத்துவது உள்ளிட்ட 11 தீர்மானரங்கள் நிறைவேற்றப்பட்டன.

அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தி.மு.க. முழுமையாக ஆதரிக்கிறது என்று அந்தக் கூட்டத்தில் காணொலி மூலம் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து தி.மு.க தலைமையிலான அனைத்து கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு தங்களின் இல்லங்களின் முன் கறுப்பக்கொடி ஏந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இந்தநிலையில், ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் தங்களின் இல்லங்களின் முன்பாக கறுப்புக்கொடி ஏந்திபோராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இப்போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தி.க., காங்கிரசு, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய கட்சிகள் பங்கேற்கின்றன.

முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தின் முன்பாக காலை 10 மணிக்கு போராட்டத்தில் ஈடுபடுகிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதேபோல், காங்கிரசு தலைவர் கே.எஸ்.அழகிரி சத்தியமூர்த்தி பவன் முன்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தி.நகரில் உள்ள அவரது கட்சி அலுவலத்தின் முன்பாகவும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தின் முன்பாகவும், திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி பெரியார் திடலிலும், தமிழக அமைச்சர்கள் பசுமைவழிச்சாலையில் உள்ள அவர்களது இல்லங்களிலும் கறுப்புக் கொடி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

போராட்டத்தின் போது, மூன்று வேளாண் சட்டங்களை இரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்வது, விலைவாசி உயர்வு, பொருளாதாரச் சீரழிவு, தனியார் மயமாக்கல், வேலை இல்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பிகாசஸ் ஒட்டுக் கேட்பு உள்ளிட்ட ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்ப உள்ளனர்.

Leave a Response