எஸ்.பி.வேலுமணி தொடர்பான இடங்களில் சோதனை – சி.வி.சண்முகத்துக்கும் சிக்கல்?

சென்னை, கோவை, காஞ்சிபுரம், திண்டுக்கல் ஆகிய ஊர்களில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. கோவையில் 35 இடங்களிலும் சென்னையில் 15 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல்லில் தலா 1 இடத்தில் இலஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்தது.

நேற்று காலை 6 மணியிலிருந்து மாலைவரை நடைபெற்ற சோதனைக்குப் பிறகு இலஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீடு உட்பட 60 இடங்களில் நடந்த ரெய்டில் மொத்தமாக 13,08,500 ரூபாயும், 2 கோடிக்கான நிலையான வைப்புத்தொகை ஆவணமும், மேலும் சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று கூறப்பட்டிருந்தது.

சோதனை நடந்த அதேநேரத்தில் சென்னையில் சட்டம்ன்ற உறுப்பினர்கள் விடுதியில் இருந்த எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணையும் நடைபெற்றது.

அப்போது அதிமுகவினர் பலர் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதிக்குள் நுழைய முயன்றனர். அவர்களைக் காவல்துறை தடுத்து நிறுத்தியது. அப்படி வந்த அதிமுகவினரில் முக்கியமானவர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.

அவர் பதறிக்கொண்டு ஓடிவரக் காரணம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

எஸ்.பி.வேலுமணியின் ஏற்பாட்டில் நியூஸ் என்கிற தொலைக்காட்சி நடந்துவருகிறது. அதை மந்தாரோ நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் என்கிற தனியார் நிறுவனம் நடத்துகிறது.

மந்தாரோ நெட்வொர்க் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் டாக்டர் விவேக் அன்பரசன். இவர், கோவை பகுதியில் நல்லறம் அறக்கட்டளை என்கிற பெயரில் டிரஸ்ட் நடத்தும் எஸ்.பி.அன்பரசனின் மகன். அன்பரசன், எஸ்.பி.வேலுமணியின் உடன்பிறந்த அண்ணன். இவரது மகன் தான் டாக்டர் விவேக்.

எஸ்.பி.வேலுமணியின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும், அவர் தொடர்புடைய உறவினர் மற்றும் நண்பர்களுடைய இடங்களிலும் நடந்த சோதனையைத் தொடர்ந்து அடுத்து நியூஸ் ஜே அலுவலகத்திலும் சோதனை நடக்கலாம் என்றும், அவ்வாறு நியூஸ் ஜே அலுவலகத்தில் சோதனை நடந்தால் அதில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்குச் சிக்கல் வரும் என்கிறார்கள். ஏனெனில், மந்தாரோ நெட்வொர்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருப்பவர் சி.வி.சண்முகத்தின் சகோதரர் ராதாகிருஷ்ணன் என்பதுதானாம்.

Leave a Response