கவிக்கோ அப்துல்ரகுமான் நினைவாக கவிக்கோ விருது வழங்கப்பட்டுவருகிறது. 2019 ஆம் ஆண்டுக்கான இவ்விருது பாவலர் அறிவுமதிக்கு வழங்கப்பட்டது.
இவ்விருது வழங்கும் நிகழ்வு இணையம் மூலம் சூன் 5 ஆம் நாள் நடந்தது.
அப்போது, விருது பெற்று உரையாற்றிய பாவலர் அறிவுமதி, விருதுத் தொகை ஒரு இலட்சத்தை தமிழ்தாடு முதல்வரின் கொரோனா நிவாரணநிதிக்கு வழங்குவதாக அறிவித்தார்.
பொருளாதார நிலையில் பின்தங்கி இருந்தாலும் கிடைத்த பரிசை நிவாரணநிதிக்கு வழங்கியதால் அவருக்குப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
துபாயைச் சேர்ந்த மறைந்த கவிஞர் அப்துல்ஜப்பாரின் மகனும் துபாய் ஆசியாநெட் வானொலியின் தமிழ் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஆசிப் மீரான் எழுதியிருப்பதாவது…..
“வருமானம் போனாலும் தன்மானம் போகக் கூடாது” என்ற இலட்சியத்தோடு, தமிழ்த் திரையிசைப் பாடல்களில் ஆங்கிலம் கலக்க மாட்டேனென்ற உறுதியோடு இருந்தவர் அண்ணன் அறிவுமதி அவர்கள்
அண்ணன் அறிவுமதி துபாய் வந்திருந்தபோது அவரை வானொலிக்காக நேர்முகம் கண்டேன். அதுதான் என் முதல் நேர்முகமும் கூட.
சென்னை செல்கையிலெல்லாம் அவரது ஹபிபுல்லா அலுவலகத்தில் அவரைச் சந்திக்காமல் நான் இருந்ததில்லை. அவரைச் சந்திக்க வரும் இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் எல்லோரிடமும் ‘தம்பி துபாயிலிருந்து வந்திருக்காரு. ஜப்பார் ஐயாவோட மகன்’ என்று அறிமுகப்படுத்தி வைப்பார். தனது புத்தக சேகரங்களிலிருந்து கைநிறையப் புத்தகங்களை அள்ளித்தந்து வாசிக்கச் சொல்வார். அப்படி அவர் தந்த புத்தகங்களில் ஒன்றுதான் ஜெயமோகனின் “காடு”
முதன்முறை அவர் துபாய் வந்திருந்தபோது எட்டு பேர் தங்கியிருக்கும் ஓர் அறையில்தான் தங்க வைக்கப்பட்டிருந்தார். தானொரு திரைப்படப் பாடலாசிரியர் என்ற எந்தப் பாசாங்குகளுமின்றி, “என்னடா தம்பி, மூட்டைங்க கூடத்தான் வாழுறீங்க போல?!” என்று மூட்டைக்கடியைக் கூட இலகுவாகப் புன்முறுவலோடு ஏற்றுக் கொண்ட மிகப்பெரிய மனதிற்குச் சொந்தக்காரர் அண்ணன் அறிவுமதி.
அப்போதும் தன் தம்பிகளின் அயலக வாழ்வு குறித்த வேதனைகளைத்தான் அவர் பெரிதாகக் கருதினார்.
இவ்வளவு நீட்டி முழக்கி அறிவுமதி அண்ணனைப் பற்றிச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. சமீபத்தில் அவருக்குக் “கவிக்கோ விருது” வழங்கப்பட்டது. விருதோடு சேர்ந்து ஒரு லட்ச ரூபாய் பணமும்.
இப்போது அவர் திரைப்படத்திற்குப் பாடல்கள் எழுதுவதில்லை. குறிப்பிட்டுச் சொல்லும்படியாக வேறு வருமானங்களும் இல்லை. இந்த நிலையிலும் கூட “இந்தப் பணம் என் குடும்பத்தினருக்கு இரு மாதச் செலவுக்கு உதவக்கூடும். ஆனால் இன்று தமிழ்நாடே பெருந்தொற்றால் தத்தளிக்கும் வேளையில் இந்தப் பணம் என் தமிழ் மக்களுக்கு உதவுவதுதான் பொருத்தமாக இருக்கும்” என்று சொல்லி மொத்தப் பணத்தையும் முதலமைச்சரின் கொரோனோ நிவாரண நிதிக்கு வழங்கி விட்டார் அண்ணன் அறிவுமதி
“ஆணவம்தான். வேறு வழியில்லை” என்று வழிமுட்டிப் போனவர்களுக்கு நடுவில், ‘அன்பு ஒன்றே அகிலத்துக்கான வழி’ என்று தன் செயலால் உரக்கச் சொல்லி யிருக்கும் அண்ணன் அறிவுமதியை எண்ணி நெகிழ்கிறேன்.
அவரது அன்புத்தம்பிகளில் ஒருவனாகப் பெருமிதம் கொண்டு நிறைகிறது இதயம். நெடுநாள் நிறைவாக வாழுங்கள் அண்ணன் அறிவுமதி அவர்களே!!
ஆரத் தழுவிக்கொள்கிறேன் உங்களை. அன்பும் பிரியங்களும் முத்தங்களும் கூடவே நெகிழ்ந்து இற்று விழும் இந்தக் கண்ணீருமாக!!
இவ்வாறு அவர் புகந்துரைத்திருக்கிறார்.