எந்தப் பொத்தானை அழுத்தினாலும் பாசகவுக்கு ஓட்டு – மேற்குவங்க முதல்கட்டத் தேர்தலில் பரபரப்பு

மேற்கு வங்கம், அசாம், தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் பல்வேறு கட்டங்களாக ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இவற்றில், 126 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகவும் 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறுகிறது. இவ்விரு மாநிலத்திலும், முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. அசாமில் 47 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

மேற்கு வங்கத்தைப் பொருத்தவரை, ஆளும் திரிணாமுல் காங்கிரசுக் கட்சி, பொதுவுடைமைக்கட்சி காங்கிரசுக் கூட்டணி, பாசக ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. அசாமில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள பாசகவும், ஆட்சியை மீண்டும் பிடிக்கும் முனைப்பில் காங்கிரசும் நேருக்கு நேர் மோதுகின்றன.

நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்காளர்கள், வாக்களிக்கச் செல்லும் முன்பாக கிருமிநாசினி வழங்கப்பட்டது. அனைவரும் முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கு வங்க மாநிலத்தில் மாலை 6 மணிக்கு 79.79 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. அதே போல, அசாமில் காலை 11 மணி நிலவரப்படி, 24.48 ஆக இருந்த வாக்குப்பதிவு சதவீதம் மாலை 6 மணிக்கு 72 விழுக்காடாகப் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று வாக்குப்பதிவு நடந்துகொண்டிருக்கும்போதே, திரிணாமுல் காங்கிரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், ‘‘எந்தச் சின்னத்தில் வாக்களித்தாலும், தாமரைச் சின்னத்தில் வாக்களித்தாக அடையாளச் சீட்டில் பதிவாகியுள்ளது. பாசக முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது. இதுமட்டுமின்றி முதல்கட்டமாக தேர்தல் ஆணையம் தெரிவித்த வாக்குப்பதிவு விவரங்களை திடீரென மாற்றி அறிவித்து விட்டது. ஏதோ பெரிய அளவில் முறைகேடு நடப்பதால் உடனடியாகத் தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பதிவிடப்பட்டது.

இதுகுறித்து திரிணாமுல் காங்கிரசுத் தலைவர்கள் டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்து புகாரும் அளித்துள்ளனர்.

இதனால் ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.

Leave a Response