திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.

தமிழகத்தில் இரண்டு பெரும் கூட்டணிகளாக இருப்பது திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி. பிப்ரவரி 27 ஆம் தேதி அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், மார்ச் 1 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலாயத்தில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், திமுக உடன் இரு கட்சிகளுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகைதீன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இதைத்தொடர்ந்து, திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மமக தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

அதைத் தொடர்ந்து இன்று (மார்ச் 4) திமுக கூட்டணியிலுள்ள விடுதலைச்சிறுத்தைகள் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது.

அதன்பின் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்….

நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களும் இன்று (4.3.2021) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் ஆறு சட்டமன்றத் தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response