தொகுதிகள் குறைவு – பாமகவில் அதிருப்தி

தமிழக சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும் இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று முன் தினம் அறிவித்தது.

இதனை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி, தேர்தல் பரப்புரை, வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளை தீவிரமுடன் தொடங்கி உள்ளன.

தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. இடையே சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதன் முடிவில், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். எந்தெந்தத் தொகுதிகள் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.

35 அல்லது நாற்பது தொகுதிகள் வேண்டும் என்று கேட்ட பாமகவுக்கு 23 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிடம் 27 தொகுதிகள் வாங்கிய கட்சி பாமக. திமுகவிடம் 31 தொகுதிகள் பெற்ற கட்சி பாமக! ஆனால், தற்போது வெறும் 23 தொகுதிகள் பெற்றுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் வன்னியர்களுக்கு 10.5% குறைத்து அளித்ததால் நாங்கள் சட்டப்பேரவை தொகுதி எண்ணிக்கையை குறைத்துள்ளோம். 40 ஆண்டுகால போராட்டம் எங்களுக்கு நல்ல முடிவு வந்துள்ளது அதனால் எங்கள் எண்ணிக்கையை குறைத்துள்ளோம். ஆனாலும் நாங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம் என்று அன்புமணி ராமதாசு தெரிவித்துள்ளார்.

அவர் இப்படிச் சொன்னாலும் 23 தொகுதிகள் மட்டுமே எனும்போது பலருக்குப் போட்டியிடும் வாய்ப்பு இருக்காது என்பதால் பாமகவில் அதிருபதி நிலவுகிறது.

Leave a Response