போகிற இடமெல்லாம் சசிகலா பற்றி பாசகவினர் பேசுவது ஏன்?

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவர் வந்ததிலிருந்து யாரையும் சந்திக்கவில்லை, எதுவும் பேசவுமில்லை.அதேசமயம், அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரிய சசிகலா தொடர்ந்த வழக்கை உடனே விசாரிக்க சிவில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக கூட்டணிக் கட்சியான பாசகவினர் எங்கு போனாலும் சசிகலா பற்றியே கருத்து சொல்லிவருகின்றனர்.

பாசக மூத்த தலைவர் இல.கணேசன் திருப்பூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

தமிழக மக்கள் சசிகலாவை வரவேற்கவில்லை. அமமுக கட்சியினர் மட்டுமே வரவேற்றனர். அதிமுக- அமமுகபிரச்சினை குறித்து வேறு கட்சிகள் கருத்து தெரிவிக்க முடியாது.

என்று கூறினார்.

பட்டுக்கோட்டையில் பா.ச.க தேசியப் பொதுச்செயலாளர் ரவி கூறியதாவது…

தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக தலைமையில் பா.ச.க கூட்டணி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் மூத்த தலைவர்கள். சசிகலாவின் பலமும், பலவீனமும் அவர்களுக்குத் தெரியும். எனவே, அமமுக கூட்டணி குறித்து அதிமுக தலைமைதான் முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுகவுக்குள் சசிகலா வந்தால்தான் அக்கட்சி முழுமையான பலம் பெறும் என்று பாசக கருதுவதாகவும் அதனால் தேர்தலுக்கு முன்பாக சசிகலாவை அதிமுகவுக்குள் கொண்டுவந்துவிட அவர்கள் முயல்வதாகவும் சொல்லப்படுகிறது. அதன் வெளிப்பாடாகத்தான் போகிற இடங்களிலெல்லாம் அவரைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.

Leave a Response