அடுத்தடுத்து நடந்த 3 முக்கிய நிகழ்வுகள் – புதுச்சேரி பரபரப்பு

புதுச்சேரியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 15 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரசுக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. திமுக மற்றும் சுயேச்சை ஆதரவும் அந்த ஆட்சிக்கு உள்ளது.

அண்மையில், கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட பாகூர் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு பதவி பறிக்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து அமைச்சராக இருந்த நமச்சிவாயம், அவரது ஆதரவாளர் தீப்பாய்ந்தான் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினர். அதன்பின் பாசகவில் இணைந்தனர்.

இந்நிலையில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து முதல்வருக்குக் கடிதம் கொடுத்திருந்த மல்லாடி கிருஷ்ணாராவ், நேற்று முன்தினம் தனது ஏனாம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகருக்கு திடீரென கடிதம் அனுப்பினார்.

அவரைத் தொடர்ந்து காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமாரும் நேற்று சபாநாயகர் சிவக்கொழுந்துவை அவரது வீட்டில் நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதை சட்டசபை ஆய்வுக்குழுவுக்கு சபாநாயகர் அனுப்பினார். பின்னர் ராஜினாமா ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் மல்லாடி கிருஷ்ணாராவிடம் ராஜினாமா குறித்து செல்போனில் தொடர்பு கொண்டு சபாநாயகர் விசாரித்தார். பின்னர் காணொலியில் அவர் பேசி பதிவு செய்ததை தொடர்ந்து அவரது ராஜினாமாவும் ஏற்கப்பட்டது.

நாராயணசாமி தலைமையிலான காங்கிரசு அரசுக்கு இன்னும் 3 மாதம் பதவிக் காலம் உள்ளது. அதற்குள், அமைச்சர் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணராவ், ஜான்குமார் ஆகிய 4 பேர் அடுத்தது ராஜினாமா செய்துள்ளது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து காங்கிரசு உறுப்பினர்களின் பலம் 10 ஆகக் குறைந்தது.

அதேவேளையில், திமுக 3, ஒரு சுயேச்சை ஆதரவுடன் ஆளுங்கட்சியின் பலம் 14 ஆக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் வரிசையில் என்.ஆர். காங்கிரஸ்-7, அதிமுக-4, நியமன உறுப்பினர்கள் 3 (பாசக) என மொத்தம் 14 ஆக உள்ளது.

இரண்டு அணிகளும் சமபலத்தில் இருக்கின்றன. இதனால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் சூழல்.

இந்நிலையில் காங்கிரசு மேலிடப்பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ், சஞ்சய் தத், ஆகியோர், முதல்வர் நாராயணசாமி, துணை சபாநாயகர் பாலன், அமைச்சர் கந்தசாமி,சட்டமன்ற உறுப்பினர்கள் அனந்தராமன், ஜெயமூர்த்தி மற்றும் காங்கிரசுக் கட்சித் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

காங்கிரசு தலைமையிலான கூட்டணிக்குப் பெரும்பான்மை இருக்கிறது.சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நியாயமானதல்ல. எதிர்க்கட்சிகளின் பலத்தை முதலில் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எங்களுடைய கூட்டணி பலமாக இருக்கிறது. பெரும்பான்மையும் இருக்கிறது. எந்தளவுக்கு இந்திய அரசியலமைப்பு சட்ட விதிமுறைகள் இருக்கிறதோ, அதற்கு உட்பட்டு நாங்கள் செயல்படுவோம். பலப்பரீட்சைக்குத் தயாராக இருக்கிறோம். எதிர்க்கட்சிகள் பதவி விலகக் கோரிக்கை வைக்கலாம், ஆனால் சட்டப்படிதான் நடக்க முடியும் என்றார்.

பதவி விலக நாராயணசாமி மறுத்துள்ள நிலையில் ஆளுநர் மற்றும் சபாநாயகரைச் சந்தித்து முறையிட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி தலைமையில் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் தலைமையில், அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தனியாக ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து புதுச்சேரி பாசக தலைவர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரும் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், என்.ஆர்.காங்கிரசுக் கட்சித் தலைவர் ரங்கசாமி சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஆளும் காங்கிரசு அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. எனவே, ஆளுவதற்குத் தகுதியில்லை. தானாக முன்வந்து பதவி விலக வேண்டும். இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று முதல்வரும் பதவி விலக வேண்டும்’’ என்று தெரிவித்தார். ‘நீங்கள் ஆட்சி அமைக்க உரிமை கோருவீர்களா?’ எனக் கேட்டதற்கு, ‘‘முதலில் காங்கிரசு பதவி விலகட்டும். அதன்பிறகு எதிர்க்கட்சிகள் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்’’ என்று பதில் அளித்தார்.

இந்த பரபரப்பான சூழலில் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்றிரவு திடீரென நீக்கினார்.

தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை புதுச்சேரி ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார் என்று குடியரசுத்தலைவர் அறிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கிரண்பேடி சர்ச்சைகளின் நாயகியாக வலம் வந்தார். கிரண்பேடியின் தன்னிச்சையான ஆய்வு, அதிகாரிகளை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து ஆலோசனைக் கூட்டம், உத்தரவு என கிரண்பேடி போட்டி அரசாங்கம் நடத்தியதால், ஆளுநர் மற்றும் முதல்வர் இடையே அதிகார மோதல் வெடித்தது.

இதைத்தொடர்ந்து ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் ஆகியோர் 39 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து ஆளுநர் மாளிகை முன் தொடர் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் மக்கள் நலத் திட்டங்களை தடுப்பதாலும், கட்டாய தலைக்கவசச் சட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த உத்தரவிட்டதால் பாசகவுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படுகிறது என கூறி கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி பாசகவினர் 5 முறை உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாசக தலைவர் நட்டா ஆகியோருக்குக் கடிதம் அனுப்பினர்.

அண்மையில் அமித்ஷாவை நேரில் சந்தித்த பாசகவினர் கிரண்பேடி விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு ஏற்படும் எனத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கிரண்பேடி மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காங்கிரசு ஆட்சி பெரும்பான்மை இழந்தது, பதவி விலக முதல்வர் நாராயணசாமி மறுப்பு, ஆளுநர் கிரண்பேடி மாற்றம் என்று அடுத்தடுத்த திருப்பங்களால் புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Response