எரிபொருள் எரிவாயு விலை கடும் உயர்வு – சீமான் கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மத்தியில் ஆளும் பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையினால் பணவீக்கம், தொழில் முடக்கம் ஏற்பட்டு விலைவாசி கடுமையாக உயர்ந்து மக்கள் தத்தளித்து வரும் நிலையில் தற்போது எரிபொருள் மற்றும் எரிவாயு உருளை விலையைக் வரலாறு காணாத வகையில் கடுமையாக உயர்த்தியிருப்பது நாட்டு மக்களை மேலும் வறுமையின் பிடியில் தள்ளி வாட்டிவதைக்கும் கொடுஞ்செயலாகும்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்க எவ்வித நடவடிக்கையையும் முடுக்கிவிடாத மத்திய அரசு, மக்கள் தலை மீது சுமையை ஏற்றி வைப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. கொரோனா ஊரடங்கினால் தொழில்கள் யாவும் முடங்கியதால் வேலையின்மை அதிகரித்து, அடித்தட்டு, நடுத்தர வர்க்கம் வருவாய் ஈட்ட வழியேதுமில்லாது அவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிப் பரிதவித்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தினால் ஏற்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வு நாட்டு மக்களை மேலும் இன்னலுக்கு ஆளாக்கும்.

எரிபொருள் மற்றும் எரிவாயு விலையைக் கண்மூடித்தனமாக அதிகரிப்பதென்பது மக்கள் நலனுக்குப் புறம்பான அரசபயங்கரவாதமாகும். ஏற்கனவே, சுங்கக்கட்டணக் கொள்ளையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மட்டுமின்றி, சரக்கு வாகன உரிமையாளர்களையும் இது வெகுவாகப் பாதிக்கும். சுமையை ஏற்றிச்செல்லும் பொருள்களின் வாடகைச் செலவு உயர்ந்து விற்பனைச்சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கவே இது வழிவகுக்கும்.

இதனால், நடுத்தர, ஏழை மக்கள் மேலும் மேலும் துன்பத் துயரத்திற்கு ஆளாவார்கள். இது போதாதென்று பாஸ்ட் டேக் என்ற புதிய சுங்கவரி முறையை அவசரகதியில் கொண்டுவந்து, அதைப் பெறாத வாகனங்களுக்கு இருமடங்கு சுங்கக்கட்டணம் என்று பகற்கொள்ளையில் ஈடுபட்டுள்ளது மத்திய அரசு.

கடந்த ஆண்டு பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பலமடங்கு குறைந்து 15 டாலராக விற்றபோது அதற்கேற்ப எரிபொருள் விலையைக் குறைக்காமல் பெட்ரோலிய பெருநிறுவனங்கள் கொள்ளை இலாபம் அடிக்க உடந்தையாக இருந்து கள்ள மௌனம் காத்த மத்திய அரசு, தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி எரிபொருள் மற்றும் எரிவாயு விலையை உயர்த்தி இருப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. இது அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயர்ந்து மக்களின் வாங்கும் திறனை முற்றாக அழித்து, அவர்களை மிக மோசமாகப் பாதிப்படையச் செய்யும்.

ஒவ்வொரு நாளும் சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்றவாறு எரிபொருள் விலையின் ஏற்ற, இறக்கங்களை எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்று பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை காங்கிரசு அரசும், டீசல் விலை நிர்ணய உரிமையைப் பாஜக அரசும் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்குக் கையளித்தன. ஆனால், கச்சா எண்ணெய் விலை உயரும்போது மக்களின் தலையில் கட்டும் எண்ணெய் நிறுவனங்கள் , விலை குறையும்போது நியாயமாக மக்களுக்குச் சேரவேண்டிய விலைக்குறைப்பைச் செய்யாமல், அந்த இலாபத்தைத் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்வதும் மற்றுமொரு பகற்கொள்ளையாகும்.

இவற்றைக் கண்காணித்துக் கட்டுப்படுத்த வேண்டிய மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்களின் வரம்பற்றக் கொள்ளையைக் கைக்கட்டி வேடிக்கை பார்ப்பதோடு, பதவியேற்ற நாளிலிருந்து பலமடங்கு கலால் வரியை உயர்த்தியுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசும், மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசும் கடந்த பத்து ஆண்டுகளில் மூன்று முறை கலால் வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தியதே தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயரக்காரணமாகும்.

ஆகவே, உயர்த்தப்பட்ட எரிவாயு மற்றும் எரிபொருள் விலையை மத்திய அரசு உடனடியாகக் குறைக்க வேண்டும் எனவும், எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து எரிபொருள் விலைநிர்ணய அதிகாரத்தைத் மீளப்பெறுவதோடு, சுங்க கட்டணம் என்ற பெயரில் நடைபெறும் அங்கீகரிக்கப்பட்ட வழிப்பறியையும் உடனடியாகக் கைவிட வேண்டுமெனவும் மத்திய அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response