பிப்ரவரி 7 இல் சென்னை வருகிறார் சசிகலா – அடுத்தடுத்த திட்டங்களை அறிவித்த தினகரன்

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பின் சனவரி மாதம் 27 ஆம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அதற்கு முன்னதாகவே சனவரி 20 ஆம் தேதி பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனவரி 31 ஆம் தேதி சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள தேவனஹல்லி அருகே ஒரு பண்ணை வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

சசிகலா எப்போது தமிழகம் வருவார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் அக்கட்சியின் நிர்வாகி திருமண விழாவில் கலந்து கொள்ள நேற்று மதுரை சென்றார்.

இன்று காலை அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்து பரப்புரை வாகனத்தின் மூலம் மதுரையில் நெல் பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து திருமண மண்டபத்திற்குச் சென்றார்.

திருமண விழா முடிந்த பின்னர், திருமண மேடையில் டிடிவி தினகரன் பேசியதாவது…..

பெங்களூருவில் தங்கியிருக்கும் சசிகலா வரும் 7 ஆம் தேதி தமிழகம் வருகிறார். உண்மையான தொண்டர்கள், விஸ்வாசத்தின் பக்கம் உள்ளார்கள் சசிகலா பக்கம் இருக்கிறார்கள்.

சசிகலா தலைமையில் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைப்போம்.

ஜெயலலிதா ஆட்சியை அமைக்க, அதிமுகவை மீட்டெடுக்க ஒற்றுமையுடன் செயல்படுவோம்.

மேலும், சசிகலா தமிழகம் வருவதால் பலரும் அச்சத்தில் உள்ளனர். சசிகலா விடுதலையான நிலையில் ஜெயலலிதா நினைவிடம் பணி நிறைவு பெறாமல் அவசர அவசரமாகத் திறக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

அதன்பின் ட்விட்டரில் அவர் இட்டுள்ள பதிவு….

தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள், வருகிற 7.2.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்திற்கு வருகிறார்கள். தமிழக எல்லையில் இருந்து சென்னை வருகிற வரை வழி நெடுக அவர்களுக்கு அளிக்கப்படுகிற வரவேற்பை, பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எந்தவித இடையூறும் இன்றி அமைத்துக்கொள்ள வேண்டும்.

கொரோனா கால வழிமுறைகளைப் பின்பற்றி, சமூக இடைவெளியைக் கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து, தியாகத்தலைவி சின்னம்மா அவர்களுக்கும் உங்கள் அன்புச் சகோதரனாகிய எனக்கும் எவ்வித அவப்பெயரும் ஏற்படா வண்ணம் கழக உடன்பிறப்புகள் பங்கேற்றிட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக்காத்த இயக்கத்தை மீட்டெடுத்திடவும் அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்திடவும் வரும் தேர்தலில் தீயசக்தியான திமுகவை தலையெடுக்கவிடாமல் செய்திடவும் அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களாகிய நாம்அனைவரும் ஒற்றுமையோடு இருந்து செயல்படுவோம்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Response