மம்தாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காங்கிரசு ஆதரவு

கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவு அரங்கில் நேற்று நேதாஜி சுபாஷ்சந்திரபோஷின் 125 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் தினகர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

முதல்வர் மம்தா பானர்ஜி பேசவரும்போது, பார்வையாளர்கள் பகுதியில் இருந்து தொடர்ந்து, ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் எழுப்பப்பட்டது. இதனால் மம்தா பானர்ஜி பேசுவதில் இடையூறு ஏற்பட்டது.

அப்போது மம்தா பானர்ஜி பேசுைகயி்ல், “ அனைவருக்கும் ஒன்றைத் தெரிவிக்கிறேன். இது அரசு சார்ந்த நிகழ்ச்சி, அரசியல் கட்சி சார்ந்த நிகழ்ச்சி அல்ல. கண்ணியம் காக்கப்பட வேண்டும். ஒருவரை சிறப்பு விருந்தினராக அழைத்துவிட்டு, அவரை அவமானப்படுத்துவது சரியல்ல. நான் இந்தக் கூட்டத்தில் பேசப் போவதில்லை. ஜெய் பங்களா, ஜெய் ஹிந்த்” எனத் தெரிவித்து அமர்ந்துவிட்டார்.

மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு திரிணமூல் காங்கிரசுக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஓ பிரையன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “மம்தா பானர்ஜி மரியாதைக்கும், தகுதிக்கும் ஒப்பானவர். அவருக்கு யாரும் கண்ணியத்தைக் கற்பிக்க முடியாது. யாரையும் புனிதப்படுத்தவும் முடியாது. அங்கு என்ன நடந்தது என்பது குறித்து சிறிய வீடியோவை வெளியிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாகக் காங்கிரசுக் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கருத்துத் தெரிவித்துள்ளன.

காங்கிரசின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வெளியிட்ட அறிக்கையில்,

“சில கோஷங்களை எழுப்பி முதல்வர் பேச வரும்போது அவரை அவமதித்துள்ளார்கள்.ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் அரசு விழாவில் எழுப்பப்பட்டு, மம்தா பேசவரும்போது அவரை மட்டும் அவமானப்படுத்தவில்லை, முதல்வரையே அவமானப்படுத்தியுள்ளார்கள். ஒரு பெண்ணை பொதுவெளியில் அவமானப்படுத்தியுள்ளார்கள். அரசியல் ரீதியாக நான் எதிர்க்கட்சியாக இருந்தாலும் இதைக் கண்டிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிமான் போஸ் கூறுகையில், “மம்தாவுக்கு நடந்த சம்பவம் மாநிலத்துக்கே அவமானம். அரசு நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகளாக மாறாமல் இருக்க இனிமேல் முதல்வர் உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Response