புரெவி புயல் பயணம் தொடங்கியது – 21 மாவட்டங்களுக்கு மழை

வங்கக் கடலில் ‘புரெவி’ புயல் உருவாகியுள்ளது. அதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது…..

கடந்த மாதம் 28 ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாகவும், தொடர்ச்சியாக தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவெடுத்து புயலாக வலுப்பெற்று இருக்கிறது. இந்தப் புயலுக்கு ‘புரெவி’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்தப் புயல் திருகோணமலைக்குக் கிழக்கே தென்கிழக்கே 400 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. 2 ஆம் தேதி (இன்று) இலங்கை கடலோரப் பகுதியை அடைந்து, 3 ஆம் தேதி (நாளை) மன்னார் வளைகுடா பகுதியைக் கடந்து, 4 ஆம் தேதி (நாளை மறுதினம்) தென் தமிழகத்தில் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரையைக் கடக்க வாய்ப்பு இருக்கிறது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தென்காசி, இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், காஞ்சீபுரம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தெற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று வீசுவதால் மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு இந்த பகுதிகளுக்குச் செல்லவேண்டாம்.

3 ஆம் தேதி (நாளை) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசியில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

இந்தப் புயல் காரணமாக தென் மாவட்டங்களில் தான் பெரும்பாலான இடங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response