சங்க இலக்கியங்கள் கூட குமரியை குறிப்பிடும் அளவிற்கு மிகத் தொன்மையான தமிழர் நிலம் கன்னியாகுமரி ஆகும். இப்பகுதியை கேரளத்திடம் இருந்து தமிழ் முன்னோர்கள் பாடுபட்டு மீட்டனர். அப்படி பாடுபட்டு மீட்ட இப்பகுதி இப்பொது இந்தியின் கோரப் பிடியில் சிக்கி இருப்பதை பார்த்தால் மனம் வெம்புகிறது.
திரும்பிய பக்கம் எல்லாம் எங்கும் எதிலும் இந்தி மொழியே இங்கு ஆதிக்கம் செலுத்துகிறது. எல்லா வணிக நிறுவனங்களும் இந்திக்கு மட்டுமே முதல் இடம் தருகின்றன. வணிக பெயர் பலகைகளில் தமிழை காண்பது அரிதாகி உள்ளது. இந்திக்கே முதலிடம். சென்னை மாநகரம் ஆங்கிலத்திற்கு முன்னுரிமை கொடுத்து ஆங்கிலத்திற்கு அடிபணிந்தது போல குமரி நகரம் இந்திக்கு இப்போது அடிமையாகிக் கிடக்கிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக பெயர் பலகைகளும் தமிழ் மொழியில் பெரிதாக எழுதப்பட வேண்டும் , மற்ற மொழிகள் எல்லாம் தமிழுக்கு அடுத்தபடியாகத் இருக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தாலும், திராவிட அரசுகளின் அலட்சிய போக்கால் தமிழ் மொழி பின்னுக்கு தள்ளப்பட்டது. தமிழகத்தில் திராவிட ஆட்சி முடிவுக்கு வந்து தமிழர் ஆட்சி வந்தால் மட்டுமே தமிழ் மொழி தான் இழந்த இடத்தை மீண்டும் பெற முடியும்.
மேலும் கன்னியாகுமரி தொடர்ந்து இந்தி தேசிய கட்சி வேட்பாளரை தான் தேர்வு செய்கிறது. அதன் விளைவாக கன்னியாகுமரி ஒரு குட்டி இந்தியாவாக மாறியுள்ளதை நாம் பார்க்க முடிகிறது. தமிழகம் முழுவதும் இந்தி தேசிய கட்சி ஆட்சி செய்தால் தமிழ்நாடே இந்தி தேசமாக மாறும் என்பதிலும் ஐயம் இல்லை. கன்னியாகுமரியைதமிழர் நிலமாக மீட்டெடுக்க நாம் அனைவரும் உழைக்க வேண்டும். -இராச்குமார்பழனிசாமி
படங்கள் : கோகுல கிருட்டிணன்