இன்று தந்தை பெரியாரின் 142 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதை முன்வைத்து பேராசிரியர் சுப.வீரபாண்டியன் எழுதியுள்ள கட்டுரை……
இன்று காலை, தலித் முரசு சார்பில். தோழர்கள் புனித பாண்டியன், மருத்துவர் தாயப்பனால் தயாரிக்கப்பட்ட பெரியார் பிறந்தநாள் வாழ்த்து ஒன்றை வெளியிடும் பெருமையை எனக்கு அவர்கள் வழங்கினார். அந்த வாழ்த்தில் இப்படி எழுதப்பட்டிருந்தது.
ஈயம் ஊற்றப்பட்ட
காதுகளும்
அறுத்து எறியப்பட்ட
நாக்குகளும்
வெட்டி வீசப்பட்ட
தலைகளும்
ஒன்று கூடி
உரக்கப் பாடின
happy birthday to
PERIYAR
அத்தனை வரிகளும் தமிழில் எழுதப்பட்டிருக்க, கடைசி வரி மட்டும் ஆங்கிலத்தில் உள்ளது.
ஏன் இப்படி?
அண்மையில் இந்தி எதிர்ப்பு எழுத்துகளைத் தாங்கிய சட்டைகளைப் பலரும் அணிந்திருந்தனர். அவற்றில், “I am a தமிழ் பேசும் Indian” என்று ஆங்கிலமும், தமிழும் கலந்து எழுதியிருந்தனர். இன்னொரு சட்டையில் “தமிழ் engal uyir ” என்று எழுதப்பட்டிருந்தது.
ஏன் இப்படி?
ஒன்று தமிழில் எழுத வேண்டும் அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டும். இவ்வாறு இரண்டு மொழிகளையும் கலந்து கலந்து எழுதுவது எதற்காக? இது ஒரு நல்ல மரபில்லையே! அவ்வளவு அழகாய்த் தமிழில் எழுதத் தெரிந்தவர்களுக்குப் ‘பெரியாருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்று தமிழில் எழுதத் தெரியாதா? ‘எங்கள் உயிர்’ என்னும் தமிழ்ச் சொற்களை ஏன் ஆங்கில எழுத்துகளில் எழுத வேண்டும்? தமிழ்ச் சொற்களைத் தமிழ் எழுத்துகளில் எழுதுவதுதானே முறை!
இப்படித்தான் நாம் எண்ணுவோம். எனினும் இதற்குள் ஏதோ ஒன்று இருக்கிறது என்று தோன்றியது.
இது அப்படியே இருக்கட்டும்,. இன்னொரு வினா அல்லது குற்றச்சாற்றிற்கு விடை தேடிவிட்டு இதற்கு வருவோம்!
அய்யா பெரியார் தமிழ்ப்பற்று இல்லாதவர் என்று குறை கூறுகின்றனர். இதனை யாரும் கண்டுபிடிக்க வேண்டியதில்லை. அவரே சொல்லிவிட்டார். எனக்குத் தேசாபிமானமோ, பாஷாபிமானமோ கிடையாது’ என்பதுதானே அவர் கூற்று. பிறகு அவருக்கு என்ன அபிமானம்தான் உண்டு? ஒரே ஒரு அபிமானம்தான். அது மனிதாபிமானம்!
அவருக்குத் தமிழ்ப்பற்று இல்லை என்பது மட்டுமில்லை, அவர் ஓர் ஆங்கில மோகம் கொண்டவர், வீட்டில் வேலை செய்யும் மனிதர்களோடு கூட ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொல்லி இருக்கிறார் என்கின்றனர். அப்படிச் சொல்லி இருப்பது உண்மைதான். ஆனாலும், அதற்கு ஆங்கில மோகம்தான் காரணமா என்பதை அவர் வரலாற்றை அறிந்தவர்களாலதான் புரிந்து கொள்ள முடியும். அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்றும் நாம் சிந்திக்கலாம்.
தமிழர்கள் அனைவரும் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்று பெரியார் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். ஏன்?
அதனை அடியொற்றியே, அறிஞர் அண்ணாவும் தமிழ்நாடு முதமைச்சர் ஆன பின்பு, 23.01.1968 அன்று, சட்டமன்றத்தைக் கூட்டி, இருமொழிக் கொள்கையைச் சட்டமாக நிறைவேற்றினார். ஏன்? நமக்குத் தமிழ் மட்டும் போதாதா? எதற்காக இங்கே ஆங்கிலம்?
பெரியார் தமிழ் அறிந்தவர். அண்ணா தமிழால் வளர்ந்தவர். பிறகு ஏன் இருவரும் ஆங்கிலம் வேண்டும் என்று வாதாடினர்?
தாய்மொழிப் பற்று என்னும் கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்காமல், நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால், இருவரும் எவ்வளவு தொலைநோக்குப் பார்வை உடையவர்கள் என்பது புரியும். இது வெறும் மொழிச் சிக்கலன்று. இதற்குள், பொருளாதாரம், உலகத் தொடர்பு, அறிவியல் பார்வை எனப் பலவும் இருக்கின்றன.
சமூக வலைத்தளத்தில் “நான் ஆங்கிலம் படித்ததால், US வந்து, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுகிறேன். இந்தி படித்திருந்தால், UP சென்று, பாணி பூரிதான் விற்றிருக்க முடியும்” என்று அண்மையில் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதற்கு அமெரிக்கா போவது பெருமை என்றோ, உத்திரப்பிரதேசம் செல்வது சிறுமை என்றோ பொருள் கொள்ளக் கூடாது. அவ்வாறே, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவது உயர்வு என்றும், பாணி பூரி விற்பது தாழ்வு என்றும் கருதக் கூடாது. பொருளாதார முன்னேற்றத்திற்கு ஆங்கிலம்தான் பயன்பட்டுள்ளது என்பதும், இந்தி கற்றுப் பொருளியலிலும், வாழ்விலும் மேம்பாடு அடைய இயலாது என்பதும் இதன் உட்பொருள்.
ஆங்கிலத்தின் துணையோடு, வெளிநாடுகளுக்கு நம் பிள்ளைகள் போக முடிந்தது என்பது மட்டுமில்லை, இங்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஆங்கிலம்தான் பயன்படுகிறது. எப்படி என்கின்றீர்களா? இன்று நம் பிள்ளைகள் பலரும், கணிப்பொறி கற்று, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுகின்றார்களே, அவர்களில் மிகப் பலர், ‘அவுட்சோர்சிங்’ எனச் சொல்லப்படும், பிற நாட்டு வேலைகளை இங்கிருந்தே செய்யும் பணிகளில்தான் உள்ளனர். அது உற்பத்தித் துறையன்று, சேவை(service)த் துறை. அவர்களுக்கான வேலையை நாம் செய்து கொடுக்கிறோம், அவ்வளவுதான்! அதனால்தான், நம் பெண் குழந்தைகள் உள்படப பலரும், இரவில் கூட அலுவலகம் சென்று வேலை செய்கின்றனர், (நமக்கு இரவு என்றால், அமெரிக்காவிற்குப் பகல்). பெண்கள் வேலைக்குப் போகலாமா என்று நினைத்த சமூகம், இன்று இரவிலும் கூட வேலை செய்ய அனுமதிக்கிறது. பொருள் ஈட்ட வேண்டிய தேவையை யாராலும் மறுக்க இயலாது.
இந்த சேவைப் பனி மூலமே பெரும் பணம் இப்போது நம் நாட்டிற்கு வருகின்றது. அரசாங்கத்தின் புள்ளிவிவரப்படி சொல்ல வேண்டுமானால், 54.5% தகவல் தொழில்நுட்பத் துறை வருமானம், சேவைத் துறை சார்ந்ததாகவே உள்ளது.
இத்துறையில் பணியாற்ற, வெறும் கணிப்பொறி அறிவு மட்டும் போதாது. ஆங்கில அறிவும் வேண்டும். அதுவும், அமெரிக்கர்களின் ஆங்கில ஒலிப்பு முறையைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு ஆங்கில அறிவு வேண்டும். அதனைப் பெற்றிருக்கும் காரணத்தினால்தான், இந்தியாவிலேயே, தமிழகம் பல துறைகளில் முன்னேறி நிற்கிறது.
தமிழக முன்னேற்றத்திற்கு மட்டுமில்லை, இந்தியப் பொருளாதார முன்னேற்றத்திற்கே தமிழகம் உதவுகிறது. தமிழ்நாட்டிற்கு ஆங்கில அறிவு உதவுகிறது.
இதனை அன்றே தொலைநோக்குப் பார்வையுடன் கண்டறிந்தவர்கள்தாம் நம் அய்யா பெரியாரும், அறிஞர் அண்ணாவும்! அவர்கள் காலத்தில், கணிப்பொறியும் கிடையாது, அவுட் சோர்சிங் என்ற சொல்லும் கிடையாது. ஆனாலும், அவர்களின் ‘வருமுன்னர் காத்திட்ட’ அறிவு நமக்கு இன்று பயன்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன், குஜராத்தில் நடைபெற்ற ஒரு போராட்டம் அனைவருக்கும் நினைவிருக்கும். 2015 ஜூலையில், குஜராத்தில், பட்டேல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தங்களை இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று கோரி, ஒரு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2015 ஆகஸ்ட் 25 முதல் 28 வரை அங்கு வன்முறை தலைவிரித்து ஆடியது. எங்கு பார்த்தாலும் போர்க்கோலம்.
அப்போராட்டம் குறித்து, குஜராத்தின் புகழ் பெற்ற எழுத்தாளர் போலோபாய் பட்டேல் (Bholopai Patel ) ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அவர் சாகித்திய அகாதமி விருது பெற்றவர். 2008 இல் பத்மஸ்ரீ விருதும் பெற்றவர். அவர் சொன்னார், “எங்கள் சமூகம் (பட்டேல்) சமூக அங்கீகாரமும், பொருளாதார வசதியும் உள்ள சமூகம்தான். ஆனால், ஆங்கிலத்தைப் புறக்கணித்துவிட்டு, குஜாராத்தியும், இந்தியும் மட்டுமே கற்றுக்கொண்டதால், அறிவியல் முன்னேற்றத்தை எட்ட முடியவில்லை. இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் பெரிய வேலையும் கிடைக்கவில்லை. வணிகம் மட்டுமே எங்களைக் காப்பாற்றவில்லை”
பெரியாரும், அண்ணாவும் இல்லையென்றால் நம் நிலையம் இப்படித்தான் ஆகியிருக்கும்.
இப்போதைய எடுத்துக்காட்டு ஒன்றையும் சொல்கிறேன். இன்றைய கொரோனா ஊரடங்கில் கூடுதலாகப் பாதிக்கப்பட்டவர்கள், பீஹார் மக்கள்தான். அவர்களுக்கு இந்தி நன்றாகத் தெரியும். ஆனால் அது அவர்களைக் காப்பாற்றவில்லை. இந்தியா முழுவதும், கட்டிடப் பணிகளிலும், பிறவற்றிலும், கூலித் தொழிலாளர்களாகவே இருந்தனர். ஊரடங்கு வந்தபிறகு, தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பவும் வழியின்றி அந்தச் சகோதரர்கள் பட்ட பாட்டினை நாம் அறிவோம். பலர் நடந்தே ஊர் திரும்பினர். பாதியில் சிலர் சுருண்டு விழுந்து மடிந்தும் போயினர்.
இப்போது, ஹைதராபாத் மாநகரில் உள்ள, நூற்றாண்டு கண்ட, உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவரும், பட்டியலின மக்களுக்காக அன்றாடம் பாடுபட்டுவரும் பேராசிரியர் காஞ்ச அய்லய்யா (Kancha Iylaiah) ஆங்கில மொழியே தலித் மக்களை உயர்த்தும் என்று தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகின்றார்.
அவர் ஒரு படி மேலே சென்று, ஆங்கிலம் ஒரு பாடமாக மட்டுமின்றி, ஆங்கில வழிக் கல்வியே வேண்டும் என்றும், அதுதான், அங்குள்ள ஏழை எளிய தலித் மக்களின் எதிர்காலத்திற்கு உதவும் என்றும் வெளிப்படையாகக் கூறி வருகின்றார். தெலுங்கின் மீது பற்றுக் கொள்ளுங்கள், ஆனால் ஆங்கில வழியில் கற்றுக் கொள்ளுங்கள் என்பதே அவரின் கோட்பாடாக உள்ளது.
2019 நவம்பர் 27 அன்று நடைபெற்ற ஒரு பல்கலைக்கழகக் கருத்தரங்கில் உரையாற்றிய அவர், “தலித் மக்களின் வளமான எதிர்காலம் தொலைதூரக் கனவாகவே இருப்பதற்கு, ஆங்கிலக் கல்வியில் பின்தங்கியிருப்பதே காரணம், அதுவே பெரும் தடையாக உள்ளது” (The main barrier is the lack of English education, still a faraway dream for most Dalits) என்று குறிப்பிட்டுள்ளார்.
அங்குள்ள ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண், ஆங்கிலத்தைப் புறக்கணித்து, தெலுங்கு வழிக் கல்வியை வலியுறுத்தும் வரையில் தேர்தலில் வெற்றியே பெற முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.
பெரியார் பிறந்த நாளில் எழுதப்படும் இந்தக் கட்டுரை, ‘தமிழ்த் துரோகி’ என்னும் பட்டத்தை இலவசமாக எனக்கு வாங்கித் தரும் என்பதை என்னால் உணர முடிகிறது. ஆனாலும் குற்றமில்லை. சில உண்மைகளை வெளிப்படையாகச் சொல்லியே ஆகவேண்டும்.
ஆங்கிலத்தை ஆதரித்ததால், பெரியார் சந்திக்காத தாக்குதல்களா? ஒருமுறை மேடையில் அவர் பேசிக்கொண்டிருக்கும் போது ஒருவர் ஒரு துண்டுத தாளில் ஒரு வினாவை எழுதி அனுப்பினார். அந்த மேடையில் அண்ணாவும் இருந்தார். “நீங்கள் ஆங்கிலத்தை ஆதரித்தே பேசிக் கொண்டிருக்கின்றீர்களே, நீங்கள் ஆங்கிலேயனுக்கா பிறந்தீர்கள்?” என்பதே அந்த வினா.
அதற்கும் அய்யா பெரியார் பொறுமையாக விடை சொன்னார். “ஒருவர் யாருக்குப் பிறந்தவர் என்பது அவரவருடைய அம்மாவிற்குத்தான் தெரியும். எனக்கு மட்டுமில்லை, கேள்வி கேட்டவருக்கும் இது பொருந்தும். அது அவரவர் தனிப்பட்ட பிரச்சினை. அது குறித்துச் சந்தேகம் உள்ளவர்கள் தனித்தனியாக ஆராய்ச்சி செய்து கொள்ளலாம். இங்கு ஆங்கிலம் பற்றிய பொதுப் பிரச்சினையை நாம் பேசலாம். ஆங்கிலம் அந்நிய மொழிதான். ஆனால், அது நமக்குப் பயன்படுகின்ற மொழியாக. நம் முன்னேற்றத்திற்கு உதவுகின்ற மொழியாக உள்ளது. எனவே அதனைக் கற்று, அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறேன் நான்” என்கிறார் பெரியார்.
இதே கொச்சையான கேள்வியைத்தான், நம் காலத்தில், ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன், கவிதையில் கேட்டார். “தமிழா நீ பேசுவது தமிழா’ எனது தொடங்கும் பாடலில், “தலையில் இருப்பது ரிப்பனா, உனக்கு வெள்ளைக்காரன்தான் அப்பனா?” என்று கேட்டார். இவையெல்லாம் வெறும் உணர்ச்சி வயப்பட்ட சொற்கள். அறிவு வளர்ச்சிக்கும், பொருளியல் வளர்ச்சிக்கும் உதவாது. கவிஞர் காசி ஆனந்தனின் இந்தப் பாடலை நானே பலமுறை மேடைகளில் வியந்து பாராட்டிப் பேசியுள்ளேன். இப்போது அது தவறு என்று உணர்கின்றேன்.
..தமிழ்ப்பற்றில் நாம் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை. ஆனாலும், தாய்மொழி தமிழோடு சேர்த்து ஆங்கிலத்தையும் நாம் சரியாகவும், ஆழமாகவும் கற்றுக் கொள்ள வேண்டியது இன்றைய மிகப் பெரும் தேவைகளில் ஒன்றாகும். ஆங்கிலம் அந்நிய மொழி, இந்திதான் நம் நாட்டு மொழி என்று கூறும் பார்ப்பனர்கள், ஆங்கிலத்தைச் சரியாகக் கற்றுக் கொண்டதன் மூலமாகவே, ஆங்கிலேயர் ஆட்சியில், நிதி, நீதி, நிர்வாகம் ஆகிய மூன்று துறைகளிலும் கால் பதித்து நின்று, நம்மை அடிமைகள் ஆக்கினர்.
இப்போதும் அவர்கள் ஆங்கிலம் வேண்டாம் என்று சொல்வது, ‘உங்களுக்கு ஆங்கிலம் வேண்டாம்’ என்னும் பொருளில்தான்! ஆங்கிலம் படிக்காத பார்ப்பனர் வீட்டுப் பிள்ளைகளைப் பார்க்க முடியாது. சமஸ்கிருதத்தில் பேசிக்கொள்ளும் பார்ப்பனர்களையும் பார்க்க முடியாது. சங்கராச்சாரியர்களே தமக்குள் கூட சமஸ்கிருதத்தில் பேசிக் கொள்வதில்லை. அது வெறும் மந்திர மொழி! நாம் ஆங்கிலம் படித்து முன்னேறி விடுகின்றோம் என்னும் ஆதங்கத்தில்தான் அவர்கள் ஆங்கிலம் வேண்டாம் என்கின்றனர். ஆங்கிலம் படித்து நாம் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் அய்யாவும், அண்ணாவும் ஆங்கிலம் படி என்கின்றனர்.
தாய்மொழிப் பற்று என்னும் எண்ணத்திலோ, இந்திய தேசியப் பற்று என்னும் மாயையிலோ, தமிழையும், இந்தியையும் மட்டும் கற்றுக்கொண்டால் போதும் என்று நினைத்தால், நம் அடுத்த தலைமுறை வீழ்ந்து போகும்!
தாய்மொழியும், ஆங்கிலமும் சரியாகக் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு தேசிய இனமும் முன்னேறும். ஏன் ஆங்கிலம் என்று கேட்டுக்கொண்டிருப்பதில் பயனில்லை. ஆங்கிலத்தை நாம் தேர்ந்தெடுக்கவில்லை. வரலாற்றின் அடிப்படையில், ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி ஆங்கிலம் ஏற்கனவே நம்மைத் தேர்ந்தெடுத்துவிட்டது.
ஆங்கிலம் கண்டு நாம் மயங்கவில்லை. அடிமைத்தனத்தின் வெளிப்பாடாக இதனை எழுதவில்லை. ஆங்கிலத்திற்கு அடிமையாவது நம் நோக்கமில்லை. ஆங்கிலத்தைப் பயன்படுத்திக் கொண்டு தமிழர்கள் முன்னேற வேண்டும் என்பதுவே அய்யாவும், அண்ணாவும் சொன்ன வழி! அதுவே நாம் இன்று ஏற்றுக்கொள்ள வேண்டிய வழியும் கூட!
நம் தாய்மொழி தமிழ், நம் உணர்வில், உயிரில் கலந்த மொழி! அந்நிய மொழியானாலும், ஆங்கிலம் உலகத் தொடர்புக்கு, கூடுதல் அறிவியல் அறிவுக்கு உதவுகின்ற மொழி! இரண்டும் நமக்கு வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ளதைப் போல இந்தியா முழுவதும் இருமொழிக் கொள்கையை (தாய்மொழியும், ஆங்கிலமும்) நடைமுறைப்படுத்தினால் நாடு முன்னேறும். வடநாட்டில் உள்ளதைப் போல, மும்மொழிக் கொள்கையை இங்கும் நடைமுறைப்படுத்தினால் தமிழகமும் கெட்டழியும்!
இவற்றையெல்லாம் நெஞ்சில் நிறுத்தி,இருமொழிக் கொள்கையை வலியுறுத்தும் நோக்கில்தான், தலித் முரசின் happy birthday periyaar மற்றும் ‘தமிழ் engal uyir’ வரிகள் வடிவமைக்கப்பட்டிருக்குமோ!
ஆம் என்றே தோன்றுகிறது!