பணிந்தது அரசு பத்தாம் வகுப்புத் தேர்வு தள்ளிவைப்பு – புதிய அட்டவணை

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. அண்மையில் ஜூன் 1 ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

இதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அதைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் தீரஜ்குமார், பள்ளிக் கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன் மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் அனைத்து இயக்குநர்களும் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிவடைந்த பின்னர் அமைச்சர் செங்கோட்டையன்,திட்டமிட்டபடி 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் நடக்கும் என்று அறிவித்தார்.

இந்நிலையில் இன்று 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வைத் தள்ளி வைப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை நடைபெறுவதாக இருந்த பொதுத் தேர்வு, ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை நடைபெறும். ஓர் அறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.

ஜூன் 15 – தமிழ், மொழிப்பாடம்
ஜூன் 17 – ஆங்கிலம்
ஜூன் 19- கணிதம்
ஜூன் 22 – அறிவியல்
ஜூன் 24 – சமூக அறிவியல்

ஜூன் 25 – தொழில் பாடம்.

அதேபோல மார்ச் 24-ம் தேதி நடைபெறுவதாக இருந்த 12 ஆம் வகுப்பின் தேர்வு ஜூன் 18 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 9.5 இலட்சம் மாணவர்கள் 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response