கொரோனாவுக்கு 35 ஈழத்தமிழர்கள் பலி – சீமான் வேதனை

உலகத் தமிழர்களுக்காக சீமான் இன்று வெளீயிட்டுள்ள அறிக்கையில்….

உலகெங்கும் வாழும் தாய்த்தமிழீழ உறவுகளுக்கு என் அன்பு வணக்கம்.

கொரோனா என்னும் கொடிய நுண்ணுயிரி நோய்த்தொற்று உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருவதையும், அதனால், ஒட்டுமொத்த மனித இனமே ஒவ்வொரு நாளும் பெரும் சவாலை எதிர்கொண்டு வருவதையும் நாம் அறிவோம். தாய்த்தமிழகம் மட்டுமின்றி, ஈழத்தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் இந்தக் கொடிய நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ள செய்திகள் அனுதினமும் வந்தவண்ணம் உள்ளன. அவைகளைப் படிக்கும்போதெல்லாம் உள்ளம் கலங்கி நிற்கிறேன்.

நாம் தமிழர் பிரித்தானியாவை சார்ந்தவரும், தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் உறுதியுடன் துணை நின்றவருமான அன்புச் சகோதரி யாழினி அவர்கள் கடந்த 15.04.20 புதன்கிழமை அன்று இலண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார் என்ற செய்திகேட்டு பெருந்துயரமடைந்தேன்.

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பேருதவி செய்த சகோதரி யாழினி அதே கொரோனாவுக்குப் பலியானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.

நாம் தமிழர் கட்சி மீது பேரன்புகொண்டு நேசித்து, அதற்காகத் தொடர்ந்து களப்பணியாற்றியவர் சகோதரி யாழினி அவர்கள். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், பிரித்தானிய நாம் தமிழர் உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகம், ஈழத்தாயகத்தை விடவும் உலகின் பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் ஏறக்குறைய 35 பேர் இதுவரை கொரோனா நோய்த்தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி சொல்லொணாத் துயரத்தை அளிக்கிறது.

ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை நெடுங்காலமாக இழப்புகளை மட்டுமே சந்தித்து வந்த ஓர் இனத்திற்கு மற்றுமொரு பேரிடியாக அமைந்துள்ளது.

இழப்புகள் என்பது நமக்குப் புதிதில்லைதான். இருப்பினும், எந்த இன்னுயிரை காத்துக்கொள்வதற்காக ஊர், உறவு, உடைமை, நாடு என்று யாவற்றையும் துறந்து புலம்பெயர் தேசங்களில் ஏதிலிகளாக வாழத்துணிந்தோமோ, எந்த மக்களின் உயிரைக் காப்பதற்காக ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தார்களோ, ஆபத்தான பயணங்கள், நிராகரிப்புகள், காத்திருப்புகள் என்று வாழ்வதற்காக ஓர் இடம் தேடி உலகெங்கும் பயணப்பட்டோமோ அந்த விலைமதிப்பற்ற இன்னுயிரை ஒரு நச்சுத் தொற்றுக்கு இரையாகக் கொடுப்பதைத்தான் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

ஈழத்தாயக விடுதலைப் போராட்டங்களில் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களின் பங்களிப்புதான் கடந்த காலங்களில் பெரிதும் துணைநின்றது. இனி வரும் காலங்களிலும் துணைநிற்கப் போகிறது என்பதில் மாற்றுக்கருத்து இருக்கப்போவதில்லை.

இன்றைக்கும் ஈழத்தாய்நிலத்தில் தமிழர்கள் பாதிப்பிற்குள்ளாகும்போது அவர்களுக்கு ஆதரவாக எழும் உங்கள் ஒவ்வொருவரின் குரலும், உதவிகளும்தான் அவர்களைக் காத்து நிற்கும் வலிமைமிக்க கரங்கள்.

எனவே, புலம்பெயர் தமிழர்களின் உயிர்தான் ஈழத்தாயக விடுதலையின் பலம் என்பதை எனதருமை ஈழச் சொந்தங்கள் நன்கு உணர்ந்துகொள்ளவேண்டும். “நாடு அடைய, நாம் வாழ்தல் அவசியம்” என்ற பொறுப்புணர்வுடன் இந்தக் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கை உணர்வுடனும் தம்மைத் தாமே தற்காத்துக்கொள்ள வேண்டும் என்று உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல, வளைகுடா நாடுகள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்களும் அங்குள்ள அரசாங்கங்கள் கடைபிடிக்கக் கூறும் வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றித் தங்களைக் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இந்த இக்கட்டான நேரத்தில் நம்மை அரவணைத்து வாழ்வளித்த புலம்பெயர் தேசங்களான கனடா , ஆஸ்திரேலியா மற்றும் பிரித்தானிய, பிரான்சு, நார்வே, சுவீஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் கொரோனாவின் கொடிய தாக்குதலிலிருந்து மக்களைப் பாதுகாக்க மருத்துவராகவும், செவிலியராகவும், காவலராகவும், தூய்மைப் பணியாளராகவும், தன்னார்வலராகவும் பணிபுரியும் ஒவ்வொரு தமிழ் மகனுக்கும், மகளுக்கும் எம்முடைய புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் அர்ப்பணிப்புமிக்கத் தூய உள்ளத்துடன் கூடிய தன்னலமற்ற சேவை என்பது மிகுந்த போற்றுதலுக்குரியது; மகத்துவமானது; போராளிகளின் ஈகங்களுக்கு ஒப்பானது.

என் அன்புக்குரிய ஈழச்சொந்தங்களுக்கு சொல்லிக்கொள்ள விழைவது ஒன்றுதான், என்றும் பேரன்புடனும், பெரும் அக்கறையுடனும் உங்களோடு நான் இருக்கிறேன். துணிவோடு நாம் இதை எதிர்கொள்வோம். எத்தனையோ பேரிழப்புகளை எதிர்கொண்டு மீண்டுவந்த இந்த இனம், இந்தக் கொரோனா தாக்கத்திலிருந்தும் முழுமையாக விடுபடும் என்பதில் எந்த ஐயமும் வேண்டாம்.தேசியத் தலைவர் கற்றுத் தந்த துணிவோடும் நம்பிக்கையோடும் இருங்கள். நாம் மீண்டெழுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response