கேரளாவில் திரும்பும் இயல்புநிலை – மத்திய அரசு எதிர்ப்பால் சர்ச்சை

கேரளாவில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 7 மாவட்டங்களில் இன்று முதல் இயல்புநிலை திரும்புகிறது. உணவகங்கள், தனியார்வாகனங்கள் சில கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதிக்கப்பட உள்ளன.

இந்திய ஒன்றியத்திலேயே முதல் முதலில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது கேரளாவில்தான். தொடக்கத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் கேரளா முதலிடத்தில் இருந்தது. எனினும், பின்னர் புதிதாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களும் விரைவாகக் குணமடைந்து வருகின்றனர்.இந்நிலையில், நாடு தழுவிய ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்படுவதாக ஏப்ரல் 14 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதேநேரம் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் 20 ஆம் தேதிக்குப் பிறகு கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என்றும் அறிவித்தார்.

இதையடுத்து, கேரள அரசு அம்மாநிலத்தை சிவப்பு, ஆரஞ்சு ஏ, ஆரஞ்சு பி, பச்சை என 4 மண்டலங்களாகப் பிரித்தது. இதன்படி, பாதிப்பு குறைவான 3 மண்டலங்களில் கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான திட்டத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளதாக மாநில தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ் தெரிவித்துள்ளார்.

எனவே, அம்மாநிலத்தில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட உள்ளன. பச்சை மண்டலத்துக்குட்பட்ட கோட்டயம், இடுக்கி ஆகிய 2 மாவட்டங்களில் இன்று முதல் இயல்புநிலை திரும்பும். உணவகங்கள், துணிக் கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் வழக்கம்போல இயங்கலாம். இம்மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் ஒருவர் கூட இல்லை.

இதுபோல ஆரஞ்சு பி மண்டலத்துக்குட்பட்ட திருவணந்தபுரம், ஆலப்புழா, திருச்சூர், பாலக்காடு மற்றும் வயநாடு ஆகிய 5 மாவட்டங்களில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன.

இம்மாவட்டங்களில் உணவகங்கள் காலை 7 மணிமுதல் மாலை 7 மணி வரை சமூகஇடைவெளியைக் கடைபிடித்து இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளியில் செல்பவர்கள் முகக் கவசம் அணியவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் ஒற்றைப்படை பதிவெண் கொண்ட வாகனங்களும் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் இரட்டைப்படை பதிவெண் கொண்ட வாகனங்களும் இயங்க அனுமதிக்கப்படும். அவசர சேவையில் உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.

ஆரஞ்சு ஏ மண்டலத்தில் 24 ஆம் தேதிக்குப் பிறகு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் சிவப்பு மண்டலத்தில் இப்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

அதேநேரம், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் ஆகியவை மாநிலம் முழுவதும் மே 3 வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள அரசின் இந்த ஊரடங்குத் தளர்வு நடவடிக்கை,ஏப்ரல் 15 ஆம் தேதி பிறப்பித்த மத்திய அரசின் வழிகாட்டுதல் உத்தரவுகளை மீறுவது மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நீர்த்துப் போகச் செய்யக் கூடியது என்று கேரள அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.

ஊரடங்குத் தளர்வுகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது என்று கேரள தலைமைச்செயலர் சொல்லியிருக்கும் நிலையில் உள்துறை அமைச்சகத்தின் இந்தக்கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.