தமிழக ஆட்சியில் சசிகலாவின் செல்வாக்கு தொடருகிறது – ஐஏஎஸ் அதிகாரிகள் வட்டத்தில் பரபரப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்(டிஎன்பிஎஸ்சி) தலைவராக அருள்மொழி ஐஏஎஸ் இருந்தார். இவர் தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சியின் புதிய தலைவராக ஐஏஎஸ் அதிகாரி கா.பாலச்சந்திரனை நியமித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்ட பாலச்சந்திரன் உடனடியாக நேற்று சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றார். அவருக்கு டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

தொடர்ந்து அவர் செயலாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள், அதிகாரிகளுடன் ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். விரைவில் புதிய அட்டவணை வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு சம்பவம் நடைபெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கா.பாலச்சந்திரன் தஞ்சாவூரில் பிறந்தவர். தந்தை காசி அய்யா, தாயார் லட்சுமி. தந்தை வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை தஞ்சாவூரில் முடித்து பழநி துணை ஆட்சியராக 1986 ஆம் ஆண்டு பணிபுரியத் தொடங்கினார்.

1994 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் தமிழ்நாடு பிரிவில் நியமனம் செய்யப்பட்டார். 2000 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை தர்மபுரி, கன்னியாகுமரி, ஈரோடு, விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சித்தலைவராகப் பணிபுரிந்தார்.

சிறு சேமிப்புத் துறை, மாற்றுத் திறனாளிகள் துறையில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக விருது பெற்றார். சமூக நலத் துறை, வேளாண்மைத் துறை, உள்ளாட்சித் துறை, உணவு மற்றும் பாதுகாப்புத் துறை, கூட்டுறவுத் துறை, தொழில் துறை, காதி போர்டு, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம், தொழிலாளர் நலத் துறை ஆகிய துறைகளின் தலைவராகப் பணியாற்றியவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக வணிக வரி மற்றும் பதிவுத் துறையில் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார்.

கா.பாலச்சந்திரன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் நெருங்கிய உறவினர். இவர், வணிக வரித்துறை அதிகாரியாகப் பணியாற்றிய காலங்களில்தான், பத்திரப்பதிவுத்துறையில் பல்வேறு முறைகேடுகளில் சிக்கியவர்களுக்கு, தண்டனையை இரத்து செய்தல், இலஞ்ச ஒழிப்பு வழக்குகளில் சிக்கியவர்களுக்கு நல்ல பதவிகளை குறிப்பாக வசூல் கொழிக்கும் பணிகளை வாரி வழங்குதல் போன்ற முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன.

மேலும், பதிவுத்துறைத் தலைவராகக் கூடுதல் பொறுப்பு வகித்த நேரத்தில்தான் இந்த முறைகேடுகள் அதிக அளவில் நடந்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் நேரடியாக ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. கொரோனா விவகாரத்தால் வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் தொடர் விசாரணையில் உள்ளது.

இந்தநிலையில், குற்றச்சாட்டுகளில் சிக்கிய கா.பாலச்சந்திரன் வருகிற ஜூன் மாதம் ஓய்வு பெறுவதாக இருந்தது. இதனால் ஓய்வு பெறுவதற்கு இரண்டரை மாதம் உள்ள நிலையில், சசிகலாவின் உறவினருக்கு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது ஐஏஎஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் 62 வயதுவரை இந்தப் பணியில் இருப்பார். இதனால் அவர் மேலும் 2 ஆண்டுகள் இந்தப் பணியில் இருக்க வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

Leave a Response