ராகுல்காந்தி சொன்னதை செய்த மோடி

கொரோனா வைரஸுக்கு உலக அளவில் இதுவரை 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 4.72 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸால் 13 பேர் உயிரிழந்துள்ளா். 681 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸைத் தடுக்க மத்திய அரசு மிகப்பெரிய, அசாத்தியமான நடவடிக்கை எடுத்தால்தான் கட்டுப்படுத்த முடியும். இல்லாவிட்டால் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் என ராகுல் காந்தி கடந்த வாரத்தில் இருந்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

கொரோனா வைரஸுக்குப் பின் மிகப்பெரிய பொருளாதாரச் சீரழிவையும் இந்தியா எதிர்கொள்ளப் போகிறது. அதையும் சமாளிக்கும் வகையில் திட்டமிடல் அவசியம். ஏழைகளின் கைகளில் பணப் புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார்.

நாடு முழுவதும் லாக்-டவுன் செய்வதுதான் சிறந்த வழி. உடனடியாக அந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என காங்கிரசு மூத்த தலைவர் ப.சிதம்பரமும் வலியுறுத்தினார். மேலும், ப.சிதம்பரம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் 21 நாட்கள் ஊரடங்கில் மக்கள் கைகளில் பணம் இல்லாத சூழல் ஏற்படும். பொருளாரதாரச் சுணக்க நிலை உருவாகும். அதை மாற்ற 10 விதமான ஆலோசனைகளை வழங்கினார்.

ராகுல் காந்தியும், 21 நாட்கள் லாக்-டவுனில் ஏழை மக்களுக்கும், கூலித் தொழிலாளர்களுக்கும் உதவும் வகையில் நிதித்தொகுப்பை மத்திய அரசு வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார். அதன்படி மத்திய அரசு ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பில் நிதித்தொகுப்பை ஏழை, எளிய மக்களுக்காக அறிவித்ததது

மத்திய அரசின் ‘கிஷன் சம்மான் நிதி’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கும் திட்டத்தில் உடனடியாக 2000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000, குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைப் பெண்களுக்கு தலா ரூ.1000, ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு தலா ரூ.500 வழங்கப்படும் உள்ளிட்ட திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பை ராகுல் காந்தி வரவேற்றுள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மத்திய அரசு ஏழை மக்களுக்கு நிதித்தொகுப்பை அறிவித்துள்ளது. சரியான திசையில் செல்லும் முதல் நடவடிக்கையாகும். இந்த ஊரடங்கு உத்தரவால் முதியோர், பெண்கள், தொழிலாளர்கள், கூலித்தொழிலாளிகள், விவசாயிகள் ஆகியோர் பெரும் சிரமத்தைச் சந்திக்கிறார்கள். இவர்களுக்காக இந்தியா கடன்பட்டிருக்கிறது” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Leave a Response